ஆளுமை:நடராஜா, ரூபவதி
பெயர் | ரூபவதி |
தந்தை | சின்னத்துரை |
தாய் | இராசம்மா |
பிறப்பு | 1943.04.11 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நடராஜா, ரூபவதி (1943.04.11) யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரியில் பிறந்த நூலகர், இவரது தந்தை சின்னத்தம்பி; தாய் இராசம்மா. ஆரம்பக் கல்வியை நாவலப்பிட்டி கதிரோசன் தமிழ் பாடசாலையிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி பட்டம் பெற்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா நூலக விஞ்ஞானத்தையும் கற்றுள்ளார். கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகவியல் பகுதி நேர விரிவுரையாளராகவும் ரூபவதி நடராஜா கடமையாற்றியுள்ளார். யாழ்ப்பாண பொது நூலகத்தில் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதம நூலகராக இணைந்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சிறிது காலம் கொழும்பு பொது நூலகத்தின் தமிழ்ப்பிரிவில் உதவி நூலகராக இணைந்து சிறிது காலம் கடமையாற்றினார். மீண்டும் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகத்தில் பிரதம நூலகராக இணைந்துகொண்டார். 1981ஆம் ஆண்டு ஜுன் முதலாம் திகதி இலங்கை வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களாக எழுத்தப்பட்ட அந்த நாள் யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட போது இவரே யாழ் பொது நூலகத்தின் பிரதம நூலகராக இருந்ததை மிகவும் வேதனையுடன் பதிவிடுகிறார். யாழ் பொது நூலகத்தின் இவரது சேவைக்காலம் 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1987ஆம் ஆண்டு வரையிலாகும். யாழ் பொதுநூலகத்தின் எரிப்பிற்கு பின்னராக அது தொடர்பில் சில கட்டுரைகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிடும் ரூபவதி நடராஜா ஒரு வரலாற்று பதிவாக யாழ்பபாணப் பொது நூலகம் அன்றும் இன்றும் என்னும் தலைப்பிலான ஒரு ஆவணப்பதிவை நூலுருவில் கொண்டுவரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். மிக விரைவில் இந்நூலை வெளியிட எண்ணியுள்ளதாகத் தெரிவிக்கிறார். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரூபவதி நடராஜா கொழும்புத் தமிழ்ச்சங்க பிரதம நூலகராக கடமையாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பு மேற்படி பதிவு ரூபவதி நடராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.