ஆளுமை:துரைவீரசிங்கம், தம்பிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம்
தந்தை கதிரிப்பிள்ளை தம்பிப்பிள்ளை
தாய் ஐயம்பிள்ளை தெய்வானை
பிறப்பு 1946.03.22
இறப்பு 2018.03.31
ஊர் திருக்கோணமலை
வகை நடிகர், நாடக ஆசிரியர், கவிஞர், விமர்சகர், பல்குரல் பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், அரசியல் சிந்தனையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யாழ்ப்பாணம் பொலிகண்டியைச் சேர்ந்த கதிரிப்பிள்ளை தம்பிப்பிள்ளை மற்றும் திருகோணமலை சேர்ந்த ஐயம்பிள்ளை தெய்வானை ஆகியோரின் புதல்வனாக 1946 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 22ம் திகதி திருக்கோணமலையில் பிறந்த தம்பி தில்லைமுகிலன் எனும் புனைபெயரை கொண்ட தம்பிப்பிள்ளை துரைவீரசிங்கம் நடிகர், நாடக ஆசிரியர், கவிஞர், விமர்சகர், பல்குரல் பேச்சாளர், சிறுகதை எழுத்தாளர், அரசியல் சிந்தனையாளர் என 40 ஆண்டுகளுக்கு மேலாக கலை உலகில் பன்முகங்களுடன் பயணிக்கும் ஒரு ஆளுமை ஆவார்.

இவர் 1958 ஆம் ஆண்டு தனது 12 ஆம் வயதில் பொலிகண்டி கிராமத்தில் சுப்பிரமணியம் அண்ணாவியாரின் நாடகத்தில் அரச சபையில் ஆடல் பெண்ணாக முதல் முதலில் வேடமிட்டு நடித்தார். இவரது வாழ்நாள் கலை சேவையை கௌரவிக்கு முகமாக 2006 ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது. மேலும் பாடசாலை உளவள ஆற்றுப்படுத்தல், கல்வி, கலை இலக்கிய ஆர்வமூட்டல், ஆளுமை விருத்தி, தலைமைத்துவம் என பல தலைப்புகளை வளவாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார்.

இவர் நாகேஸ்வரி எனும் பெண்ணை திருமணம் முடித்து, இவருக்கு முகிலாதித்தன், அகில்மதி, மதுரமதி, வான்மதி என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

இவர் மேடை நாடக வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ஆவார். 100க்கும் மேற்பட்ட நாடகங்களை நடித்தும், மேடையேற்றியும் உள்ளார். குறிப்பாக நகைச்சுவை சார் நாடகங்களை மேடையேற்றுவதில் விசேடமானவர். இவரது சிந்தனை வட்டம் முற்போக்கு ரீதியாகவும், சமூக நாட்டம் கொண்டும் காணப்படும்.

இவர் என்னதான் முடிவு (1966), சறுக்கி விழுந்தார் சங்கடத்தார் (1967), ஊமை கண்ட கனவு (1967), அப்பு உதுதப்பு (1967), சமூகத்துரோகி (1968) ஆகிய நாடகங்களை கரையோர கலா மன்றத்தின் ஊடாகவும், தில்லை முகிலன் குழுவினர் மன்றத்தின் ஊடாக ஐயோ பாவம் (1969), ஊழல் (1981), மாமிக்கு மயக்கம் (1973), புதிய தலைமுறைகள் (1977), மக்கள் நாடக மன்றத்தின் ஊடாக சங்கிலியன் (1973), எங்கள் நாடக மன்றத்தின் ஊடாக பலவீனங்களின் பலி (1978), கேள்வி (1980), கலையா கொலையா (1981) ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

பல நாடகங்களை பாடசாலை மாணவர்களை கொண்டு நடித்து மேடையேற்றியுள்ளார். உயிரிழப்பு எனும் நாடகம் 1995 ஆம் ஆண்டு ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயம் மாணவர்களை கொண்டும், கணையாழி (1999) ஆம் ஆண்டு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் மாணவர்கள் ஊடாகவும், இருமனம் கந்தளாய் பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயம் ஊடாகவும், தடை (2001) மெதடிஸ்த பெண்கள் கல்லூரி ஊடாகவும், இதயம் மலரட்டும் (2001) உவர்மலை விவேகானந்தா கல்லூரி மாணவர்கள் ஊடாகவும் மேடையேற்றியுள்ளார்.

இவர் 31.03.2018 அன்று தனது ஆக்கங்களை தீயிட்டு, தன்னை தானே தீயில் மாய்த்து, அகால மரணம் அடைந்தார்.