ஆளுமை:தாக்சாயினி, பரமதேவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாக்ஷாயினி
தந்தை கோபாலசிங்கம்
தாய் யோகேஸ்வரி
பிறப்பு 1980.08.22
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர், கலைஞர், கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாக்சாஷாயினி, பரமதேவன் (1980.08.22) மட்டக்களப்பில் பிறந்த பெண் ஆளுமை. இவரது தந்தை நாடறிந்த எழுத்தாளரும் பன்னூல் படைப்பிலக்கியவாதியுமான கவிக்கோ வெல்லவூர்க் கோபால் (தேசியக் கலைஞர் எஸ்.கோபாலசிங்கம்) அவர்களின் கனிஷ்ட புதல்வியான இவர். தாய் யோகேஸ்வரி. கோபாலசிங்கம். கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான ப.பரமதேவன் அவர்களை மணம்முடித்த இவருக்கு ஒரு புதல்வியும் ஒரு புதல்வருமுள்ளனர்

தனது ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு – கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தர பாடசாலையிலும் பெற்றுக்கொண்ட பின்னர் நாட்டின் போர்க்காலச் சூழலில் 1998ல் தனது குடும்பத்தாருடன் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்தார். அங்கு திருச்சி பாரதிதாஸன் பல்கலைக்கழகத்துடன் இணைப்புற்ற கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் இணைந்துகொண்ட அவர் நடனத் துறையில் தனது பட்டப்படிப்பை மேற்கொள்ளலானார். தனது ஏழு வயது முதல் மட்டக்களப்பு பரத கலாலயா நிறுவனர் பரதசூடாமணி சுபித்திரா கிருபாகரனிடம் நடனம் பயின்ற தன்மையில் இது அவருக்கு சாத்தியமானது. அக்காலத்தில் வட இலங்கை சங்கீத சபையின் அனைத்துத் தரத்திலும் இவர் முதல்பிரிவில் சித்திபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஈழத்து பெண் ஆளுமைகளில் சிறந்த நடனக் கலைஞராகவும் வளர்ந்துவரும் படைப்பிலக்கியவாதியாகவும் தன்னை நிலை நிறுத்திக்கொண்டிருப்பவர்தான் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையானர் கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன்.

தாக்சாயினி பரமதேவன் அவர்கள் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் பரத நாட்டியத்தை முதன்மைப் பாடமாகக்கொண்டு இளம் நுண்கலைமாணி (Bachelor of Fine Arts) மற்றும் முது நுண்கலைமாணி (Master of Fine Arts) பட்டப்படிப்பை ஏழாண்டுகள் பயின்று அவற்றில் முதல் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். அத்தோடு இரண்டாண்டு பகுதிநேரக் கற்கையாக மோகினியாட்டத்தினைப் பயின்று அதிலும் முதல்வகுப்புச் சான்றிதழ் பெற்றார். கூடவே குச்சிப்புடி, ஒடிசி போன்ற நடனங்களையும் பயிலும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத்தது. இவர் தனது கலாநிதிப் (PhD) பட்டத்திற்கான ஆய்வுக் கற்கைநெறியை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ‘பரதநாட்டியமும் கண்டிய நடனமும் ஒரு ஒப்பீட்டு ஆய்வு’ எனும் தலைப்பில் மேற்கொண்டு சிறப்புச் சான்றிதழ் பெற்றார். அத்தோடு கண்டிய நடனம் தொடர்பிலும் அதன் அடிப்படைத்தன்மைகள் குறித்து விரிவாக கற்றறிந்துமுள்ளார். இவரது பரதநாட்டிய அரங்கேற்றம் மற்றும் மோகினிநாட்டிய அரங்கேற்றம் இரண்டுமே திருச்சி கலைக்காவிரி நுண்கலை அரங்கில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தனது பள்ளிக் கல்விக்காலத்திலும் பின்னர் தமிழகம், இலங்கையிலும் பல்வேறு நடன நிழ்வுகளிலும் பங்குகொண்டிருந்தார்.

நாட்டிய நிகழ்வுகள்:

கலாநிதி தாக்சாயினி பாடசாலைக் காலத்திலேயே கலை இலக்கியததில் ஈடுபட்டு வந்தார். பாடசாலை நிகழ்வுகள் , மேடைநிகழ்வுகளில் அவர் சிறு பராயம்முதலே பங்குகொண்டிருந்தார். தமிழகத்தில் பயின்ற காலத்தில் பல நடன நிகழ்வுகள் ஊடாக அவரது ஆற்றல்கள் வெளிப்படலாயிற்று. தமிழகத்திலும் ஈழத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட இவரது நடன நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. சான்றாக சிலவற்றை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

 • 16.01.2001ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின்

முன்னிலையில் இடம்பெற்ற இவரது குழுவினரின் குறளோவியம் நாட்டிய நாடகம் மிகுந்த பாராட்டுதலை பெற்றது.

 • 2002 இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்சி அண்ணா கலையரங்கத்தில் இடம்பெற்ற வந்தேமாதரம் நாட்டிய நாடகமும் பலரது பாராட்டுதலையும் பெற்றதெனலாம்.
 • 2003ல் அகில இந்திய மருத்துவர் சங்கத்தின் ஆய்வரங்கில் (திருச்சி சங்கம் ஹோட்டல்) இடம்பெற்ற நடன நிகழ்வில் இவரது பரதநாட்டியம், மோகினி ஆட்டம், கிராமிய நடனம் என்பன சிறப்பு நிகழ்ச்சியாக இடம்பெற்றிருந்தது.
 • 2005ல் பாண்டிச்சேரி கம்பன் கலையரங்கத்தில் அன்றைய பாண்டிச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அவர்களது தலைமையில் இடம்பெற்ற பாண்டிச்சேரி நுண்கலைக் கழக ஆண்டு விழாவின் நடன நிகழ்வில் இவரும் இவரது குழுவினரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இந்நிகழ்வில் பாண்டிச்சேரி முதல்வரும் சினிமா நடிகை சுகன்யாவும் நினைவுப் பரிசு வழங்கி இவரை கௌரவித்தனர்.
 • இவர் நாடு திரும்பியதைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாண கல்வி கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் அமைச்சின் செயலாளர் திரு. இரா.தியாகலிங்கம் தலைமையில் 31.08.2005ல் மட்டக்களப்பு மகாஜனா கலையரங்கத்தில் இடம்பெற்ற இவரது தனி நடன நிகழ்வில் பரதம், மோகினி ஆட்டம், குச்சுப்படி, ஒடிசி, துந்துபி என பல நடனங்களை வழங்கி பெரும் பாராட்டினைப் பெற்றுக்கொண்டார்.
 • 2006 செப்ரம்பர் 10ஆம் 11ஆம் திகதிகளில் ஓணம் பண்டிகையையொட்டி இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ நிருபமா ராவ் அவர்கள் தலைமையில் கொழும்பு எக்ஸெல் மண்டபத்திலும் இந்தியன் இல்லத்திலும் இடம்பெற்ற நடன நிகழ்வில் பங்குகொண்டு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
 • சக்தி தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியிலும் இவரது நடன நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்தும் இன்றுவரை இவரது நாட்டிய நிகழ்வுகள் இடம்பெறவே செய்கின்றன.

நாட்டியத் துறைசார்ந்த ஆய்வுகள்: நாட்டியத்துறைசார்ந்த இவரது ஆய்வுகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுபவையே.

 • 2004ல் சமர்ப்பிக்கப்பட்ட இவரது முதுமானிப் பட்டத்திற்கான ஆய்வேடு தமிழகம் மற்றும் ஈழத்தின் தப்பாட்டம் (பறைமேளம்) குறித்து விரிவாகப் பேசுவதாகும். சங்ககாலம் முதல்கொண்டு பறைமேளத்தின் வடிவங்களும் மாற்றங்களும் இதில் சிறப்பாக ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 • 2007 அக்டோபர் 18,19ஆம் திகதிகளில் திருகோணமலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆய்வரங்கில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட பரதநாட்டியமும் மோகினி ஆட்டமும் ஒப்பீடு ஒரு முக்கிய ஆய்வாகவே பார்க்கப்பட்டது.
 • 2014ல் மதுரையில் இடம்பெற்ற ஆய்வரங்கில் தொல்காப்பியத்தில் நடனச் செய்திகள் எனும் தலைப்பில் இவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை கல்வியாளர்கள் பலராலும் பாராட்டப்பட்டதாகும்.
 • 2014ல் லண்டனில் இடம்பெற்ற 2வது சர்வதேச திருமுறைவிழா ஆய்வரங்கில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட தேவாரத்தில் நடனச் செய்திகள் எனும் தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையும் மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாகும்.
 • 21.03.2016ல் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சர்வதேச ஆய்வரங்கில் இவரால் சமர்ப்பிக்கப்பட்ட கண்டிய நடனத்தில் பெண்கள் எனும் ஆய்வுக் கட்டுரையும் முக்கியத்துவம் பெறுவதாகும்.
 • இவரது பரத நாட்டியமும் கண்டிய நடனமும் 2013 -2015 முனைவர் பட்ட ஆய்வானது சிறந்த உசாத்துணை ஏடாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

எழுத்துலக பிரவேசம்:

 • இவர் பயிலும் காலத்தில் பாடசாலை மற்றும் கல்லூரிச் சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்திருந்தாலும் இவர் தனது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் தொடராக பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் வெளியீடுகளில் எழுதிய ஆக்கங்களே பலராலும் படிக்கப்பட்டன. நாடு திரும்பிய சில நாட்களில் 07.08.2005ல் ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த இவரது நேர்காணலைத் தொடர்ந்து 17.10.2005ல் கரகாட்டம் பற்றிய ஆய்வுக்கட்டுரையினை வீரகேசரி பிசுரித்திருந்தது. அதனைத்தொடர்ந்து இந்திய ஆடற்கலைகள், பரதமும் அதன் பாரம்பரியமும், மோகினி ஆட்டம், தாண்டவ நடனங்கள், ஆலயச் சிற்பங்கள், கலிங்கத்தின் ஒடிசி நடனம், குறவஞ்சி நடனங்கள் என பல ஆய்வுக் கட்டுரைகள் தொடராக வெளிவரலாயின. சுருதி சஞ்சிகையில் இவரால் எழுதப்பட்ட குடக்கூத்து ஆய்வுக் கட்டுரையும் அபிநயாவில் இவர் எழுதிய மோகினி ஆட்டம் பற்றிய அறிமுகமும் பலரது பாராட்டினையும் பெற்றிருந்தது.
 • 2010 டிசம்பரில் கலைக்கேசரி மாதாந்த சஞ்சிகையில் வெளிவந்த இவரது நேர்காணலைத் தொடர்ந்து இச்சஞ்சிகை இவரது கட்டுரைகளைத் தொடராகப் பிரசுரித்தது. கதக்களி நடனம், குச்சுப்புடி நடனம், ஒடிசி நடனம், மணிப்புரி நடனம், கன்னடத்தின் யக்ஷகானா, யாத்ரா நடனம், குறவஞ்சி நாடகம், கேரளத்தின் துள்ளல் நடனங்கள்,பாகவதா மேளா, தமிழகத்தின் தெருக்கூத்து, விராலி மலைக் குறவஞ்சி, தேவாரங்களில் நடனச் செய்திகள், பரதநாட்டியமும் கண்டிய நடனமும் ஒரு ஆய்வுப் பார்வை, இலங்கையின் இசை நடன மரபுகள், வண்ணம நடனங்கள் என தொடராக இவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் நடனத்துறை சார்ந்தவர்களுக்கு பெரும் வரப்பிரசாதம் எனலாம். 2011 செம்மொழி மாநாட்டு மலரில் வெளிவந்த கிழக்கிலங்கையின் பறைமேளக் கூத்து எனும் இவரது ஆய்வுக் கட்டுரையும் மிகச் சிறப்பான ஒன்றாகும். இவரது கிழக்கிலங்கை கண்ணகி வழிபாடு தொடர்பான தொடர் கட்டுரையை தமிழகத்தின் முத்துக்கமலம் மின்னிதழ் 2015ல் தொடராகப் பிரசுரித்திருந்தது. அண்மையில் வெளியிடப்பட்ட மட்டக்களப்பு தமிழ்ச் சங்கச் சிறப்பு மலரான சங்கத்தில் இடம்பெற்ற இவரது சுவாமி விபுலானந்தரின் வாழ்வியலும் சமதர்மமிக்க சமூகப் பணிகளும் எனும் ஆய்வுக்கட்டுரை மிக்க சிறப்பு வாய்ந்ததெனலாம். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் நடனத்துறைசார்ந்து சில உரைகளையும் நிகழ்த்தியுள்ளார்.

கருத்தரங்கு, பயிற்சிப் பட்டறைகள்:

 • தமிழகத்தில் பயின்றகாலம் முதற்கொண்டு இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வரங்குகள், பயிற்சிப் பட்டறைகளில் இவர் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். அவற்றில் பல சர்வதேசத் தரம்வாய்ந்தவையாகும். மதுரை, தஞ்சை, சுவிற்சலாந்து, லண்டன் ஆகிய இடங்களில் இடம்பெற்ற சர்வதேசக் கருத்தரங்குகளிலும் இவரது ஆய்வுக் கட்டுரைகள் படிக்கப்பட்டுள்ளன.


இதுவரை இவர் மோகினியாட்டம் ஆரம்ப அடவுகள் -கையேடு, இந்திய ஆடற்கலைகள், கண்ணகி பற்றிய நம்பிக்கைகள், ஆடல் காணீரோ ஆகிய நான்கு நுல்களை வெளியிட்டுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வான பரதநாட்டியமும் கண்டிய நடனமும் ஒரு ஒப்பீட்டு ஆய்வு மனுவேதா வெளியீட்டில் விரைவில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவரும் இவர் 2005 தொடக்கம் 2007 வரை திருச்சி பாரதிதாஸன் பல்கலைக் கழகத்தின் நடனத் துறை தொலைக்கல்விப் பரீட்சகராகக் கடமையாற்றியதோடு 2014 தொடக்கம் அண்ணாமபப் பல்கலைக்கழகத்தின் நடனத்துறை தொலைக்கல்விப் பரீட்சகராகப் பணிபுரிகின்றார்.

31.08.2005ல் வடக்குக் கிழக்குமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி அரங்கில் இடம்பெற்ற நடன விழாவில் பாராட்டிக் கௌரவிப்பு அத்தோடு 2006 செப்ரம்பர் 10ல் ஓணம் பண்டிகையையொட்டி கொழும்பு எக்ஸெல் மண்டபத்தில் இடம்பெற்ற நடன விழாவில் கொழும்பு மலையாள சமூகம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிப்பும் இவர் பெற்றுள்ளார்.


விருதுகள்

 • 2002 -2003 க்கான திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் கலைக்காவலர் பேரருட்திரு ஜோர்ச் அடிகளார் விருது.
 • 2003 -2005 கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் சிறந்த மாணவருக்கான விருது,
 • பாண்டிச்சேரி நுண்கலைக்கழகத்தின் 2005 ஒளிவிழாவின் நடனத்துறை சிறப்பு விருது


 • 2006 செப்ரம்பர் 11ல் இந்திய இல்லத்தில் இடம்பெற்ற நடன நிகழ்வில் இலங்கை இந்திய சமூகத்தினர் சார்பில் உயர் ஸ்தானிகர் கௌரவ நிருபமா ராவ் அவர்களால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிப்பு.
 • 2015 ஏப்பிரலில் கம்போடியாவில் இடம்பெற்ற உலக நடன விழாவில் கம்போடியா தமிழ்ச் சங்கம் சார்பில் கலைமாமணி விருது வழங்கிக் கௌரவிப்பு.

குறிப்பு : மேற்படி பதிவு தாக்சாஷாயினி, பரமதேவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.