ஆளுமை:தவசலிங்கம், துரைசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரைசாமி தவசலிங்கம்
தந்தை துரைசாமி
தாய் காந்தியம்மா
பிறப்பு 1949.02.10
ஊர் திருகோணமலை
வகை பல்துறை ஆளுமையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருகோணமலையை சேர்ந்த பல்துறை ஆளுமைகளுள் ஒருவராவார். திருகோணமலையின் முக்கிய ஆலயங்களான முத்துக்குமார சுவாமி ஆலயம், விஸ்வநாதர் சமேத சிவன் ஆலயம் போன்றவற்றின் அறங்காவலர் சபையில் பணியாற்றி அனுபவம் மிக்கவர் ஆவார்.

இவர் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் துரைசாமி, காந்தியம்மா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு 6 சகோதரர்கள். இவர் தனது சிறு வயதிலேயே திருகோணமலைக்கு வந்து அங்கு குடியேறி, திருகோணமலையில் தரம் 3 வரை சண்முகா பாடசாலையிலும், பின்னர் இந்துக் கல்லூரியிலும் தனது ஆரம்பக் கல்வியை கல்வி கற்று பொறியியல் துறைக்கு தெரிவாகினார்.

பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கற்று பொறியியலாளர் ஆனார். 1972 ஆம் ஆண்டு TCEOவில் பொறியியலாளராக இணைந்து பிரதம பொறியியலாளராகவும் பதவி உயர்வு பெற்றார். 1986 இல் பெருந்தெரு திணைக்கள சிரேஷ்ட பொறியியலாளராக பணியாற்றினார். பின்னர் 1990 ஆம் ஆண்டு நாட்டின் போர் சூழலின் அச்சுறுத்தல் காரணமாக லண்டனுக்கு சென்று சுமார் இரண்டு வருடம் அங்கு வாசித்து வந்தார்.

மீண்டும் 1992 திருகோணமலைக்கு வருகை தந்தார். அப்போதைய ஆளுநர் நளின் செனவிரத்தின அவர்களின் அனுமதி உடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளராக இணைந்து பணியாற்றினார். இவரது காலகட்டத்தில் பதுளை - செங்கலடி வீதி, திருகோணமலை - மூதூருக்கு செல்லும் பாதையில் உள்ள பாலங்கள் என்பன அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவர் திருகோணமலை விஸ்வநாதர் சிவன் ஆலயத்தில் 24 வருடங்கள் அறங்காவலர் சபையில் பணியாற்றியதுடன், முத்துக்குமாரசுவாமி ஆலயத்தின் முகாமையாளராகவும் 25 வருடங்கள் சேவையாற்றினார். மேலும் திருக்கோணேச்சர ஆலயத்தின் 1982 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது அப்போதைய தலைவர் செல்வராசா உடன் இணைந்து ஆலய கும்பாபிஷேகத்திற்கு பணியாற்றினார்.

மேலும் இவரது காலப்பகுதியில் முத்துக்குமாரசுவாமி ஆலயத்தில் இரண்டு கும்பாபிஷேகங்களும், கல்யாண மண்டபமும் அமைக்கப்பட்டு இலவச சங்கீத வகுப்புக்கள் இசை நடன கலாலயம் என்ற பெயரில் நடத்தப்பட்டது. அவ்வாறே விஸ்வநாதர் சிவன்ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெறவும் மற்றும் சித்திரத்தேர் அமைக்கவும் அரும்பெரும் பணியாற்றினார். மேலும் திருகோணமலையின் இவ்வாலயங்களுக்கு சொந்தமான காணிகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும் செயலாற்றினார்.

மேலும் இவரது காலப்பகுதியில் அமைக்கப்பட்ட திருகோணமலை - புல்மோட்டை பிரதான வீதி இவரது வினைத்திறன் மிக்க செயற்பாட்டினாலே உரிய காலத்தில் அமைக்கப்பட்டது.

அத்துடன் திருகோணமலை அரசு சார்பற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பிலும் தலைவராக பணியாற்றினார். இதன் ஊடாக மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதார உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான விடயங்களை மேற்கொள்வதற்கு அரும்பெரும் சேவையாற்றிய ஒருவர் ஆவார்.