ஆளுமை:தம்பிராசா, நாகமணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நாகமணி தம்பிராசா
தந்தை வ. நாகமணி
தாய் தங்கம்மா
பிறப்பு 1927.06.05
இறப்பு 17.01.2013
ஊர் சாம்பல்தீவு, திருக்கோணமலை
வகை அரசியல்வாதி, சமூகசெயற்பாட்டாளர், தொல்லியல் ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சாம்பல்தீவு கிராமத்தின் மிகசிறந்த ஆளுமைகளில் ஒருவரே, வ. நா. தம்பிராசா ஆவார். யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் மாப்பாணர் பரம்பரையைச் சேர்ந்த நாகமணி அவர்களிற்கும், கரவெட்டி வேளாளர் வம்சத்தைச் சேர்ந்த தங்கம்மா அவர்களிற்கும் மூன்றாவது பிள்ளையாக அமரர் தம்பிராசா அவர்கள் 05.06.1927ம் ஆண்டு சாம்பல்தீவு செம்பாடு என்னும் இடத்தில் பிறந்தார். மூத்த சகோதரி கனகம்மா 19 வயதிலும், மூத்த சகோதரர் இரத்தினம் 16 வயதிலும் மரணமாகி விட்டனர். தாயார் இவரது 7வது வயதிலும், தந்தையார் இவரது 12வது வயதிலும் காலமாகி விடவே, இவரும் இளைய சகோதரியான சோதிமுத்துவும், தாய் மாமனார் ஆகிய அமரர் சுந்தரம் செல்லத்துரை, மாமி பாக்கியம் இருவரின் அன்பான அரவணைப்பில் வளர்ந்து வந்தனர். இருவரையும் தமது சொந்தப்பிள்ளை போல் பாசத்துடனும், கண்டிப்புடனும் வளர்த்து முதலில் தங்கையாரிற்கும் பின் மருமகனாகிய தம்பிராசாவிற்கும் திருமணபந்தத்தை சிறப்புற நடாத்தி வைத்தனர். 26 வயதில் அமரர் தம்பிராசா அவர்களிற்கு சாம்பல்தீவு உயர்வேளாள பரம்பரைச் சேர்ந்த வேலாயுதம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் செல்வப்புதல்வி மகேஸ்வரி அவர்களை அவரின் 16 வயதில் இல்லறவாழ்வில் இணைத்து வைத்தனர். இவரது திருமணத்தை இந்தியாவின் கேரளமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட நாதஸ்வரக்கோஸ்டியின் கான இசை மழையில், அலங்காரக் கொட்டில் அமைத்துக் கிராமமே இன்னமும் காணாதவகையில் மிக விமரிசையாக அவரின் மாமானர் அமரர் செல்லத்துரை அவர்கள் நடாத்தி வைத்தார். இல்லற வாழ்க்கையில் இணைந்த தம்பிராசா மகேஸ்வரி தம்பதியினருக்கு குசுதாஸ், சண்முகநாதன், விஜயராஜேந்திரன், இராஜவரோதயன், கோணேஸ்வரன், சாந்தினிதேவி, இராஜேஸ்வரி, மாலினி, கீதா, இலங்கேஸ்வரி என பத்து அறிவுள்ள செல்வங்கள் பிறந்தனர்.

இவர் இளம் வயதில் தந்தையார் நாகமணி அவர்களால் உருவாக்கப்பட்ட, மறைந்த அமரர் தங்கராசா, மாணிக்கராசா (முன்னாள் பா.உ) ஆகியோரிற்கு உரித்தான பாலச்சந்திரன் எஸ்டேட் எனும் தென்னந்தோட்டத்தில் உள்ள வீட்டிலிலேயே வளர்ந்து வந்தார். தந்தையாரினாலேயே 144 ஏக்கர் விஸ்தீரணமுள்ள தென்னந்தோட்டம் உருவாக்கப்பட மறைந்த பெரியோர்களான சின்னத்தம்பி, சுப்பிரமணியம், ஆறுமுகம், வயிரமுத்து, இராமு மற்றும் இந்தியாவின் கேரளத்தில் இருந்து வந்த சங்கரன் போன்ற தொழிலாளர்களின் உதவியுடன் காடு வெட்டி, தென்னை பயிரிட்டு, வளர்த்து, பெரும் தோட்டம் ஆக்கி, அங்கே தொழிலாளர்களிற்கு வீடுகள் கட்டிக் கொடுத்து இவரது தந்தையாரே தோட்டத்தின் "கங்காணியார்" எனப்படும் மேற்பார்வையாளராக இருந்தார். இதனால் இவர் "நாகமணி கங்காணியார்" என அனைத்து மக்களாலும் அழைக்கப்பட்டார். தந்தையாரால் சுமார் 40 வருடங்கள் பராமரிக்கப்பட்ட பாலச்சந்திரன் தோட்டத்தை அன்புத் தந்தையாரின் மறைவின் பின் தனது 25வது வயதில் மேற்பார்வையாளராக இருந்து 1985ம் ஆண்டு வரை சுமார் 32 வருடங்களாக பராமரித்தார்.

இவர் தனது இளமைப்பருவத்தில் இனப்பற்றுடன் வாழ்ந்தார். 1958ம் ஆண்டின் பின் இலங்கை தமிழரசு கட்சியில் சேர்ந்து கொண்டார். 1960 ஆண்டு தொடக்கம் 1965 ஆண்டு சாம்பல்தீவு கிராமத்தின் கிராமசபைத் தலைவராக அக்காலத்தில் கிராமத்தில் மானசீகமாக உழைத்தார். கிராமத்தின் கல்வி, கலை, கலாச்சாரம், ஆன்மீகம் என்பவற்றிற்காக தன்னை அர்ப்பணித்து பொதுநல சிந்தனையோடு அயராது இரவு பகல் பாராது உழைத்தார். இவர் கிராமசபைத் தலைவராக இருந்த வேளை 1961ம் ஆண்டு திருக்கோணமலை பழைய கச்சேரி முன்பான அகிம்சை சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு அப்போதைய அரசினரால் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் பனாகொட தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அவ்வேளையில் கூடவே பல தமிழ்த்தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் தந்தை செல்வா, திருவாளர்களான திருச்செல்வம் கியூசி ஐயா, அமிர்தலிங்கம் ஐயா, நாகநாதன் ஐயா, சுந்தரலிங்கம் ஐயா, இராஜவரோதயன், ஐயா, ஏகாம்பரம் போன்றோரும் அடங்குவர். இராஜவரோதயம் அவர்கள் அவருக்கு எழுதிய கடிதத்தின் சில வரிகள் அவரது வாழ்க்கை முழுவதையும் மதிப்பிட உதவும் ." நீ ஒரு இளைஞன். உன்னைவிட வயதில் மூத்தவன் என்ற முறையில் உனக்கு ஒரு அறிவுரை கூறுகின்றேன். நீ செல்வந்தன் அல்ல. புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கி மற்றவர்களுக்கு இலவசமாக வழங்குவதை நிறுத்தவேண்டும். உன் பிள்ளைகளின் தேவைக்கு அதிகம் செலவு செய்ய பணம் வேண்டும்." என்ற பொருள்பட இராஜவரோதயம் அவர்கள் எழுதிய இக்கடித வரிகள் தான் அவருடைய வாழ்நாள் அடையாளம்.

கிராமசபைத் தலைவராக இருந்த காலப்பகுதியில் மக்களோடு மக்களாக மக்கள் தேவை அறிந்து சேவையாற்றினர். அக்காலப்பகுதியில் (1960 - 1965) கிராமத்தில் ஒழுங்கான போக்குவரத்து பாதைகள், வைத்தியசாலை வசதி, நூலக வசதி, மின்சார வசதி இல்லாத நிலையிலும் அவற்றினை பெற்றுக் கொள்வதில் அதீத அக்கறை காட்டினார். மின்வசதி இல்லாத அன்றைய நாட்களில் சாம்பல்தீவு கிராமத்தின் பிரதான சந்திகளில் எண்ணெயில் ஒளிரும் கண்ணாடி விளக்குகளை ஒவ்வொரு நாளும் தனது செலவிலே ஏற்றி வைத்த தம்பிராசா அவர்கள் பின்னாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியுடன் கிராமத்திற்கு மின்வசதியைக்கொண்டு வந்தார். போக்குவரத்து பாதைகளை கிறவல் இட்டுப் புனரமைத்தார். ஆயுள்வேத வைத்தியசாலையை அமைப்பதில் பெரும் முயற்சி எடுத்து அரசின் அனுமதியுடன் வெற்றி கண்டார். அவ்வேளையில் முதல் ஆயுர்வேத வைத்தியராக டாக்டர் தங்கக்கணபதி அவர்கள் கடமை புரிந்தார். இவர் பின்னாளில் தம்பிராஜாவின் சமூகச் செயற்பாடுகளில் வலது கரமாகச் செயற்பட்டார். மேலும் கிராம மக்கள் குடிநீர் பிரச்சனையால் கஷ்டப்பட்ட போது வட்டாரங்கள் தோறும் கிராமசபையின் நிதியில் பல பொதுக்கிணறுகளை அமைத்தார்.

1970 - 1975 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் நேமிநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து கிராமத்திற்கு மின்சார இணைப்பை பெற்றக் கொள்ளப் பெரிதும் பாடுபட்டார். பின்னர் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் நிதியுதவியால் மேலும் கிராம மின் விநியோகத்தை விரிவுபடுத்தினார். 1978ம் ஆண்டில் கிராமத்திற்கு குழாய் நீர் விநியோகம் கிடைக்க முயற்சி செய்தார். பா.உ. சம்பந்தன் ஐயா அவர்களின் நிதி உதவியால் நீர் விநியோகம் கிடைத்தது. தொடர்ச்சியாக மற்றைய பகுதிகளிற்கும் கிடைக்க வழி செய்தார். 1964ம் ஆண்டு மார்கழி மாதம் எமது கிழக்கு மாகாணம் 'புயல்' காற்றினால் பெரும் அழிவை சந்தித்தவேளை கிராமம் வரலாறு காணாத பேரழிவைச் சந்தித்தது. அவ்வேளையில் கிராமத் தலைவராக இருந்த தம்பிராசா துரிதமாக இளைஞர்களின் படையணியை திரட்டி, துரித கதியில் கிராமத்தின் பாதைகளின் தடைகளை அகற்றி சேதமுற்ற வீடுகளைத் திருத்திக் கொடுப்பதற்கும் வகை செய்தார். 1960 - 1965 வரை கிராம சபைத் தலைவராகவும், 1966 - 1975 வரை கிராம சபை உறுப்பினராகவும் இருந்து சேவையாற்றினார். இக்காலப்பகுதியில் தம்பிராசாவுடன் சேர்ந்து சேவை பல புரிந்தோரில், ஆயுர்வேத வைத்தியர் ஆ. வை. தங்கக்கணபதி, புகழ் பூத்த கவிஞர் 'லியோ' அவர்களும், அவர்தம் பாரியாரும் குறிப்பிடதக்கவர்கள். இவர்கள் பல முத்தமிழ் விழாக்கள், இசை நிகழ்வுகள் எனப் பல கலை, கலாச்சார நிகழ்வுகளை நடாத்த அரும்பாடுபட்டனர்.

அரசியலில் தன்னைப் பெருமளவுக்கு ஈடுபடுத்தியிருந்த காலத்திலும், தொல்பொருட்களைத் தேடி அவற்றை வெளிக் கொணர்வதில் அவர் பெரும் அக்கறை காட்டி வந்தார். தொடர்ந்து அவர் காட்டிய அக்கறையினால், திருகோணமலை மாவட்டத்தில் எட்டுச் சாசனங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பற்றி அறிவித்திருந்தார். பேராசிரியர் ஸ்ரீ குணசிங்கம் அவர்களுடன் இணைந்து பல கல்வெட்டுகள் தொடர்பான ஆராய்வுகளை மேற்கொண்டிருந்தார். இவருக்கு குணசிங்கம் அவர்களுடன் ஆன தொடர்பு இவர் 1972 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் முதலாம் திகதி தினகரன் பத்திரிகையில் "அனுராதபுரம் தொல்பொருள் காட்சிசாலையில் உள்ள தமிழ் கல்வெட்டு ஒன்றை திருக்கோணமலைக்கு இடமாற்றுமாறு திருக்கோணமலை அரசாங்க அதிபரை கோரி வெளியிட்டிருந்த செய்தி" ஊடாகவே ஏற்பட்டிருந்தது. மேலும் மாங்கணாய் குளத்துக்கு அருகில் மேரிஸ் ஜோன் மற்றும் மங்காலிப்பிள்ளை ஆகிய விவசாயிகளின் உதவியுடன் கல்வெட்டு ஒன்றினை இவர் இனம் கண்டிருந்தார். அத்துடன் மானாங்கேனி குளத்துக்கருகில் கல்வெட்டு ஒன்றையும் இனம் கண்டு அதனை வாசிக்க குணசிங்கம் உதவி கோரி இருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக பல கல்வெட்டுகளை இனங்கான குணசிங்கம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியதுடன், குணசிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது "எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் எல்லோருடனும் சமமாக பழகும் ஒரு நல்ல மனிதர் இவர்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய "தமிழரும் திருக்கோணமலையும்" எனும் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை, தம்பிராசாவுக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் திருக்கோணமலை வரலாற்றில் தமிழரின் தொன்மையை நிறுவ வேண்டும் என்னும் ஆர்வத்துடன் செயல்பட்ட ஒரு மனிதர் இவர் ஆவார். அவர் முதலில் கண்டறிந்த கட்டுக்குளம்பற்றுக் கல்வெட்டு சில காலங்களில் அனுராதபுரம் தொல்லியல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டதாக அறிந்து தன் கடிதப் போராட்டத்தை ஆரம்பித்தார். அந்தப் போராட்டம் திருகோணமலை அரசாங்க அதிபர், பிரதமர், தொல்லியற்துறைத் தலைவர் ஆகியோருடன் இருந்தது. குறிப்பிட்ட கல்வெட்டு, தொல்லியல்துறையால் எடுத்துச் செல்லப்படவில்லை என்ற தொல்லியல்துறையின் அறிவிப்பு போராட்டத்தை நிரந்தர முடிவுக்கு கொண்டுவந்தது. ஆனால் அந்த தோல்வி அவருக்குள் ஒரு "தேடலை" வளர்த்தது. திரியாய், குச்சவெளி, மயிலாங்குளம், நிலாவெளி, மாங்கானய், கந்தளாய், பத்திரகாளி அம்மன் கோயில் என அவரால் எட்டக்கூடியளவிற்குத் தேடி வரலாற்று அடையாளங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.

பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் திருகோணமலை குறித்து எழுதிய பல ஆய்வுகள் பேராசிரியர் பரணவிதானயின் முடிவுகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்தியது. தம்பிராசா - பேராசிரியர் பத்மநாதன் உறவு மேலும் பல வரலாற்று உண்மைகளைக் கொண்டு வந்தது. பேராசிரியர் 20.2.1994 இல் வீரகேசரியில் எழுதிய குளக்கோட்டன் தொடர்பான தொடர் கட்டுரை பேராசிரியர் பரணவிதானயின் முடிவுகள் பலவற்றை நிராகரித்தது. திருக்கோணமலைக் கல்வெட்டுக்களை வாசிப்பதில் அவருக்கு இருந்த கிரந்தப் புலமையும், சமய அறிவும் சிறப்பாகப் பயன்பட்டன. 'கோணேசர் கல்வெட்டு முன்னுரை', திருகோணமலையில் சோழர்களின் நிர்வாக அமைப்பு குறித்து பேராசிரியர் எழுதிய கட்டுரைகள் சோழர்காலத் திருகோணமலைக்கான வரலாற்றுச் சித்திரத்தைச் சிறப்பாகத் தந்தது. இவ்விடயங்களில் தம்பிராசாவின் பங்கும் அளப்பெரியது.

இச்சேவைகளிற்கு கிராமசபை உறுப்பினர்களாக இருந்த ஐ. நாகரெட்ணம், நா. வல்லிபுரம், க. சி. சுப்பிரமணியம், இ. பேரம்பலம், பொ. இராதுரை (மாங்கணாய்), க. தங்கராசா (ஆத்திமோட்டை), றெ. கோபால் (ஆத்திமோட்டை), சா. செல்லத்துரை (6ம் வட்டாரம்), ஆனந்தராசா (சல்லி), ச. குமாரசாமி (7ம் வட்டாரம்) போன்றோரும், கிராம சபை தலைவர்களான ச. தங்கராசா (சல்லி), க. வேலாயுதம், மயில்வாகனம் போன்றோரும் உறுதுணையாகவும், கிராமத்தின் அபிவிருத்தி கருதி, அர்ப்பணிப்பணிப்போடு, அரும்பாடுபட்டனர். தம்பிராசா கிராமசபைத் தேர்தலில் நின்றவேளை (1960இல்) அவரிடம் பணவசதி இருக்களில்லை. இவ்வேளை தனது மருமகன் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டு என்ற நல்லெண்ணத்தொடு தனது காணியொன்றை அடகு அப்பணத்தை தேர்தல் செலவிற்காக கொடுத்த பெரு உள்ளம் கொண்டவர், அமரர் செல்லத்துரை, பாக்கியம் ஆகியோர் என்று பெருமையுடன் கூறலாம்.

இவர் மாதுமையம்பாள் சமேத கோணேசப் பெருமான், பத்திரகாளி அம்பாள், மாங்களாய் மாரியம்பாள், சல்லி முத்துமாரி அம்பாள் மீது அளவிலா 'பக்தி' கொண்டிருந்தார். சமயபணியின் ஊடாக கிராமக்களை ஆன்மசுவழியில் நெறிப்படுத்தினார். மாங்கணாய் மாரி அம்பாள் ஆலய "முதல் கும்பாபிஷேகத்தை" அப்போதைய கிராம அதிகாரி திரு. சு. சுப்பிரமணியம் (விதானையார்), பூசாரியார் பொன்னம்பலம், இராசதுரை மற்றும் ஊர் பெரியோர்களுடன் சேர்ந்து 1962ம் ஆண்டு மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அம்பாளின் கும்பாபிஷேகத்தை இந்தியாவின் "ரிஷிசேசம்" போன்ற புண்ணிய தலங்களினது தீர்த்தங்களை விசேடமாக அங்குள்ள சுவாமிகள் வரவழைத்து, மேலும் கதிர்காமம், கோணேஸ்வரம், நல்லூர், கீரிமலை போன்ற புனித தலநீர்த்தங்களையும் கொண்டு நிறைவேற்றினார். சாம்பல்தீவு கிராமத்தில் "திவ்விய ஜீவனசங்கம்" எனும், சைவ சமய ஆன்மீக அறநெறி அமைப்பால் கிராம சிறார்களிற்கு ஆன்மீக போதனைகளையும், இந்தியாவிலிருந்து வருகை தந்த சுவாமிகள் மூலமும் சமயச் சொற்பொழிவுகளையும் சிறப்புற பெரியோர்களிற்கும் நடாத்தினார்.

திருக்கோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள சிவயோக சமாஜ கெங்காதாரனந்தாஜி உடன் மிக்க மரியாதை கொண்டு சுவாமிஜியை ஒவ்வொரு வாரமும் தரிசித்து, அவரது ஆசிர்வாதத்தை ஊர்மக்களுக்கும் பெற்றுக் கொடுத்தார். சமாஜ வளாகத்தில் நெருஞ்சிச் செடிகள் நிறைந்திருந்த வேளை அமரர் செல்லத்துரை நவரெட்ணம் (மைத்துனன்) தலைமையிலான இளைஞர்கள் சிலரை சாம்பல்தீவிலிருந்து மாட்டு வண்டியில் வாழைத்தண்டுகளுடன் கூட்டிச் சென்று வாழைத்தண்டு உருட்டி, நெருஞ்சி முட்களை இல்லாது ஒழித்தார். 1965ம் ஆண்டு 1975 வரை கிராமசபையின் 5ம் வட்டார உறுப்பினராக இருந்த வேளையிலும் தமது சேவையை தொடந்தார்.

1962ம் ஆண்டு கிராமசபைத் தலைவராக இருந்தபோது ஆத்திமோட்டை குடியேற்றக் கிராமத்தில் சிறார்களின் கல்வித்தேவையை உணர்ந்து 8ம் வட்டார உறுப்பினராக இருந்த திரு. றெ. கோபால் அவர்களின் பக்கபலமான உதவியுடன் தற்போது ஆத்திமோட்டை தமிழ் வித்தியாலயம் அமைந்துள்ள காணியில் ஒரு இலைக்கொட்டில் அமைத்துப் புதிய பாடசாலை ஒன்றை அமைத்தார். அதன் திறப்பு விழாவின்போது தம்பிராசா மகேஸ்வரி நாடா வெட்ட, தம்பிராசா குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர். இப்பாடசாலையின் அப்போதைய அதிபராக பின்னாளில் வட்டாரக் கல்வி அதிகாரியாக இருந்த துரைராஜசிங்கமும், ஆசிரியர்களாக இளைப்பாறிய அதிபரான க. தங்கவேல் மற்றும் அமரத்துவம் அடைந்த திருமதி. நாகரெட்டினம் புஸ்பதேவி ஆசிரியை, ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி. சண்முகராசா செல்வநாச்சியார் ஆகியோரும் கடமையாற்றினார்கள். கிராமத்தில் வள்ளுவன் வாசிகசாலையை ஏற்படுத்தி மக்களுக்கு நூல்களை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். பாடசாலைகளில் கிராமசபை ஊடாக பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் பேட்டி என மாணவர்களின் கல்வி வளம் பெறப் பாடுபட்டார். இவ்வேளையில் அமரர்களான திரு. முருகையா, திரு. க. சண்முகநாதன், திரு. ஏ. சிவஞானம் போன்றோர் இவரின் பணிகளில் பக்கபலமாகச் செயற்பட்டனர். மேலும் நாமகள் சனசமூக நிலையத்தை உருவாக்கி, அதன் மூலமும் பல சேவை ஆற்றினார்.

1973 காலப்பகுதியில் மாங்கணாய், ஐயன்குடா, இலுப்பைக்குளம் போன்ற பகுதிகளில் படித்து வேலைவாய்ப்பு அற்று இருந்த இளைஞர்களிற்கான விவசாயத்திட்டங்களை அரச அதிபர், பிரதி அரச அதிபர் காரியாதிகாரி போன்றோரின் பூரண ஆதரவோடு மிகத் துரிதமாக செயற்படுத்தினார். அத்திட்டங்களில் இலுப்பைக்குளத்தில் 25 ஏக்கர், ஐயன்குடாவில் 25 ஏக்கர், மாங்கணாயில் 25 ஏக்கர் விவசாய நிலங்கள் உருவாக்கப்பட்டது. இத்திட்டங்களில் வெங்காயம், மிளகாய், சோளம் மற்றும் மரக்கறி பயிர்களை இளைஞர்கள் பயிரிட்டு கிராமத்தை செழிப்புறச் செய்தனர். 1973 - 1976 காலப்பகுதியில் 'தை' மாதம் என்றவுடன் இரவு நேரங்களில் வீடுகள் தோறும் கொழும்பு செல்லும் பாரவூர்திகள் (லொறிகள்) வரிசையாக வெங்காயம் ஏற்றுவதற்காக காத்திருக்கும். சிறீமாவோ பண்டாரநாயக்கா இன் தலைமையிலான ஆட்சியின் போது உள்ளூர் உற்பத்தியைப் பெருக்க விவசாயிகள் தம்நிலத்தில் கிணறு வெட்ட, நீரிறைக்கும் இயந்திரம், உபகரணம் வாங்க இலங்கை வங்கி மூலம் கடனுதவிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

அவ்வேளையில் அரசாங்க அதிபராக “திஸ்ஸை தெய்வேந்திரா” எனும் சகோதர இனத்தைச் சார்ந்த மொழி, மத, பாகுபாடு காட்டாத சகல இனத்தவராலும் போற்றப்பட்ட ஒரு உத்தமர் இருந்தார். அவரிற்கு பக்கபலமாக உதவி அரசாங்க அதிபராக திரு. மு. செல்வரெத்தினம் அவர்களும், "பிரிவு காரியாதிகாரி" ஆக சாம்பசிவ ஐயர் உம் இருந்தனர். இவர்கள் தம்பிராசாவுடன் மிக அந்நியோந்தியமாகவும், மிக்க நட்புறவுடனும் பழகினர். இதனாலேயே சேவைகளை இவர்கள் மூலமாக பெற்று சிறப்புற ஆற்றினார். இவர்களிற்கு நன்றிக்கடனாக ஐயன்குடா திட்டத்திற்கு "செல்வரத்தினபுரம்" எனவும், மாங்கணாய் திட்டத்திற்கு "திஸ்ஸதெய்வேந்திரபுரம்" எனவும் பெயர் சூட்டி அழைத்தார். இக்காலப் பகுதியை "ளமது கிராமத்தின் பொற்காலம்" எனின் மிகையாகாது.

மேலும் அந்த காலத்தில் ஆறாம்கட்டை, தண்ணீர்தொட்டி சந்தியிலிருந்து 'அடுக்குப்பார்' எனும் பகுதிவரையுள்ள வீதிக்கு 1973 இல் "கோணேசபுரி வீதி" எனவும், அப்பிரதேசத்திற்கு கோணேசப்பெருமாவின் நாமத்தை நினைவுறுத்த "கோணேசபுரி" எனவும் அரசாங்க அதிபரின் அனுமதியுடன் பெயர் சூட்டினார். தற்போதும் கூட கிழக்கு பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ள பிரதேச அவ்வாறே அழைக்கப்படுகின்றது. அரச அதிபராக இருந்த 'திஸ்ஸ தெய்வேந்திரா" இவர் மீது மிக்க மதிப்பு வைத்திருந்ததன் பேறாக அவரிற்கு என ஒரு நேரத்தை ஒதுக்கி குறைபாடுகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வகை செய்தார்.

இவ்வாறு பல சேவைகள் ஆற்றிய இவர், 17.01.2013 இறைவனடி சேர்ந்தார்.