ஆளுமை:தண்டாயுதபாணி, சிங்காரவேலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிங்காரவேலு தண்டாயுதபாணி
தந்தை சிங்காரவேலு
தாய் அன்னநாச்சியார்
பிறப்பு 1950.08.07
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை கல்வி சார் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிங்காரவேலு தண்டாயுதபாணி அவர்கள் திருக்கோணமலையின் பத்தாம் குறிச்சியில் 07.08.1950ம் ஆண்டு சிங்காரவேலு, அன்னநாச்சியார் ஆகியோருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் திருக்கோணமலை இ.கி.ச ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் மாணவராகவும், ஆசிரியராகவும், அதிபராகவும் முப்பத்தைந்து வருடங்களை கழித்தவர் ஆவார்.

இவர் 41 வருடகால கல்விச்சேவையில் 34 வருடங்கள் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியிருக்கின்றார். அதன் பின்னர் வலயக்கல்விப் பணிப்பாளராகவும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும், மாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் திருக்கோணமலை சார் கல்விப் பணிகளை மிகவும் வினைத்திறனாக புரிந்ததுடன், சமூகம் சார் சமூக செயற்பாட்டாளராகவும் திகழ்ந்துள்ளார். மேலும் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஒரு அரசியல்வாதியாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், கல்வி அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் தனது கல்வி சேவையை மூதூர் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது ஆசிரிய நியமனத்துடன் 01.10.1970 இல் ஆரம்பித்தார். 1971, 1972ம் ஆண்டுகளில் பலாலி ஆசிரியர் கலாசாலையில் விசேட ஆசிரியர் பயிற்சியை முடித்துக் கொண்டதன் பின்னர் மட்டக்களப்பு ஏறாவூர் அலிகார் மகா வித்தியாலயத்தில், 1973ம் ஆண்டில் ஆசிரியராகக் கடமையேற்றார். பின்னர் களனிப் பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக கொழும்பு ஹமீத் அல்-ஹூசைனி மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். பொருளியல் பாடத்தில் சிறப்புப் பட்டத்தை பெற்றுக்கொண்டு சில மாதங்கள் களனிப் பலகலைக் கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராக கடமையாற்றிவிட்டு திருக்கோணமலை இ. கி. ச. இந்துக்கல்லூரிக்கு 1982ம் ஆண்டில் இடமாற்றம் பெற்றுவந்தார்.

திரு. அ. சிவலோகநாதன் அவர்கள் 1989ம் ஆண்டில் அதிபர் பதவிலிருந்து ஓய்வுபெற்ற வேளையில் திரு. ச. குணரெட்ணம் அவர்கள் அதிபராக நியமனம் பெற்றபோது திரு. சி. தண்டாயுதபாணி அவர்கள் பிரதி அதிபராக கடமையேற்றார். 1990ம் ஆண்டில் போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இலங்கை அதிபர சேவை தரம் 1 இற்கு இவர் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அத்துடன் போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் இலங்கை கல்வி நிருவாக சேவைக்கும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்த இரண்டு பதவி உயர்வுகளும் 1990ம் ஆண்டில் சில நாட்கள் இடைவெளியில் கிடைத்திருந்தன. இலங்கை கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தராக இ. கி. ச. இந்துக் கல்லூரிக்கு 15.09.1990 இலிருந்து அதிபராக இவர் நியமிக்கப்பட்டார். அத்துடன் திருக்கோணமலை மந்திய கொத்தணிப் பாடசாலைகளின் அதிபராகவும் செயற்பட்டார்.

இவர் பதவியேற்ற காலமானது இனத்துவ முரண்பாடுகள், பாதுகாப்பு நெருக்கடிகள், நாட்டின் அமைதியற்ற சூழ்நிலை போன்ற சவால்களை எதிர்கொண்டு செயற்பட வேண்டிய காலமாக இருந்தது. பாடசாலை என்பது ஒரு மூடப்பட்ட நிறுவனமாக இல்லாமல் சமூகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டுமென்ற கொள்கையுடன் இருந்த இவர் கல்லூரியை சமூகம் நோக்கித் திறந்துவிட்டார். சமூக நிறுவனங்களோடும், அரச நிறுவனங்களோடும் தொடர்புகளை வலுப்படுத்தினார். உறங்கிப் போய்க்கிடந்த பழைய மாணவர் சங்கத்தை புனரமைத்து செயற்பட வைத்தார். பழைய மாணவர்கள் கல்லூரி நோக்கித் திரண்டனர். பாடசாலை அபிவிருத்திச் சங்கமும் கல்லூரியின் அபிவிருத்தி நோக்கித் தீவிரமாக செயற்பட ஆரம்பித்தது.

கல்வியமைச்சின் புலமைப்பரிசிலில் 2003ம் ஆண்டில் இலண்டன் சென்ற சமயத்தில் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர் சங்கக் கிளையை புனரமைப்புச் செய்து கல்லூரியின் அபிவிருத்திக்காக அவர்கள் செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தினார். 2011ம் ஆண்டில் கனடா சென்று பழைய மாணவர் சங்கத்தின் ஒன்று கூடலில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு அவர்களையும் ஊக்குவித்தார்.

கல்லூரியின் பௌதிகவள விருத்தியில் புதிய கட்டிடங்களை அமைப்பதில் தீவிரமான ஈடுபாடு காட்டினார். புதிய சம்பந்தர் மண்டபம், நிருவாகக் கட்டிடம், பண்டிதர் வடிவேலு அகம், புதிய காளியப்பு அகம், புதிய நடராஜானந்தா அகம் ஆகியன இவருடைய காலத்திலேதான் அமைக்கப்பட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையை விருத்திசெய்வதற்காக கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட கணினி கற்கைக்கூடம், 2004ம் ஆண்டில் ஐக்கிய இராச்சிய பழைய மாணவர்களின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட கட்புல செவிப்புல சாதன அலகு ஆகியன இவரது தூண்டலின் பெறுபேறுகளே. ஆரம்பப் பிரிவு வளாகத்திற்கான காணியை சுவீகரிப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார் மேலும், கல்லூரி மைதானம் தொடர்பாகக் காணப்பட்ட பல்வேறு சவால்களையும் எதிர்ப்புக்களையும் வெற்றிகொண்டு அதனை கல்லூரி சட்டபூர்வமாக உரித்தாக்கிக் கொண்டமை, கல்லூரியின் வரலாற்றில் இவரது தலைமைத்துவத்திற்கு கிடைத்த ஒரு வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது. இ. கி. ச. இந்துக் கல்லூரியும், இ.கி.சு.ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயமும் ஒன்றிணைந்து 1993 இல் தேசிய பாடசாலையாகியதன் பின்பு. அதிபர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் இந்த இரு பாடசாலைகளினதும் ஆசிரியர்கள், மாணவர்களின் ஒழுங்குகள், கல்விச் செயற்பாடுகள், நிர்வாகம் முதலானவற்றை எந்தவித முரண்பாடுகளும் தோன்றாத வண்ணம் தனது சுய திட்டத்தின் மூலம் வெற்றிகரமாக ஒன்றிணைப்புச் செய்தார்.


இவர் வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாடுகளை செழுமைப்படுத்தியதுடன் உள்ளக மேற்பார்வைத் திட்டத்தினையும் செயற்படுத்தினார். அத்துடன் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் அதிகளவு ஆர்வம் காட்டினார். விளையாட்டு, சாரணர் இயக்கம், பாண்ட் வாத்திய அணிகள், சென்.ஜோன்ஸ் படையணி முதலானவற்றுடன் வீதியோட்டம், சைக்கிளோட்டம் என்பவற்றையும், புதிய வருடாந்த நிகழ்ச்சிகளாக அறிமுகம் செய்தார். கலை இலக்கிய முயற்சிகளில் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக நவராத்திரிக் கலைவிழா, தமிழ இன்னியம் கையெழுத்துச் சஞ்சிகை போட்டிகள் என்பன புதிய வாய்ப்புக்களாக கொண்டு வரப்பட்டன. கல்லூரிச் சமூகத்தின் ஆதரவுடன் சித்திவிநாயகர் ஆலயத்தை அமைத்தார். இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திற்கும் இடையிலான மாபெரும் கிரிக்கட் போட்டியையும் 1993 இல் ஆரம்பித்து வைத்தார்.

தனது நிருவாகத்தில் முறைமைசார் அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். நிருவாகத்தையும். அதிகாரத்தையும் பரவலாக்கினார். இதனால் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் யாவரும் கல்லூரியின் முன்னேற்றத்திற்காக ஒத்துழைப்புடன் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். அதிபர். திரு. சி. தண்டாயுதபாணி அவர்கள் கல்வி அமைச்சின் புலமைப் பரிசில் பெற்று 1997 இல் புதுடெல்லி நீப்பா (NIEPA) நிறுவனத்திற்கும், 2003 இல் ஐக்கிய இராச்சிய பேர்மிங்ஹாம் பல்கலைக் கழகத்திற்கும், 2008 இல் உலக வங்கிக்கும் (ஐக்கிய அமெரிக்கா) சென்றிருந்தார். கல்வி முகாமைத்துவம், அதிபர்களின் தொழில்சார் விருத்தி கல்விப் புனரமைப்பு முதலான விடயங்களிலே சர்வதேச நிறுவனங்களின் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார். மாகாணக் கல்வித் திணைக்களமும் வலயக் கல்வி அலுவலகமும் அதிபர்களுக்காக நடாத்துகின்ற செயலமரவுகளிலே ஒரு வளவாளராக அவ்வப்போது அதிபர் கடமையாற்றுவார்.

இலங்கை கல்வி முன்னேற்றச் சங்கம் 1996ம் ஆண்டில் சிறந்த அதிபருக்கான சேவை விருதை அதிபர் திரு. சி. தண்டாயுதபாணி அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது. தொழிற்சங்க ஈடுபாடும் அதிபருக்கு இருந்தது. 2001 இல் நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தேசிய மாநாட்டில் சங்கத்தின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஆசிரியர்களின் நலன்கள், பிரச்சனைகள், உரிமைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தார்.

12 வருடங்கள் மாணவனாகவும், 8 வருடங்கள் ஆசிரியராகவும், 15 வருடங்கள் அதிபராகவும் என 35 வருடங்களாக கல்லூரிவோடு பிணைந்திருந்த அதிபர் திரு.சி.தண்டாயுதபாணி அவர்கள் 01.06.2004 இல் வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். இரண்டு ஆண்டுகள் அங்கே பணியாற்றியதன் பின்னர் 2006ம் ஆண்டில் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றார். 2007 இல் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டார். மாகாணம் தழுவிய ரீதியில் பொறுப்பு வாய்ந்த ஒரு உயர் பதவியிலிருந்து அர்ப்பணிப்போடு தனது கடமைகளை ஆற்றினார். பின்னர் 09.02.2010 இல் கிழக்கு மாகாணக் கல்வியமைச்சின் பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஒன்றரை வருடங்கள் அப்பதவியிலிருந்து சேவையாற்றியதன் பின்னர் 01.07.2011 இல் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்.

ஓய்வின் பின்னர் ஜேர்மன் சர்வதேச கூட்டு ஒத்துழைப்பகத்தின் (GIZ) சமூக இசைவுக்கான கல்வித் திட்டத்தில் சிரேஷ்ட நிபுணத்துவ ஆலோசகராக 2011 2012ம் ஆண்டுகளில் கடமையாற்றினார். அரசியலில் ஈடுபட வேண்டிய அழுத்தமும் அதிபருக்கு ஏற்பட்டது. 2012ம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் கல்வி. பண்பாட்டலுவல்கள். விளையாட்டுத்துறை அமைச்சராகவும் 2017ம் ஆண்டு வரை பணியாற்றினார்.

அதிபர் அவர்களது மனையாள் திருமதி த.புவனேஸ்வரி அவர்கள் ஆசிரியராகவும், உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மகன் பாலமுரளி, மகள் மேகலா ஆகியோர் முதுநிலை பட்டப் படிப்புக்களை பூர்த்தி செய்தவர்களாக வெளிநாடுகளில் பணியாற்றி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.