ஆளுமை:தங்கராசா, வேலாயுதம்
பெயர் | வேலாயுதம் தங்கராசா |
தந்தை | கனகசபை வேலாயுதம் |
தாய் | வீரசிங்கம் கணேசபாக்கியம் |
பிறப்பு | 1945.04.26 |
இறப்பு | - |
ஊர் | தம்பலகாமம், திருக்கோணமலை |
வகை | எழுத்தாளர், ஆசிரியர், ஓய்வு பெற்ற அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருக்கோணமலை மாவட்டத்தில் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வேலாயுதம் தங்கராசா அவர்கள் தம்பலகாமம் கிராமம் சார்ந்து பணியாற்றிய ஒரு எழுத்தாளர் மற்றும் ஆசிரியர், ஓய்வு பெற்ற அதிபர் ஆவார். இவர் வரலாற்றுப் புகழ் மிக்க தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் மரபுவழி அறக் காவலர்களில் ஒருவராகக் 'கங்காணம்' என்னும் தொழும்பு முறையினைச் செய்பவர்.
இவர் 26.04.1945ம் ஆண்டு தம்பலகாமம் நாயன்மார்திடல் பகுதியில், திரு. கனகசபை வேலாயுதம், வீரசிங்கம் கணேசபாக்கியம் ஆகியோரின் மகனாக பிறந்தார். ஆரம்பக்கல்வியை தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி, தேசிய கல்வி நிறுவனத்தில் பட்டப்பின் படிப்பை முடித்தவர். முதலாந்தர பயிற்றப்பட்ட ஆசிரியர் தகமையுடன் பட்டதாரியாகி முதலாந் தர அதிபராகக் கடமை புரிந்து இளைப்பாறியவர்.
1980களில் இவர் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் தம்பலகாமம் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய கலைப்புலமை மிக்க ஆசிரியர்களான, சங்கீத ஆசிரியை திருமதி. சீதாலட்சுமி சுப்பிரமணியம், கலாபூசணம் சோமசுந்தரம், கவிஞர் பத்மநாதன், தம்பிலுவில் கண்ணமுத்து ஆசிரியர், ஆசிரியைகளான திருமதி. கமலா, திருமதி. கெங்காம்பிகை போன்றோர்களின் அபரிதமான முயற்சியால் நல்ல நாடகங்களில் கதாநாயகனாக நடித்து பலரதும் பாராட்டுதல்களைப் பெற்றுகொண்டார்.
இவர் பிரதான பாத்திரம் ஏற்று நடித்த வீரபாண்டிய கட்டப் பொம்மன், இராசராச சோழன், சாம்ராட் அசோகன், சோக்கரடீஸ் போன்ற நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை. இவை திருக்கோணமலை மாவட்டத்திலும் மேடையேற்றப்பட்டு பாராட்டுதலைப் பெற்றவை. இதே சமயம் நாடக விற்பனர் வீரசிங்கத்தின் சுமதி எங்கே?, தூக்குத்தூக்கி போன்ற நாடகங்களிலும் நடித்து பெரும் புகழீட்டினார். இந்நாடகங்களில் இவருடன் திரு. ச. சித்திரவேல், திரு. க. சின்னராசா, திரு. சி. குணரத்தினம், கந்தளாய் நடேஸ் போன்றோர் நடித்திருந்தனர். இவர் திருக்கோணமலை, சேனையூர் ஆகிய இடங்களில் பேராசிரியர் மௌனகுரு அவர்களால் நடாத்தப்பட்ட நாடகப்பட்டறைகளில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரை எழுதத்தூண்டிய பெருமை இவரது ஆசானும், அதிபருமாகிய திரு. பொ. சித்திரவேல் அவர்களையே சாரும். இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தம்பலகாமம் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றிய அவர் இவரது கட்டுரைகளைப் படித்து பாராட்டியதுடன் மேலும் எழுதுமாறு தூண்டினார். இதேபோலவே மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையின் அதிபர் திரு. கருணாகரன் அவர்களும், அவருக்கு தமிழ் போதித்த பிரபல ஈழத்து எழுத்தாளர்களில் ஒருவரான முல்லைமணி, கலாபூசணம் திரு. ச. அருளானந்தம் ஆகியோர்களும் இவருக்கு தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உண்டாக காரணகர்த்தாக்களாக இருந்தனர்.
அந்நாட்களில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்ற இவரது ஆக்கங்கள் தம்பைபூர் தங்கராசன், சாமிராஜ், வேலாயுதம் தங்கராசா ஆகிய பெயர்களில் வீரகேசரி, தினக்குரல், சுடரொளி, மித்திரன் ஆகிய பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம் எனப் பல ஆக்கங்களாகப் பிரசுரமாகின. வீரகேசரி, சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் தம்பலகாமம் நிருபராகச் பல வருடங்கள் கடமையாற்றியுள்ள இவர், இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் நடத்திய ஊடகவியலாளர்களுக்கான பல பயிற்சிப்பட்டறைகளிலும் கலந்துகொண்டு பயிற்றப்பட்டவர். இவரது ஆக்கங்களில் அவர் எழுதிய 30 சிறுவர் கவிதைகள் தொகுக்கப்பட்டு ஆண்டவளைக் கண்டதுண்டா?என்னும் தலைப்பில் கவிதைத் தொகுதியாக 2006 ஆம் ஆண்டில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு 'சாமி' பிரசுரத்தினூடாக 2008ஆம் ஆண்டில் இந்திய ஞானிகளின் ஆத்மிக சிந்தனைகள், இலங்கையில் ஸ்ரீ சாயியின் லீவாம்ருதம் என்ற இருநூல்கள் வெளிவந்தன.
தம்பலகாமப்பற்றின் கலை, இலக்கியப் பாரம்பரியத்தை ஆவணப்படுத்தும் முயற்சியாக இவரால் 31 கலைஞர்களின் வரலாற்றினைத் தொகுத்த நூல் போற்றுதற்குரிய ஆற்றலாளர்கள் இவர்கள் என்ற தலைப்பில் மிகவிரைவில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது 70 ஆவது அகவையில் தொடர்ந்தும் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும், விழா மலர்களிலும், இணையத்திலும் உற்சாகத்துடன் எழுதிவரும் இவர் அண்மையில் கலாசார திணைக்களத்தின் மூலம் வருடா வருடம் நடாத்தப்படும் கலாபூஷண அரச விருது வழங்கும் விழாவில் 14.12.2014 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கலாபூசணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.