ஆளுமை:ஜீவரத்தினம், காளியப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் காளியப்பு ஜீவரத்தினம்
தந்தை காளியப்பு
தாய் வேலாச்சி
பிறப்பு 1937.05.02
இறப்பு 2022.06.15
ஊர் திருக்கோணமலை
வகை ஆசிரியர்,அதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கட்டைபறிச்சானின் பாரம்பரியமான குடும்பத்தின் பரம்பரை பெருமை கொண்ட குடி வழியில் சோமநாதி அன்னப்பிள்ளையின் மகன் காளியப்புவுக்கும், இராமுப்பிள்ளை பொன்னம்மாவின் மகள் வேலாச்சிக்கும் ஒரே ஒரு தவப் புதல்வனாய் 1937.05.02ம் திகதி பிறந்து ஆசிரியராயும், அதிபராயும் வாழ்ந்தவர் இவர். கட்டைபறிச்சான் பிரதேசத்தில் முதலாவது பயிற்றப்பட்ட ஆசிரியராவார். அரச ஆசிரிய சேவையின் முதலாவது ஆசிரியர் இவரே. 11.05.1959 அன்று ஆசிரிய நியமனம் கிடைக்கப் பெற்றதன் மூலம் இப் பிரதேசத்தின் முதலாவது அரசாங்க ஆசிரியர் எனும் பெருமைக்குரியவரானார்.

ஆரம்பக் கல்வியை சேனையூர் மெதடிஸ்த மிசன் கல்லூரியில் (இன்றைய கட்டைபறிசான் விபுலானந்தர் வித்தியாலயம்) கற்று இடை நிலைக் கல்வியை மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலத்தில் பயின்று அந்தப் பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர்களில் முதன்மை பெற்றவர்களில் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் இவருக்கு திரு. சிப்பிரியான் பொனாண்டோ அவர்களையும், திரு. கிருஸ்ணபிள்ளை, திரு. பஸ்தியாம் பிள்ளை, திருமதி. கிருஸ்னபிள்ளை ஆகியோர் கல்வி கற்பித்துள்ளனர். அந்த நாட்களில் போக்குவரத்து வசதிகள் என பல இடைஞ்சல்கள் மத்தியிலும் விடா முயற்சியின் காரணமாக சிரேஸ்ர தராதர வகுப்பில் தமிழ், கணிதம், குடியியல் தமிழ் இலக்கியம், சித்திரம், சரித்திரம், பூமிசாத்திரம் என எல்லாப் பாடங்களிலும் தனித் திறமை கொண்டவராக இருந்தார். 1953ம் ஆண்டு அரசாங்க பொதுப் பரீட்சைக்கு முகம் கொண்டு மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக் கொண்டார். உயர் கல்விக்கான வசதி வாயப்புகள் இருந்திருந்தால் ஒரு பேராசிரியராக உயர்ந்திருப்பார். ஆனாலும் சரித்திர பாடம் கற்பிப்பதில் அவர் ஒரு பேராசிரியரே.

கல்விக்கு கரையில்லை என்பர் அது போலவே ஆசிரியர் பொதுத் தேர்வில் 1954 ஆம் ஆண்டு சித்தியடைந்து 1956, 1957 ஆம் ஆண்டுகளில் மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக்கலாசாலையில் பயின்று பயிற்றப்பட்ட ஆசிரியராக தகுதி பெற்று தான் பிறந்த கட்டைபறிச்சான் மண்ணுக்கு பெருமை சேர்த்தார். திருகோணமலை பெருந்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையில் (இன்று பெருந்தெரு விக்கினேஸ்வரா வித்தியாலயம்) முதல் நியமனம் பெற்று தன் ஆசிரிய சேவையை தொடங்கி தொடர்ந்து, சேனையூர் மத்திய கல்லூரி, மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக சிறப்பாக பணி புரிந்து எல்லோர் மத்தியிலும் நல்லாசிரியர் எனும் மதிப்பு பெற்றார்.

20.03.1972 ஆம் ஆண்டு இளக்கந்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்று தொடர்ந்து மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயத்தில் உப அதிபராக கடமையாற்றினார். 1979 முதல் 1982 வரை கட்டைபறிச்சான் விபுலாநந்தர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றி சிறப்பான சேவை செய்தார் அதனை தொடர்ந்து திருகோணமலை மேற்கு தமிழ் மகாவித்தியாலயத்தின் (இன்றய விபுலாந்தர் கல்லூரி) அதிபரானார். தொடர்ச்சியான கல்விச் சேவையில் மீண்டும் மூதூர் புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக கடமையேற்றார். தன் கல்விச் சேவையின் நிறைவில் திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றி 1997ஆம் ஆண்டு தன் 38வருட ஆசிரிய சேவையை நிறைவு செய்தார்.

குறிப்பாக சேனையூர் மத்திய கல்லூரியின் வளர்ச்சியில் அன்னாரின் பங்கு மிக முக்கியமானது உயர்திரு சி. நடராஜா அதிபர் அவர்களுடன் 1964 தொடக்கம் 1971 ஆம் ஆண்டு வரை கடமையாற்றி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எனும் தரத்திலிருந்து மகா வித்தியாலயமாக தரம் உயர அர்ப்பணிப் புடனான சேவையை வழங்கினார். கல்லூரியின் சாரணர் குழுவின் தொடக்க கர்த்தாக்களின் ஒருவராக செயல்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்விப் பணி மாத்திரமல்லாமல் சமூகப் பணியிலும் முத்திரை பதித்தவராகவே அவரது சேவைகள் முக்கியம் பெறுகின்றன. கட்டைபறிச்சான் சேனையூர் பிரதேசத்தின் சமூக சமய வளர்ச்சியில் அன்னாரின் பங்கும் பணியும் கவனிக்கத்தக்க பெறுமானம் உடையது. கட்டைபறிச்சான் கிராம முன்னேற்ற சங்கம், கட்டைபறிச்சான் சிறிமுருகன் சன சமூக நிலையம், கட்டைபறிச்சான் சிறி முருகன் விளையாட்டுக்கழகம் ஆகியவற்றில் முக்கிய பதவிகளை வகித்து தன் மண்ணோடும் மக்களோடும் ஒன்றிய வாழ்வில் உயரிய சேவையாளன் எனும் பெருமை பெற்றார். அரசியலில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றோடு பெரும் பிணைப்புக் கொண்டவராக தமிழ் உணர்வு மிக்கவராக அமரர் அ. தங்கத்துரை, அமரர் க. துரைரெட்டினசிங்கம் ஆகியவர்களின் அரசியல் வெற்றிக்கு பக்கத் துணையாக நின்றவர். அத்தோடு இன்றைய திருக்கோணமலை பாராளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் அவர்களுடனும் நெருக்கமான நட்புக் கொண்டிருந்தவர் என்பதும் இங்கு மனம் கொள்ளத்தக்க விடயங்களாகும்.

விளையாட்டுத் துறையிலும் தன் மிகு திறனை வெளிப்படுத்தியவர். கட்டைபறிச்சான் சிறிமுருகள் விளையாட்டுக் கழகத்தின் நட்சத்திர கரப் பந்தாட்ட வீரர். களத்தில் அவர் விளையாடுவது தனி அழகு பந்ததை மறுபக்கத்துக்கு செலுத்தி எதிர் அணியினரை திக்கு முக்காடச் செய்து தன் அணியின் வெற்றிக்கு துணை நிற்பவர். கட்டைபறிச்சான் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு தன் குடும்பத்தின் சார்பில் கொட்டியாரத்தின் முதல் சித்திரத் தேரை அமைத்துக் கொடுத்து சமயப் பணியில் தன் பங்களிப்பின் சிறப்பை உணர்த்திய பெருமகன். அத்தோடு ஊரில் நடைபெற்ற பல்வேறு கோயில் விழாக்கள், வேள்விகள், சடங்குகள் என்பவற்றிலும் அக்கறை செலுத்தி பணியாற்றியவர் என்பதும் இங்கு கவனம் பெறுகிறது.

03.02.1964 ஆம் ஆண்டு கட்டைபறிச்சானின் பாரம்பரியப் பண்பாடுமிக்க கதிர்காமத்தம்பி (கொம்பநாச்சியார்) பொன்னம்மா இணையரின் மகளான அன்னப்பாக்கியம் அவர்களை இல்லற துணையாய் ஏற்றுக் கொண்டு நல்லற வாழ்வை நலம்பட தன் இறுதிக் காலம் வரை இணையற்ற குடும்ப வாழ்வுக்கு இலக்கணமானார். ஜீவஜோதி, ஜீவானந்தி, ஜீவசாந்தி, ஜீவகன் ஆகிய மக்களையும், பெறா மகள் அகிலாவையும் அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாக்கி, நாககாந்தன், ரகுநாதன், திருச்செல்வம், லிங்கராஜ்குமார் என நல் மருமக்களையும் பெற்று தன் பெரு வாழ்வின் சந்தோசங்களை தன் கண் முன்னே கண்டு களித்து மகிழ்ந்தார். மூதூர் கிழக்கின் முதாலவது வைத்தியர் (டொக்டர்) எனும் பெருமை பெற்றவர் மகள் ஜீவசாந்தி என்பது இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கது.

இவர் தனது 85 வது வயதில் 15.06.2022 இறைபதம் அடைந்தார்.