ஆளுமை:சோமாஸ்கந்தக்குருக்கள், வைத்தீஸ்வரக்குருக்கள்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள்
தந்தை வைத்தீஸ்வரக்குருக்கள்
தாய் தங்கநாச்சியார்
பிறப்பு 10.03.1932
இறப்பு 03.08.2006
ஊர் திருகோணமலை
வகை குருக்கள், சமய செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைத்தீஸ்வரக்குருக்கள் சோமாஸ்கந்தக்குருக்கள் அவர்கள் சிவபூமியாம் திருகோணமலையில் வைத்தீஸ்வரக்குருக்கள், தங்கநாச்சியார் தம்பதிகளின் ஏகபுத்திரராக 1932.03.10 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறப்பால் குருக்கள், படிப்பால் புலவர், தொழிலால் பூசகர், சிந்தையால் வைத்தியர், பொழுதுபோக்கால் சோதிடர், தன்முனைப்பால் மின்பொறியியலாளர், தொண்டால் ஆசிரியர், வாழ்வியலில் ஓர் சம்சாரி, சமூகத்தில் பொறுப்புள்ள தந்தையும், பாசமிகு பேரனும் ஆவார்.

திருக்கோணேஸ்வர சந்தான பரம்பரையில் தோன்றிய இவருக்கு சிவபெருமானின் சிறப்பு மூர்த்தமாகிய தோற்றத்தினைக் குறிக்கும் "சோமாஸ்கந்தர்" எனும் நாமத்தினை பெற்றோரும், சுற்றோரும் சூட்டி மகிழ்ந்தனர். பெற்றோருக்கு மட்டுமன்றி விஸ்வலிங்க குருக்கள் சரஸ்வதியம்மா, சபாபதி ஐயர் மனோன்மணி அம்மா என்ற இரு அத்தைமார் குடும்பத்துக்கும், அருமைக் குழந்தையாக வளர்ந்தார். இவரோடு கூடிப்பிறந்தோர் பலரல்ல பத்மாவதி அம்மா என்னும் ஒருவர் மட்டும் தான். இவர் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை பெருந்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் (விக்னேஸ்வரா தமிழ் மகா வித்தியாலயம்) தொடர்ந்து இராமகிருஸ்ண இந்துக் கல்லூரியிலும் கற்றார். 1948 இல் தந்தையின் மறைவின் பின் அவரால் நடாத்தி வரப்பட்ட ஆலய பொறுப்புகளையும், அவரது பேரனார் சிவஸ்ரீ ஏ. வை. விஸ்வலிங்கக் குருக்கள் அவர்களின் ஆலயப் பொறுப்புகளையும் கையேற்று திறம்பட நடாத்தி வந்தார். அந்த ஆலயங்களாவன திருக்கோணேஸ்வரர் ஆலயம், சல்லி அம்மன் ஆலயம், மடத்தடி முத்துமாரியம்மன் ஆலயம், சமாது தங்கவிநாயகர் ஆலயம், தெய்வானைப் பிள்ளையார் ஆலயம், உப்புவெளி பெரியதொடுவாய்ப் பிள்ளையார் மற்றும் பத்திரகாளி ஆலயம் ஆகும்.

இளமையிலேயே தந்தையை இழந்த இவர், தமது தாயாரின் அரவணைப்பிலும் பேரனார் ஏ. வை. விஸ்வலிங்கக் குருக்களின் மேற்பார்வையிலும் கல்வியிலே சிறந்து, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக விளங்கினார். திருகோணமலையில் ஆங்கிலப்பாடத்தில் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்தார். பின்னாளில் வில்லூன்றிக் கந்தசுவாமி தேவஸ்தான பிரதம குருவாக இருந்த ஆரிய திராவிட பாஸா விற்பன்னர் பிரம்ம ஸ்ரீ பூர்ணானந்த சிவாச்சாரியாரின் பெருமைமிகு புத்திரர்களுள் ஒருவராகிய வியாகரண சிரோன்மணி சிவாச்சாரிய கலாநிதி பூர்ணானந்த குருகுல அதிபர் சிவஸ்ரீ பூரண தியாகராஜ அவர்களின் தூண்டுதலுக்கும், வேண்டுதலுக்கும் ஏற்ப அண்ணாமலை சிவாச்சாரியார் இந்தியாவிலுள்ள சிதம்பரம் சர்வகலாசாலையில் கசடறக் கற்று "புலவர்" என்னும் சிறப்புப்பட்டத்தை பெற்றார். அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி கற்ற காலத்திலேயே சிதம்பரம் ஆறுமுகநாவலர் சித்தாந்த கல்லூரியில் சேர்ந்து கற்று "சைவசித்தாந்த புலவர்" எனும் பட்டமும் பெற்றார். இவரது படிப்புக்கு உறுதுணையாக அவரின் தமக்கையாரின் கணவர் இ. கந்தசாமி ஐயா அவர்கள் இருந்து கவனித்து வந்தார். நாடு திரும்பிய அவர் பலகலைகளையும் கற்றதோடு சோதிடம், வைத்தியம், பல்வேறு கண்டுபிடிப்புகளிலும் சிறந்து விளங்கினார். ஆலயங்களின் தூண்டுதலுக்கேற்ப சிவப்பிராமண ஒன்றியத் தலைவராகவும் இருந்தார்.

பாடசாலை நாட்களில் இவரது பாடசாலைத் தோழர்களான செல்வர்கள் சிங்காரவேல், T. சச்சிதானந்தம், யு. குலவீரசிங்கம், சுப்பிரமணியம் சின்னத்துரை, செந்திவேல் போன்றவர்களோடு சேர்ந்து 1953ம் ஆண்டில் திருவள்ளுவர் கழகத்தை ஆரம்பித்தார். இந்த கழகத்தினூடாக பல அரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்தோடு மடத்தடியில் இருக்கும் இல்லத்தில் இராப்பாடசாலை, "கமலை" என்ற கையெழுத்துப் பத்திரிகை போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக இவரது முனைப்பால் திருவள்ளுவர் கழகத்தால் நடாத்தப்பட்ட "திருக்குறள் மாநாடு" எவராலும் மறக்கமுடியாத ஒன்றாக இந்தியாவிலிருந்து வருகை தந்த அறிஞர்களும், கலைஞர்களும் வியந்து பாராட்டினர். இந்த மாநாட்டுச் சிறப்புக் கட்டுரை இந்தியச் சஞ்சிகையான "கல்கியில்" வெளிவந்தது குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சமாகும். மேலும் இவர் திருகோணமலை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும், சத்ய சாயி சேவா சமித்தியின் தலைவராகவும், சிவசேகரனர் அறக்கட்டளை அமைப்பின் தலைவராகவும், இந்து இளைஞர் பேரவையின் ஆலோசகராகவும் பலவருடங்கள் பதவி வகித்தார்.

1963 ஆண்டு திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது கும்பாபிஷேக மலர் வெளியிடும் பணியில் "சைவப்புலவர்" பண்டிதர் இ. வடிவேல் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு கற்கோயில் மட்டும் எடுத்தால் போதாது திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு அரிய பெருமக்கள் சொற்கோயிலும் எடுக்க வேண்டும் என்ற தினகரன் செய்தியால் உந்தப்பட்ட புலவர் அவர்கள் தனது நண்பர் அ. சிறீஸ்கந்தராசா (B.A.Hons) அவர்களுடன் சேர்ந்து 1963ம் ஆண்டில் "திருக்கோணேஸ்வரம்" எனும் வரலாற்று நூலை வெளியிட்டனர். அந்நூலில் திருகோணமலை நகரிலுள்ள திருக்கோயில் வரலாறுகள் பலவும் அடங்கியுள்ளது. திருகோணமலை பிரதான வீதியில் அமைந்துள்ள சமாது தங்க விநாயகர் ஆலய வரலாறும் இந்நூலில் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

1967ல் தியாகராஜா ஐயாவின் திருமகளாம் தியாகேஸ்வரி அம்மையாரின் கரம் பிடித்து இல்வாழ்கையில் நுழைந்தார். உமாதேவி, சிவரஞ்சனி, சத்தியநாதன், சிவகுமாரன் எனும் நான்கு நன்மக்களைப் பெற்று தந்தையுமானார். 1971 இல் பேரனார் சிவஸ்ரீ ஏ. வை. விஸ்வலிங்கக் குருக்களால் இவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஆச்சாரியார் குருக்களாகினார். இவரது சமயப்பணிகளில் சல்லி அம்மன் ஆலயம், சமாது தங்கவிநாயகர் ஆலயம், உப்புவெளி பெரியதொடுவாய்ப் பிள்ளையார் ஆலயம் சிறப்புடையனவாகும்.

இல்வாழ்க்கையின் இருபத்து மூன்றாம் வருடத்தில் 1990 ஆம் ஆண்டில் நம்நாட்டின் கலவரத்தால் நாட்டை விட்டு தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தார். அங்கு சென்ற அவர்களை அன்பு மறவா அவர் நண்பர் பி. கே. வேலாயுதம் அவர்கள் அரவணைத்தார். அதுமட்டுமல்ல ஆண்டவனைப் போல் வெளிநாட்டில் இருக்கும் அவர் அன்பு மைத்துனர் தி. பரமராஜா கைகொடுத்தார். இவர்களின் உதவியுடன் தனது பிள்ளைகளை தன்னைப் போலவே தமிழ்நாட்டில் உயர்கல்வி கற்கவைத்து நால்வரையும் பட்டதாரிகளாக்கி மகிழ்ந்தார். பிள்ளைகளின் கல்விசார் கடமையினை முடித்து 1994ஆம் ஆண்டில் நாடு திரும்பினார். நாடு திரும்பியதும் தன்னால் நிர்வகித்து வரப்பட்ட அவரது பாரம்பரிய உரிமைகளான ஆலயப்பொறுப்புகள் அனைத்தையும் கையேற்றார். எனினும் அவரது சந்ததியினரால் நிர்வகிக்கப்பட்ட முதன்மையான ஆலயங்களுள் ஒன்றான மடத்தடி முத்துமாரியம்மன் ஆலய உரிமை மட்டும் அவரும் அன்பர்களும் விரும்பிய போதும் கயவர்களான உருத்திராட்சப் பூனைகளால் அவரது உரிமை கையளிக்க மறுக்கப்பட்டது. பின்னர் அவரது அன்புக்குரியவர்களாலும் ஆலய அயலவர்களாலும் மீள உரிமையை சட்டமூலமாக பெற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்ட போதும் இவ்வாறு கீழ்த்தரமாக தட்டிப்பறிக்கப்பட்ட தனது உரிமையினை அந்த கயவர்களிடம் இருந்து மீளப்பெற தான் விரும்பவில்லை என கூறிவிட்டார்.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறா நாவினால் சுட்ட வடு என்ற வள்ளுவனின் வாக்குப்போல் அவரது உரிமை கையளிக்க மறுக்கப்பட்டதனால் பட்டவடு அவர் மனதில் நீங்காதிருப்பினும் தன்னால் நிறைவேற்றப்படாத தனது உரிமைசார் கடமைகளை மீட்டெடுக்க தனது மக்களுக்கு கோணேசப்பெருமானும் தங்கவிநாயகரும் அருள்புரிவார் என்று கூறுவார்.

பிள்ளைகளின் கல்விப்பயனை கண்டுகளித்து பின்னர் நான்கு பிள்ளைகளுக்கும் ஜெயக்குமார், அருந்தவகுமார், சிந்துஜா, மோனிகா ஆகியோரை திருமணம் செய்து வைத்து கமலபாதன், ரகுப்பிரியன், தனுஜா, பிரணவ் ஆகிய பேரப்பிள்ளைகளையும் கண்டு களிப்படைந்தார். இவ்வாறு இன்புற்றிருந்த காலத்தில் சமாது தங்கவிநாயகர் ஆலயத்தினை முற்றுமுழுதாக புனருத்தாரணம் செய்து 2004.06.13 ஆம் திகதியன்று மிகவும் சிறப்பாக மஹா கும்பாபிஷேகத்தினை நடாத்தி பேரானந்தமடைந்தார்.

தனது வாழ்நாளில் இரண்டு தடவைகள் சமாது தங்கவிநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகத்தினை நடாத்த கிடைத்த பெரும் பேற்றினையும் 55 ஆண்டுகள் தங்கவிநாயகப் பெருமானின் திருமேனி தீண்டி தொண்டு செய்யும் பாக்கியம் கிடைத்தமையையும், உப்புவெளி பெரியதொடுவாய்ப் பிள்ளையார், காளி கோயில் புனருத்தாரண வேலைகள் செய்வித்தலையும் நினைத்து இறும்பூது எய்திய போது பேரிடிபோல் மூத்தபுதல்வி உமாதேவியின் மரணச்செய்தி கிடைத்தது. மகளின் மறைவை மறக்கமுடியாமல் தவித்தார். பின்னர் தனது ஆண்மக்களை காணும் ஆவல் கொண்டு கனடா சென்று பிள்ளைகளையும், மருமக்களையும், பேரனையும் கண்டு களித்த களிப்பு பொறுக்கவில்லை காலனுக்கு, மனைவி, பிள்ளைகள் கதறியழ காலனவன் 03.08.2006தனில் காவு கொண்டான்.