ஆளுமை:செல்வஜோதி, நடராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜா செல்வஜோதி
தந்தை நடராஜா
தாய் தெய்வநாயகி
பிறப்பு 1951.01.22
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை சமய செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருக்கோணமலையில் 1951.01.22 ஆம் திகதி நடராஜா, தெய்வநாயகி தம்பதியினருக்கு மகனாக செல்வஜோதி அவர்கள் பிறந்தார். தன்னுடைய கல்வியை ஸ்ரீ சண்முக வித்தியாலயம் (முன்னர் கலவன் பாடசாலை), இந்துக்கல்லூரி என்பவற்றில் பயின்றார். பின்னர் திருக்கோணமலை பொது நூலகத்தில் கடமையாற்றியதோடு, பல சமய, சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆலயங்களில் தொண்டு செய்தல், கூட்டுப்பிரார்த்தனைகளை மேற்கொள்ளல், சைவசமய போட்டிகளை நடாத்தி இளந்தலைமுறையினரிடையே ஆத்மீக எழுச்சியை ஏற்படுத்தினார். இறைவனது புகழ் பாடுகின்ற வகையில் திருவாசகம் முற்றோதல், பன்னிரு திருமுறைகள் முற்றுமோதல் போன்றவற்றை ஏனைய அடியார்களுடன் சேர்ந்து ஆலயங்கள் தோறும் பாடி வருகின்றார். அதுமட்டுமல்லாது எம்முடைய சைவ அடியார்களை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருக்கேதீச்சரம், புத்தளம், கதிர்காமம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று, பல நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைத் தரிசிக்கும் பாக்கியத்தை ஏற்படுத்தும் மிக உன்னதமான பணியை மேற்கொண்டு வருவது சிறப்பு.

சைவ மக்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்ற ஒரு பண்பாடாக பாத யாத்திரை அமைகின்றது. திருக்கோணமலையில் இருந்தும் பலர் அவர்களது வயதுமூப்பு, வேலைக்கால விடுமுறை, குடும்ப யாத்திரை என்பவற்றிற்கேற்ப குழுக்கள் குழுக்களாக கதிர்காமம், வெருகல் போன்ற ஆலயங்களுக்கு வேல் தாங்கி பாத யாத்திரை சென்று வருவது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகும்.

இந்த வகையில் உப்புவெளி அருள்மிகு சோலை வைரவர் ஆலய பாதயாத்திரை குழுவின் செயலாளரான செல்வஜோதி ஐயா அவர்கள் “வேல் எடுத்து வா..." என்ற வேலவனின் வாக்குக்கு இணங்க தலைவர் சத்தியமூர்த்தி ஐயாவுடனும், அடியார்கள் பலருடனும் இணைந்து வெருகலம்பதி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றமை இறைவயப்பட்ட நிலையையே காட்டுகின்றது.

இதன்போது திருக்கோணேஸ்வரத்திலிருந்து வெருகலம்பதி சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு திருக்கோணமலை, ஆலங்கேணி, மூதூர், ஈச்சிலம்பற்று போன்ற இடங்களிலுள்ள 60 க்கும் மேற்பட்ட ஆலயங்களைத் தரிசித்தும், அங்கே தங்கியும் பஞ்சபுராணம், அகஸ்தியர் தேவார திரட்டுப் பாடல்கள் பாடியும், கந்தசஷ்டிக் கவசம் ஓதியும் கிராமங்களில் ஆத்மீக எழுச்சியை ஏற்படுத்தியவாறு செயற்பட்டு வருவது கண்கூடாகத் தெரிகிறது.

வில்லூன்றி கந்தசுவாமி ஆலய ஸ்ரீமுருகன் தொண்டர் சபையின் செயலாளராக சுமார் 30 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இதன்போது யாழ்ப்பாணம், மூதூர், ஈச்சிலம்பற்று (யுத்த வன்செயல் காலங்களில்) போன்ற இடங்களில் இருந்து திருக்கோணமலைக்கு பல்வேறு பணியின் காரணமாக வருகின்ற மக்கள் தங்குவதற்கு இடம் வழங்கி, பாதுகாப்பும் வழங்கி உதவிகள் புரிந்துள்ளார்.

திருக்கோணமலையின் ஆத்மீகப் பெரியவர்களான சுவாமி கெங்காதரானந்தா, சுப்பிரமணியம் சாமியார், காந்தி ஐயா, அகத்தியர் அடிகளார் போன்றோரின் வழிகாட்டலில் பல ஆத்மீகப் பணிகளை முன்னெடுத்து வந்துள்ளார். திருக்கேதீச்சர திருவிழாவில் முதலாம் நாள் இரவுத்திருவிழா திருக்கோணமலை மாவட்ட சைவ மக்களுக்கானது. "திருக்கோணமலை மாவட்ட திருக்கேதீச்சர ஆலய திருவிழாச்சபை" என்னும் அமைப்பின் செயலாளராக இருந்து இங்குள்ள அடியார்களை திருக்கேதீச்சரத் திருவிழாவுக்காக அழைத்து செல்லும் பணியையும் மேற்கொண்டு வருகின்றார்.

அத்தோடு திருக்கோணமலை மாவட்ட இந்துமாமன்ற உறுப்பினராகவும், வடகிழக்கு நூலக பணியாளர் ஒன்றியத்தின் முன்னாள் செயலாளராகவும், திருக்கோணமலை மாவட்ட ஓய்வூதிய சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வருகின்ற ஐயா அவர்கள் 'நூலகம்' என்ற சஞ்சிகையையும், 108 போற்றிகள், தோத்திரப் பாடல்கள் போன்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார். இவ்வாறு ஆத்மீகப் பணியாற்றி வருகின்ற தொண்டர் செல்வஜோதி ஐயா அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு இராவணசேனை அமைப்பினால் "இலங்கேசன் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.