ஆளுமை:சுப்பிரமணியம், தாமோதரம்பிள்ளை பிரான்சிஸ்
பெயர் | தாமோதரம்பிள்ளை பிரான்சிஸ் சுப்பிரமணியம் |
தந்தை | தாமோதரம்பிள்ளை |
தாய் | பரஞ்சோதி |
பிறப்பு | 1937.11.22 |
இறப்பு | 2018.02.03 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர், ஓவியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாடறிந்த எழுத்தாளர் தாமோதரம்பிள்ளை பிரான்சிஸ் சுப்பிரமணியம் அவர்கள் 1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் திகதி தாமோதரம்பிள்ளை மற்றும் பரஞ்சோதி தம்பதிகளுக்கு மகனாக திருகோணமலையில் பிறந்தார்.
பயிற்றப்பட்ட ஆசிரியராக, அதிபராக பணிபுரிந்து, திருகோணமலை நகராண்மைக் கழகத்தின் பிரதி நகரபிதாவாக கடமையாற்றி, புனிதவளனார் வித்தியாலயத்தின் அதிபராக இருந்து தனது 37 வருட ஆசிரிய சேவையைப் பூர்த்தி செய்து 60 ஆவது வயதில் ஓய்வு பெற்ற இவர், ஓர் சிறந்த நாடக ஆசிரியர், ஓவியர், நகைச்சுவைத் துணுக்காளர், நடிகன், சமூக சேவகன், அரசியல் செயற்பாட்டாளன் போன்ற பன்முக ஆளுமை கொண்டவராகக் காணப்பட்டார்.
பாடசாலையில் கல்வி கற்கின்ற காலத்திலேயே தனது வாழ்வில் கண்ட உண்மைச் சம்பவமொன்றைக் கதையாக்கி, 'அறிவுச் சுடர்' என்ற கையெழுத்துப் பிரதியில் வெளியிட்ட இவரின் கதையைப்படித்த ஆசிரியர்கள், இக்கதையைப் பத்திரிகைக்கு அனுப்பு என்று தூண்டியதன் பேரில் இந்தியாவில் இருந்து வரும் 'கரும்பு' சிறுவர் சஞ்சிகைக்கு 'விடாமுயற்சி' என்ற இச்சிறுவர் கதையை அனுப்பினார். அது 1954 ஆம் ஆண்டு பிரசுரமாகியதன் மூலம் எழுத்துலகில் பிரவேசித்த இவர், ஈழகேசரியில் 1955இல் 'சந்தனக்குச்சு' என்ற சிறுகதையை எழுதினார். இதுவும் சிறுவர்களுக்குரிய கதையாகவே இருந்தது.
1960 ஆம் ஆண்டு சுதந்திரன் பத்திரிகையில் இவர் எழுதிய, 'கடித மன மாற்றம்" என்ற சிறுகதையே இவரது முதற் சிறுகதையென்று சொல்லலாம். கிளிவெட்டிக் கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்த வேளை, நண்பர் ஒருவருக்கு திருமணப்பேச்சு நடைபெற்றதாகவும், பெண்ணைப் பிடிக்காத மாப்பிள்ளை தனது பெற்றோருக்கும். பெண்ணுக்கும் ஏன் பிடிக்கவில்லையென்று விபரமாக கடிதம் ஒன்று எழுதி முகவரியிடும் போது பெண்ணுக்குச் சேர வேண்டிய கடிதம் பெற்றோரிடமும், பெற்றோருக்கு சேரவேண்டிய கடிதம் பெண்ணிடமும் சேர்ந்து, ஏற்பட்ட குழப்பமும், பின் அப்பெண்ணையே நண்பர் மணம் முடித்த அந்த உண்மைச் சம்பவமே, 'கடித மன மாற்றம்' என்ற தலைப்பில் சிறுகதையாக வெளிவந்துள்ளது.
'மீண்டும் திருமணம்' (1964), 'ராதா, எண்ணும் எழுத்தும்' (1964), 'ஒற்றுமையின் பலம்', 'இதுதான் பயிற்சியா'?, 'இவர்களும் ஆசிரியர்களா?', 'இன்னும் எத்தனை நாளைக்கு', 'திறந்த கல்லறை', 'திருத்தப்படும் தீர்மானங்கள்', சுலைமகள் என 16 சிறுகதைகளை எழுதியுள்ளார்.
இவரது சிறுவர் சிறுகதைகள் ‘விடாமுயற்சி’ என்ற பெயரில் திருமலை புனித வளனார் வித்தியாலய மாணவர் மன்றத்தினால் (1960) வெளியீடு செய்யப் பட்டுள்ளது. 'நீதி நிலைக்கட்டும்' (சிறுவர் கதை - 1961), சந்தனக்குச்சு' (1965) சிறுகதைத் தொகுதி என்பன பிதா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்ற கால அனுபவம், மாணவ ஆசிரிய அனுபவங்கள், பண்டாரவளை, கிளிவெட்டி போன்ற இடங்களில் ஆசிரியராகக் கடமையாற்றிய அனுபவங்களைத் தொகுத்து 'சந்தனக்குச்சு' என்னும் தொகுதியாக வெளியிட்டுள்ளார். ராதா, கலைமகள், தினகரன், வீரகேசரி, விவேகி சதந்திரன் ஆகியவற்றில் சுமார் 16 சிறுகதைகளை எழுதிய இவருக்கு, நாடகத் துறையில் அதிக நாட்டம் இருந்தமையினால், சிறுகதைத்துறையின் மீது கவனம் செலுத்தவில்லை.
இவர் எழுதிய 'ஒற்றைப்பனை' என்ற சிறுகதை மிகப் பிரபல்யமான சிறுகதையாகும். திருகோணமலை கடற்கரையில், தனியொரு பனையாக நின்ற ஒற்றைப் பனையொன்றை கதாபாத்திரமாக வைத்து, இவர் எழுதிய மேற்படி கதைத் தலைப்பில், சிறுகதைத் தொகுப்பொன்று ஈழத்து இலக்கிய சோலையின் முதல் வெளியீடாக 1974 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
இவரது கலை, இலக்கிய, ஓவியத்துறைகளில் ஆற்றிய சேவையைப் பாராட்டி 2000 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுநரால் ஆளுநர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். அத்துடன் ‘மூத்த கலைஞர் விருது’, ‘கலாபூஷணம்’ போன்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார். மேலும் இவர் சில காலம் நிலா என்ற பத்திரிகையை நடத்தி வந்தார்.
இவர் 2018 ஆண்டு மாசி மாதம் 3 ஆம் திகதி இறைபதம் அடைந்தார்.