ஆளுமை:சுபாஜினி, சக்கரவர்த்தி
பெயர் | சுபாஜினி |
தந்தை | சுப்பிரமணியம் |
தாய் | முத்துரட்ணம் |
பிறப்பு | 1954.02.07 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர், கல்வியாளர், கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சுபாஜினி, சக்கரவர்த்தி (1954.02.07) மட்டக்களப்பில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் முத்துரெட்ணம். ஆரம்பக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராமகிருஸ்ண மிசன் மகளிர் வித்தியாலயத்திலும் இடைநிலை உயர்கல்வியை மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையிலும் கற்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வர்த்தகப் பட்டதாரியாவார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவை முடித்து இலங்கை நிர்வாக சேவைப் (S.L.E.A.S) பரீட்சையிலும் தேறியவர். மட்டு புனித சிசிலியா பெண்கள் பாடசாலையில் ஆசிரியராகவும் மட்டக்களப்பு மாவட்ட கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் (திட்டமிடல்), மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் அதிபராகவும் கடமையாற்றி, வலயக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். பேச்சு, கட்டுரை, கவிதை, நாடகம், நாடகப் பிரதி எழுதுதல், நாடகம் தயாரித்தல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். நாட்டுக்கூத்தில் மிகுந்த ஆர்வமுடைய சுபாஜினி. இவர் எழுதித் தயாரித்த ”சுபத்ரா கல்யாணம்”, நாட்டுக்கூத்து தமிழ்த்தினப் போட்டியில் தேசியமட்ட விருதினைப் பெற்றது. தொடர்ந்து ”கர்ணன்”, ”பாதுகை”, ”வாலிவதம்”, ”பாசுபதம்”, ”அபிமன்யு”, ”அல்லி” போன்ற வடமோடிக் கூத்துக்களையும் ”கத்தவராயன்”, போன்ற தென்மோடிக் கூத்துக்களையும் எழுதி அண்ணாவியாரின் உதவியுடன் தயாரித்து பாடசாலை தமிழ்த்தினப் போட்டியில் மேடையேற்றியுள்ளார் சுபாஜினி. பல கூத்துக்கள் இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. ”சிலைகள்”, ”இராவணேசன்”, ”அம்பை வென்ற அன்பு”, இவர் பிரதி எழுதித் தயாரித்த நாடகங்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றது. மட்டு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை அதிபராக இருந்த காலத்திலேயே முதலாவது ஜனாதிபதி சாரணியத்தை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது. செங்கதிர், மனிதம், வின்சன்ட் பாடசாலையின் பேழை, பூபாளம் ஆகியவற்றிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளன. சமூகசேவையாளராகவும் தன்னை அடையாளப்படுத்தும் சுபாஜினி BUDS என்ற அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் செயலாளராகவும் உள்ளார்.
விருதுகள்
சிறந்த இக்கியவாதிக்கான விருது 2018ஆம் ஆண்டு சிறந்த இலக்கியவாதிக்கான விருது 2019ஆம் ஆண்டு தமிழ் ஓசை பத்திரிகை வழங்கியது. WSO என்ற நிறுவனம் 2007ஆம்ஆண்டு சிறந்த நிர்வாகியென்ற விருதை வழங்கியது.
குறிப்பு : மேற்படி பதிவு சுபாஜினி, சக்கரவர்த்தி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
வளங்கள்
- நூலக எண்: 10883 பக்கங்கள் 2-5,6-9