ஆளுமை:சுந்தரலிங்கம், சின்னத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்துரை சுந்தரலிங்கம்
தந்தை சின்னத்துரை
தாய் வள்ளிநாயகம்
பிறப்பு 1951.03.11
ஊர் திருக்கோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் 'திருமலை சுந்தா' என்கிற திருகோணமலையைச் சேர்ந்த சின்னத்துரை சுந்தரலிங்கம் 1951.03.11 இல் பிறந்தவர். திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். 17 வது வயதில் இவரது கன்னிக் கவிதை ஜோதி வார இதழில் வெளியானதன் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். பல புனைபெயர்களில் இலக்கியம் படைத்தாலும் "திருமலை சுந்தா" என்ற புனைப்பெயர் மூலம் அதிகம் அறியப்பட்டவர். என்னை அழைக்கிறாள் என்ற இவரது முதலாவது சிறுகதை 1971 இல் மித்திரனில் வெளியானது. சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், சிரித்திரன், அபியுக்தன், சுடர் உள்ளிட்ட பத்திரிகை, சஞ்சிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. 150க்கு மேற்பட்ட சிறுகதைகள் இதுவரை எழுதியுள்ளார்.

இதனை விட பல்வேறு நாடகங்களும் எழுதியுள்ளார். தினரகன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் இவரது நாடகங்கள் பிரசுரமாகி உள்ளன. இலங்கை வானொலியில் இவரது பல ஈழத்து பாடல்கள் ஒலித்துள்ளன. வேள்வி, விழியோரத்துக் கனவுகள், நாளையைத் தேடும் மனிதர்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகள், நான் - அவள் என்ற குறுங்கதைத் தொகுதி, அம்மா, தொலைந்த நாட்கள் ஆகிய கவிதைத் தொகுதிகள், சடங்கு - கட்டுரைத்தொகுதி, போராடப் பிறந்தவர்கள் - நாவல், சிவனொளி சிற்றிதழ் தொகுப்புகள் என இவரது 10 நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.

மாணிக்கம், சுதந்திரன், சுடர் போன்ற பத்திரிகைகளின் ஊடகவியலாளராகவும் பணியாற்றியுள்ளார். திருவாளர் பொதுசனம், கண்டோம் கருத்தறிந்தோம் போன்ற தலைப்புகளிலான நேர்காணல்கள் சுடர் பத்திரிகைக்காக செய்துள்ளார். கவிஞர் செ.நவசோதிராசாவுடன் இணைந்து புதுமை நெஞ்சங்கள் என்ற இலக்கிய அமைப்பை தாபித்து அதன் மூலம் பல்வேறு இலக்கியச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். இதன் மூலம் க.அருள்சுப்ரமணியம், தாபி சுப்ரமணியம் ஆகியோரின் நட்பு ஏற்பட்டது. புதுமை நெஞ்சம் என்ற ரோணியோ இலக்கிய இதழ் இவர்களால் வெளியிடப்பட்டது.

மானுடம் (இலக்கிய சிற்றிதழ்), சிவனொளி (ஆன்மீக சிற்றிதழ்), சுகமா (ஆராக்கியச் சிற்றிதழ்), சிட்டு (சிறுவர் சிற்றிதழ்), சிவநெறி (சஞ்சிகை), புதுமை நெஞ்சங்கள் (இலக்கிய இதழ்) ஆகியவற்றின் ஆசிரியராகச் செயற்பட்டுள்ளார். அநுராதபுரம் அன்பு ஜவகர்ஷா தொகுத்த 44 கவிஞர்களின் 'பொறிகள்' என்ற கவிதைத் தொகுப்பில் இவரது கவிதையும் உள்ளது. சுதந்திரன் சிறுகதைகள் தொகுப்பில் இவரது 'பயணத்திற்கு சொல்லவில்லை' கதை சேர்க்கப்பட்டுள்ளது. திருகோணமலை அம்மா பதிப்பகத்தின் நிறுவுனர் இவர். இந்த பதிப்பகத்தின் மூலம் கவிதை, சிறுகதை, விளையாட்டு, ஆன்மீகம், நாவல் என இதுவரை 29 நூல்கள் வெளியிட்டுள்ளார்.

பல கோயில்களின் கும்பாபிஷேக மலர்களின் தொகுப்பாசிரியராக செயற்பட்டுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட கல்வட்டு புக்கதங்களின் தொகுப்பாசிரியராகவும் செயற்பட்டுள்ளார். திருகோணமலை பட்டனமும், சூழலும் பிரதேச செயலகத்தினால் 1997, 1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் தொடர்ச்சியாக முதற்பரிசு பெற்றுள்ளார். சுதந்திரன் சிறுகதைப் பாராட்டுவிழா, தேசிய வாசிப்பு வார விழா, நூலக தின விழா போன்றவற்றில் கௌரவங்கள் பெற்றுள்ளார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நடுவர் குழாமின் உறுப்பினராக கடந்த சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார். 2011இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 2014இல் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வித்தகர் விருதும், திருகோணமலை நகர முதல்வர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.