ஆளுமை:சுதாகரன், சிவபாதசுந்தரம்
பெயர் | சிவபாதசுந்தரம் சுதாகரன் |
தந்தை | ஆறுமுகம் சிவபாதசுந்தரம் |
தாய் | தம்பிப்பிள்ளை பரமபதி |
பிறப்பு | 1966.01.30 |
ஊர் | பெரியநீலாவணை, அம்பாறை |
வகை | கவிஞர், எழுத்தாளர் |
புனை பெயர் | நீலையூர் சுதா |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவபாதசுந்தரம் சுதாகரன் அவர்கள் (1966.01.30) அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு கவிஞராவார். இவரது இயற்பெயர் பைந்தமிழ்சுடர் நீலையூர் சுதா. இவர் ஆறுமுகம் சிவபாதசுந்தரம் மற்றும் தம்பிப்பிள்ளை பரமபதி தம்பதிகளுக்கு மகனாக 1966ஆம் ஆண்டு பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை பெரிய நீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்திலும் அதனைத் தொடர்ந்து கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையிலும் உயர் கல்வியை அல்-மனார் கல்லூரியிலும் பயின்றார். இதன் பின் கண்டி குண்டகசாலையில் விவசாயத் துறையில் டிப்ளோமாவை பயின்று முடித்தார். அதன் பின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பட்டப்பின் படிப்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் விவசாயத்தில் டிப்ளோமாவும் முடித்துள்ளார்.
இவர் விவசாய உத்தியோகத்தர், கிராம சேவையாளர், விவசாயப் போதனாசிரியர், பிராந்திய நீர்வாழ் உயிர்வளர்ப்பு விரிவாக்காளர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். தற்போது இவர் கிழக்கு மாகாண மீன்பிடித்துறை பணிப்பாளராக திருகோணமலையில் கடமையாற்றிக் கொண்டிருக்கிறார். 1983ம் ஆண்டிலிருந்தே கலைஞர்கள் ஒன்றியம் என்ற அமைப்பிலே செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
அந்த நேரத்திலிருந்தே இயல்பாக கவிதை, பாடல் எழுதுதல் மற்றும் பாடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டார். இவ்வாறே இவரது இலக்கிய பயணம் ஆரம்பமானது. அத்தோடு விவசாய கழகங்களுக்கிடையே நடைபெறும் நாடகங்களில் பங்குபற்றியுள்ளார். அத்தோடு குண்டகசாலையில் கல்வி பயின்ற காலங்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். அதனை விட அவர் கல்வி சம்பந்தப்பட்ட விவசாயம் சார்ந்த பல கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.
அத்தோடு இவர் தனது தொழில்துறை சார்ந்து மீன் வளர்ப்பு தொடர்பாக 3 புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவை மீன்வளர்ப்பு, பருவகால குளங்களில் மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் கூண்டு மீன் வளர்ப்பு எனும் நூல்களாகும். இவை தவிர முதலாவது இலக்கிய வெளியீடு 2022ம் ஆண்டு கிடுகு வீடு எனும் தலைப்பில் வெளிவந்த கவிதைத் தொகுப்பாகும். தனது மண்சார்ந்த, கலை பண்பாடு சார்ந்த சகல விடயங்களையும் கவிதைகளாக இயற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டு அவரது இரண்டாவது கவிதைத் தொகுதியான கொத்து வேலி எனும் நூல் வெளியிடப்பட்டது. இவரது படைப்புகள் பொதுவாக பழைய மக்கள் வாழ்ந்த நாட்கள், நினைவுகள், மண்வாசனை போன்றவற்றைக் கொண்டே பெரும்பாலும் அமையப் பெற்றுள்ளது.
நீலையூர் சுதா தமிழகத்தில் ஒருவருட யாப்பிலக்கணப் பயிற்சியை மரபுமாமணி வரதராசாசிடம் பயின்று முதற்தடவையிலேயே பைந்தமிழ்ச்சுடரென்ற பட்டத்தைப் பெற்றவர். இவரது சொந்த ஊரான பெரிய நீலாவணையில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்திற்கான ஆறு பாடல்கள் இவரால் எழுதப்பட்டு அது இறுவட்டாக வெளியிடப்பட்டது. இவரது கிடுகு வீடு எனும் படைப்புக்கு கிழக்கு மாகாண இலக்கிய நூலுக்கான பிரமிள் விருதும் கிடைத்துள்ளது.