ஆளுமை:சுக்ரி, எம்.ஏ.எம்.
பெயர் | முஹம்மத் சுக்ரி |
தந்தை | முஹம்மத் அலி |
தாய் | ஆயிஷா பீபீ |
பிறப்பு | 1940.06.24 |
ஊர் | மாத்தறை |
வகை | பல்துறை ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கலாநிதி சுக்ரி தென்மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தறை நகரில் 1940 ஜூன் 24 ஆம் திகதி பிறந்தார். தந்தை முஹம்மத் அலி, தாயின் பெயர் ஆயிஷா பீபீ. சகோதரர்கள் இருவர். 1970 ஆம் ஆண்டு டாக்டர் S.M சலாஹுத்தீன் நூருள் புஷ்ராவை மணம் முடித்தார். சுக்ரி தம்பதியினருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். தனது குடும்பத்தில் தாயின் சகோதரர்களான தாஸிம் ஹாஜியாரும் யாஸீன் ஹாஜியாருமே ஆகிய இருவரும் இவர் தனது கல்விப் பயணத்தைத் தொடர பின்புலமாக நின்றவர்கள்க சுக்ரி குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைக் கல்வி
தனது ஆரம்பக் கல்வியை மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் பெற்றார். அங்கு பௌத்த, கிறிஸ்தவ மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. ஆரம்பப் பள்ளிப் பருவத்திலேயே சென்தோமஸ் கல்லூரியில் இருந்த கந்தையா மாஸ்டர் சிறந்த வழிகாட்டல் இவருக்குக் கிடைக்கின்றது. அவரை வாசிப்புக்குத் தூண்டி வாசிக்க வழிப்படுத்துகின்றார். எழுத்துத் துறையிலும் ஆர்வமூட்டுகின்றார். இதன் விளைவாக 15 வயது கூட பூர்த்தியடையாத நிலையில் இவரது ஆக்கங்கள் தினகரன் பத்திரிகையில் எங்கள் கழகம், சிறுவர் அரங்கம் போன்ற பக்கங்களில் ஆரம்பமாக வெளிவருகின்றன.
மொழிமாற்றுக் கொள்கை காரணமாக சென்தோமஸ் கல்லூரியின் போதனா மொழியாக சிங்களம் மாற்றப்பட்டதனால் கல்வியை ஆங்கில மொழிமூலம் தொடர இவரை கம்பளை ஸாஹிராக் கல்லூரிக்கு அனுப்பி வைக்க குடும்;பத்தார் தீர்மானிக்கின்றனர். பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டு தர்கா நகர் அல்ஹம்ரா கல்லூரியில் சேர்க்கப்படுகின்றார். அக்காலத்தில் அல்ஹம்ரா நாட்டின் நாலா பக்கங்களில் இருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்கும் புகழ் பெற்ற கல்லூரியாக விளங்கியது. அல்ஹம்ரா இளைஞன் சுக்ரியின் இலட்சியப்பயணத்தின் மற்றொரு மைற்கல்லாக அமைந்தது. இவரது திறமைகளை இனங்கண்டு இவரில் புதைந்து கிடந்த உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொணரவும் வளர்த்து விடவும் மற்றுமொரு நல்லாசான் அங்கிருந்தார். பின்னொரு காலத்தில் ஜாமிஆ நளீமிய்யாவில் எனது ஆசானாகவும் இருந்த காலியைச் சேர்ந்த மர்ஹூம் எம்.எஸ்.எம். ஹரீஸ் ஆசிரியர் அல்ஹம்ராவில் இவருக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருந்தார். கலாநிதி சுக்ரி பிற்காலத்தில் ஒரு சிறந்த பேச்சாளராக உருவாவதற்கு பின்புலமாக இருந்தவர் ஹரீஸ் ஆசிரியரே எனக் கூறினால் அது பிழையல்ல.
கலாநிதி சுக்ரி மாணவர் பருவத்தில் சற்று கூச்ச சுபாவம் உடையவராக இருந்தவர். இதனால் இவர் மாணவர் மன்றங்களில் கூட வெட்கத்தின் காரணமாகவும் தயக்கத்தின் காரணமாகவும் பின்வரிசையிலேயே அமர்வார். இதனை அவதானித்த ஹரீஸ் ஆசிரியர் இவரை அழைத்து முன்வரிசையில் அமரச் செய்ததோடு மன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தூண்டினார்ளூ பேச்சுக்களை எழுதிக் கொடுத்து பேச வைத்தார்ளூ காலி முஸ்லிம் கலாசாரச் சங்கம் நடாத்தி வந்த அகில இலங்கை மீலாத் பேச்சுப் போட்டிக்கு இவரைத் தயார்படுத்தி அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்கவைத்து போட்டியில் கலந்துகொள்ளச் செய்தார். இப்போட்டியில் இவருக்கு முதலாம் இடம் கிடைத்தது. இதே ஹரீஸ் ஆசிரியர் இந்நிகழ்வு நடைபெற்று சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ஜாமிஆவில் தமிழ் ஆசிரியராக இருந்த போது காலி முஸ்லிம் கலாசார சங்கம் நடாத்திய அகில இலங்கை மீலாத் சிங்கள பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்துச் சென்றார். போட்டிக்கு முன்னைய நாள் தனது வீட்டில் என்னையும் தங்கவைத்தார். அடுத்த நாள் போட்டியில் கலந்து கொண்டு நானும் முதல் பரிசைப் பெற்றுக்கொண்டேன். அல்லாஹ் நல்லாசான் ஹரீஸ் ஆசிரியருக்கு நல்லருள் பாலிப்பானாக!.
பிற்காலத்தில் தனது அரபுப் பாட நிகழ்ச்சி மூலமும் ஷதத்துவ வித்துக்கள்| என்ற தொடர் உரையின் மூலமும் மற்றும் பல நிகழ்ச்சிகள் மூலமும் புகழ்பெற்ற வானொலிப் பேச்சாளராக மிளிர்ந்த கலாநிதி சுக்ரியை முதல் தடவையாக வானொலி நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்துச் சென்றவரும் ஹரீஸ் ஆசிரியர் அவர்களே. ஷஇணையற்ற இஸ்லாமிய யுத்த தர்மம்| என்ற தலைப்பிலான வானொலி நாடகமே கலாநிதி சுக்ரி கலந்து கொண்ட முதலாவது வானொலி நிகழ்ச்சி. இந்நாடகத்தில் பிரதான பாத்திரமான சலாஹூத்தீன் அய்யூபியின் பாத்திரத்தை இவர் ஏற்று நடித்தார். ஹரீஸ் ஆசிரியரே நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவராவார்.
தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் மணிவிளக்கு சஞ்சிகையின் ஆசிரியராக இருந்த அ.க. அப்துஸ்ஸமத் இலங்கை வந்த போது அவருக்கான வரவேற்பு வைபவத்தில் வரவேற்புரை நிகழ்த்துவதற்காக ஹரீஸ் ஆசிரியர் மாணவர் சுக்ரியை அழைத்துச் சென்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாகும்.
ஸாஹிரா வாழ்வு
1956 வரை அல்-ஹம்ராவில் கற்ற மாணவர் சுக்ரி அங்கு SSC பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து HSC உயர்தரம் கற்பதற்காக கொழும்பு ஸாஹிராவுக்குச் சென்றார். இவர் ஸாஹிரா சென்ற காலம் அதன் பொற்காலமாக இருந்தது. அக்காலத்தில் அதன் அதிபராக இருந்தவர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்கள். பிற்பட்ட காலத்தில் சிறந்த ஆய்வாளர்களாக விளங்கிய எம்.எம்.மஃறூப், முஹம்மத் சமீம் ஆகியோரிடமும் பேராசிரியர் கா.சிவத்தம்பியிடமும் கல்வி கற்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது. இவரது அறிவும் ஆற்றல்களும் வளர்வதற்கு மற்றொரு களமாக ஸாஹிரா அமைந்தது.அறிஞர் அஸீஸ், கலாநிதி சிவத்தம்பி முதலானோரின் வழிகாட்டல் இவருக்கு நிறைவாகக் கிடைத்தது. அல்லாமா இக்பாலைத் தெரிந்து கொள்ளவும் அவரது சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்படவும் ஸாஹிரா வாழ்வு இவருக்குத் துணைபுரிந்தது. இக்பால் போன்ற ஆளுமைகளைப் படிப்பதற்கும் பரந்த அளவிலான வாசிப்பிற்கும் ஸாஹிரா நூலகத்தை இவர் பயன்படுத்திக் கொண்டார்.
மாணவர் சுக்ரி இக்காலப் பிரிவில் கல்லூரிகளுக்கிடையில் நடைபெற்ற பல விவாதப் போட்டிகளில் பங்கேற்றார். பல விவாதங்களில் ஸாஹிரா குழுவுக்கு இவரே தலைமை தாங்கினார். அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. நாடளாவிய ரீதியில் நடாத்திய தமிழ்மொழிமூல மீலாத் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தை இவர் பெற்றுக்கொண்டமையும் இங்கு பதிவு செய்யப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். கலாநிதி அமீர் அலி, கல்வியியலாளர் எஸ்.எச்.எம.;ஜெமீல் ஆகியோர் இவரது ஸாஹிரா வகுப்புத் தோழர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக வாழ்வு
ஸாஹிராவில் கற்று உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர் சுக்ரி 1960 ஆம் ஆண்டு பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்ற இவருக்கு தனது சிறப்புத் துறையைத் தெரிவு செய்வதில் ஒரு குழப்ப நிலை தோன்றியது. இங்கு அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸ் அவர்களின் வழிகாட்டல் இவருக்குக் கிடைக்கின்றது. அறபு மொழியை சிறப்புத் துறையாக தெரிவு செய்யுமாறு அவர் ஆலோசனை வழங்கினார். ஏலவே மாணவர் சுக்ரிக்கு அரபு மொழியுடன் பரீச்சயம் இருந்தது. தனது ஊரில் சென்தோமஸ் கல்லூரியில் கற்கும் காலத்தில் ஷாபி ஆலிம் என்பவர் நடாத்தி வந்த மாலை நேர மத்ரஸாவில் இவர் அரபு மொழி கற்றிருக்கின்றார். எனவே தயக்கமின்றி அரபு மொழியைத் தனது சிறப்புத்துறையாக இவர் தெரிவு செய்தார். அன்று அரபுத்துறைத் தலைவராக இருந்தவர் பேராசிரியர் இமாம் அவர்கள். அவரது ஏக மாணவராக இவர் இருந்தார். மாணவர் சுக்ரியின் ஆளுமை விருத்தியில் பேராசிரியர் இமாமுக்கு பெரும் பங்குண்டு. அவர் தனது மாணவனுக்கு பாடத்திட்டத்திற்கு வெளியே சென்றும் பாட போதனை நடாத்தினார்ளூ நேர சூசிக்கு அப்பால் சென்று மாலை நேர, இரவு நேர வகுப்புகளை நடாத்தினார்ளூ பரந்த அளவிலான தேடலுக்கும் வாசிப்புக்கும் வழிகாட்டினார்ளூ ஆரம்பகால, பிற்பட்ட கால இஸ்லாமிய அறிஞர்களை அறிமுகப்படுத்தி அவர்களை மதிக்கும் மனப்பாங்கை வளர்த்தார். பிற்பட்ட காலத்தில் தனது ஆசானை நினைவு கூரும் பொழுதெல்லாம் ஷஷஅவர் என்னை ஒரு மாணவனாக மட்டுமன்றி தனது மகனாகவும் கருதினார்|| என கலாநிதி சுக்ரி நன்றியுடன் குறிப்பிடுவார்.
இக்காலப் பகுதி பேராதனைப் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியத்துறையில் ஒரு பொற்காலமாக இருந்தது. தமிழ்த் துறையில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் வித்தியாநந்தன், போன்றோர் இருந்தனர். சமகால மாணவர்களில் மௌனகுரு, செங்கையாழியான் முதலானோர் இருந்தனர். இக்காலப்பகுதியில் மாணவர் சுக்ரி தமிழ் இலக்கியத்திலும் தீவிர ஆர்வம் காட்டினார்ளூ பேசினார்ளூ எழுதினார்ளூ விவாதங்களில் பங்கேற்றார்ளூ இலக்கிய மன்றங்களில் கலந்து கொண்டார். இலக்கியத்துறையில் இவர் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு பேராசிரியர் கைலாசபதியின் வழிகாட்டல் இவருக்கு நிறைவாகக் கிடைத்தது. 1963 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் நடாத்திய நாவலர் வெற்றிக் கேடயத்திற்கான தமிழ் பேச்சுப் போட்டியில் திறமையான பல மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடத்தைப் பெற்று வெற்றிக் கேடயத்தைச் சுவீகரிக்கும் அளவிற்கு மாணவர் சுக்ரியின் தமிழ் மொழி ஆற்றலும் நாவன்மையும் நன்கு வளர்ந்திருந்தன. இவர் இலக்கியத்தில் ஈடுபாடு காட்டிய காலத்தில் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளையும் எழுதினார். இக்காலப் பகுதியில் இவர் எழுதிய இலக்கிய ஆக்கங்களுள் மூன்று சிறுகதைகளும் அடங்கும். ஷதலாக்| இவர் எழுதிய முதல் சிறுகதையாகும். இது இவர் பல்கலைக்கழகம் செல்ல முன்னர் எழுதப்பட்டது. கொழும்பு முஸ்லிம் எழுத்தாளர் சங்கம் 1958 இல் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பில் இக்கதை வெளிவந்தது. மற்றைய இரு சிறுகதைகளும் ஷவாரிசு|, ஷகழுவாய்| ஆகிய தலைப்புக்களைத் தாங்கி வெளிவந்தன. இவை இரண்டும் இவர் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக இருந்த காலத்தில் எழுதப்பட்டவையாகும். இவரது இலக்கிய ஈடுபாடு பற்றி பிற்காலத்தில் இளங்கீரன் சுபைர் எழுதும்போது, கலாநிதி சுக்ரி இலக்கியத் துறையில் தொடர்ந்தும் ஈடுபட்டிருந்தால் ஒரு பெரும் இலக்கியவாதியாக இருந்திருப்பார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரி மாணவராக இருந்த காலத்திலேயே கலாநிதி சுக்ரி நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று மீலாத் விழாக்களிலும் ஹதீஸ் மஜ்லிசுகளிலும் சமூகவிவகாரங்கள் தொடர்பான ஒன்று கூடல்களிலும் உரை நிகழ்த்தி வந்தார். 1960 களில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே சிறந்த மேடைப் பேச்சாளர்களாக விளங்கினர். அவர்களுள் மஸ்ஊத் ஆலிம், மௌலவி யூ.எம். தாஸிம் நத்வி, மௌலவி ஏ.ஆர்.எம். ரூஹூல் ஹக், ஜனாப் எம்.பீ.எம். மாஹிர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவ்வரிசையில் இளைஞர் சுக்ரி சிறப்பிடம் பெற்றார். இக்காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அறியப்பட்ட தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராக இவர் இருந்தார்.
பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே நாடளாவிய ரீதியில் சமூகப்பணியிலும் சன்மார்க்கப் பணியிலும் தீவிர ஈடுபாடு காட்டிய இளைஞர் சுக்ரி தனது பிறந்த ஊருக்கும் பணி செய்ய மறந்துவிடவில்லை. தனது சொந்த ஊரான மாத்தறையில் இஸ்லாமியக் கலாசார இயக்கம் என்ற பெயரில் ஒரு சமூக சேவை அமைப்பை உருவாக்கி அதன் தலைவராகவும் செயற்பட்டார். மாத்தறை கடை வீதி ஜூம்மா பள்ளிவாயலில் அல்குர்ஆன் விளக்க வகுப்பொன்றையும் நடாத்தி வந்தார்;. மிக அண்மைக் காலம் வரை இவரால் இந்த வகுப்பு நடாத்தப்பட்டு வந்தமை இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்
1965 ல் பட்டப்பரீட்சையில் முதல் வகுப்பில் சித்தியடைந்த கலாநிதி சுக்ரி தொடர்ந்து இலங்கை நிருவாக சேவையில் இணைய வேண்டும் என உத்தேசித்தார். ஆயினும் பின்னர் அறிஞர் ஏ.எம்.ஏ. அஸீஸின் ஆலோசனைப்படி பேராசிரியர் இமாமின் வாரிசாக கல்வித்துறையிலேயே தனது பணியைத் தொடரத் தீர்மானித்தார். பட்டப்படிப்பை நிறைவு செய்ததைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறை விரிவுரையாளராக நியமனம் பெற்றார். 1973 வரை சிறிது காலம் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இக்கால இவரது மாணவர்களுள் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம், ஜனாப் எம்.ஐ.எம். ரியாழ், ஜனாப் முக்தார் ஏ. முஹம்மத் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.இவர்கள் அனைவரும் தமது விரிவுரையாளர் சுக்ரியை விட வயதில் மூத்தவர்களாக இருந்தனர். பாடசாலை ஆசிரியர்களாக இருந்த இவர்கள் விரிவுரையாளர் சுக்ரி அவர்களின் கீழ் தமது பட்டப் படிப்பை மேற்கொண்டார்கள். மௌலவி கே.எம்.எச்.காலிதீனும் இவரது ஆரம்பகால மாணவர்களுள் ஒருவராவார்.
கலாநிதி சுக்ரி பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்ற பின்னரும் மாணவர் பருவத்தில் துவங்கிய தனது சமூக, சமயப் பணிகளை தொடர்ந்தும் முனைப்புடன் மேற்கொண்டு வந்தார். 1972 ஆம் ஆண்டு எகிப்து இஸ்லாமிய ஆய்வு எகடமி கெய்ரோ நகரில் ஒழுங்கு செய்திருந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் இவருக்குக் கிட்டியது. இது இவர் பங்கேற்ற முதலாவது சர்வதேச மாநாடாகும்.
விரிவுரையாளர் சுக்ரி தனது பட்டப் படிப்பை மேற்கொள்வதற்காக வெளிநாடு செல்வதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் 1973 ஆம் ஆண்டு மே மாதம் குருணாகல், தெலியாகொன்ன ஹிஸ்புல்லாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற குருணாகல், குளியாப்பிட்டி கல்வி வலய பாடசாலைகளுக்கிடையிலான மீலாத் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் விழாவில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டார். அங்கே பரிசு பெறும் மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். இவ்வைபவத்தில் வெற்றிபெற்ற போட்டியாளர்கள் சார்பில் உரை நிகழ்த்தும் வாய்ப்பும் எனக்குக் கிட்டியதை இங்கு நினைவு கூர விரும்புகிறேன். கலாநிதி சுக்ரி அவர்களைப் பார்ப்பதற்கும் அவரது உரையைக் கேட்பதற்கும் எனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பட்டப்பின் படிப்பு
பட்டப்பின் படிப்பைத் தொடர்வது கலாநிதி சுக்ரியின் இலட்சிய வாழ்வின் அடுத்த நகர்வாக அமைந்தது. பட்டப்பின் படிப்பை மேற்கொள்வதற்கு எந்த நாட்டின் எந்தப் பல்கலைக்கழகத்தைத் தெரிவு செய்வது என்பதை இவரால் தீர்மானிக்க முடியாமல் இருந்தது. பேராசிரியர் இமாம் மேற்குலக பல்கலைக்கழகம் ஒன்றிற்கு செல்லுமாறு தூண்டினார்ளூ மற்றும் சிலர் அரபு நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றிற்கு செல்லுமாறு ஆலோசனை கூறினர். இறுதியில் அன்று இலங்கைக்கான எகிப்திய தூதுவராக இருந்த கலீபா அப்துல் அஸீஸ் முஸ்தபா அவர்களின் ஆலோசனையின்படி எகிப்து அல்அஸ்ஹருக்கு செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்த வேளையில் பொதுநலவாய நாடுகளின் புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை கலாநிதி சுக்ரிக்கு தெரியவந்தது. இதில் ஆர்வம் கொண்ட அவர் இது தொடர்பாக கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதை அணுகினார். அவரும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கவே குறித்த புலமைப்பரிசில் திட்டத்திற்கூடாக ஐக்கிய இராச்சிய எடின்பரோ பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பித்தார். அல்லாஹ்வின் அருளால் அனுமதியும் கிடைத்தது. 1973 ஆம் ஆண்டு தனது மனைவியுடனும் கைக்குழந்தையாக இருந்த மகனுடனும் ஐக்கிய இராச்சியம் நோக்கி இவர் பயணமானார்.
எடின்பரோ பல்கலைக்கழகத்தில் இவரது மேற்பார்வையாளராக பேராசிரியர் மொன்ட் கொமரி வொட் இருந்தார். இவர் ஒரு கீழைத்தேய அறிஞர். இஸ்லாம், இஸ்லாமிய வரலாறு தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டவர். பல நூல்களையும் இவர் எழுதியுள்ளார். இஸ்லாம் சார்பு கீழைத்தேயவாதிகளின் வரிசையில் பேராசிரியர் வொட் சிறப்பிடம் பெறுகின்றார். இவரது வழிகாட்டலின் கீழ் தனது பட்டப் பின்படிப்பை கலாநிதி சுக்ரி தொடர்ந்தார். ஆரம்பமாக ஆய்வுக்குரிய தலைப்பைத் தெரிவு செய்வது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. நீண்ட தேடலுக்குப் பின்னர் ஹி. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிஞர் அபூதாலிப் அல்மக்கியின் ஷஷகூதுல் குலூப்||; என்ற நூலை ஆய்வுக்காகத் தெரிவு செய்தார். ஆய்வுக்குரிய தலைப்பைத் தெரிவுசெய்வதற்கும் அதற்கான உசாத்துணை நூற்களைக் கண்டறிவதற்கும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் பேராசிரியர் இமாம் அவர்கள் மூலம் கிடைத்த வழிகாட்டல்கள் இவருக்குப் பெரிதும் உதவின. குறுகிய காலத்துக்குள் ஆய்வுக்கான அடிப்படை முன்னாயத்தங்களை இவர் செய்து முடித்தமையைக் கண்டு பேராசிரியர் வொட் பெரிதும் மகிழ்ந்தார்.
ஆய்வு தொடர்ந்தது. அதுவொரு பெரும் போராட்டமாகவே அமைந்தது. இரவு பகலாக முழு மூச்சாக ஆய்வில் ஈடுபட்டார் கலாநிதி சுக்ரி. தொடர்ந்தேர்ச்சையான தேடலின் விளைவாக ஒரு கட்டத்தில் நரம்புத் தளர்ச்சியினால் பாதிப்படையும் நிலை கூட இவருக்கு ஏற்பட்டது. இறுதியில் அல்லாஹ்வின் அருளால் தனது ஆய்வை வெற்றி;கரமாக முடித்து கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.பெரும் சவாலாக அமைந்த தனது கல்விப் பணி சிறப்பாக நிறைவு பெறுவதற்கு நேரடியாகத் துணைநின்ற இருவரை கலாநிதி சுக்ரி என்றும் நன்றியுடன் நினைவு கூருவார். ஒருவர் பேராசிரியர் வொட் அவர்கள், அடுத்தவர் இவரது அருமை மனைவியவர்கள். தகப்பனார் கடும் சுகயீனமுற்றிருந்த நிலையிலும் தன்னுடன் இங்கிலாந்து வந்து மூன்று வருடங்கள் தனது பணியைத் தொடர்வதற்குப் பெரும் உதவியாக இருந்தவர் தனது துணைவியார் என கலாநிதி சுக்ரி அடிக்கடி நினைவு படுத்துவதுண்டு.
கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை முடித்ததைத் தொடர்ந்து தான் ஓர் இராட்சத மனிதனாக மாறிய உணர்வு தனக்குள் பிறந்ததாக கலாநிதி சுக்ரி ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் உணரும் அளவிற்கு அவரது ஆய்வு அவரின் அறிவையும் ஆற்றல்களையும் வளர்த்தெடுக்க உதவியது என்பதையே இதற்கூடாக அவர் சொல்ல விரும்பினார். பிரியாவிடை பெறுவதற்காகத் தனது பேராசிரியரைச் சந்திக்கச் சென்றிருந்த போது அவர் கூறிய ஓர் உபதேசத்தைக் கலாநிதி சுக்ரி பல சந்தர்ப்பங்களில் நினைவுபடுத்தியுள்ளார். கல்வித்துறையில் அடையக்கூடிய அதி உயர் பட்டத்தைப் பெற்றிருந்த தனது மாணவரை விழித்து பேராசிரியர் வொட் பின்வருமாறு கூறினார்.
ஷஷசுக்ரி! நீங்கள் இதற்குப் பிறகுதான் கற்கப் போகின்றீர்கள். இதுவரை எதைப் படிப்பது? எப்படிப் படிப்பது என்பதையே கற்றுக்கொண்டீர்கள்.|| இக்கருத்து பட்டச்சான்றிதழ்களையும் பட்டப்பின் படிப்புச்; சான்றிதழ்களையும் சுமந்திருக்கும் அனைவரினதும் கவனத்திற்கும் சிந்தனைக்குமுரியதாகும்.
தனது பாரமான ஆய்வுப் பணிக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் மத்தியிலும் தனக்குக் கிடைத்த பொதுநலவாய புலமைப் பரிசில் நிதியின் ஒரு பகுதியைச் சேமித்து 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தே குடும்பத்தோடு சென்று புனித ஹஜ் கடமையை இவர் நிறைவேற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1976 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய கலாநிதி சுக்ரி மீண்டும் தனது பல்கலைக்கழகப் பணியில் இணைந்து கொண்டார். கலாநிதி பட்டப்பின்படிப்பை நிறைவு செய்;திருந்ததனால் முதுநிலை விரிவுரையாளராகவும் பதவியுயர்வு பெற்றார். தொடர்ந்து அறபு இஸ்லாமிய நாகரிகத்துறைத் தலைவராகவும் நியமனம் பெற்றார்.இக்காலத்தில் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை களனிப் பல்கலைக்கழகத்தில் இயங்கியது. 1978 ல் இத்துறை மீண்டும் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 1980 ஆம் ஆண்டு அறபு நாகரிகத்துறை பேராதனைப் பல்கலைக்கழக தும்பறை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்த இடமாற்றம் கலாநிதி சுக்ரிக்கு திருப்தியளிக்கவில்லை. ஆயினும் அவர் தனது பணியை அங்கு தொடர்ந்தார்.
ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர்
இந்நிலையில் ஜாமிஆ நளீமிய்யாவின் நிருவாகத்தைப் பொறுப்பேற்குமாறு நளீம் ஹாஜியார் இவரை வேண்டிக்கொண்டார். இதற்கு முன்னரும் அவர் பல சந்தர்ப்பங்களில் இந்த வேண்டு;கோளை முன்வைத்ததுண்டு. இவர் இங்கிலாந்தில் இருந்த போது 1974 ஆம் ஆண்டளவில் நளீம் ஹாஜியார் ஹொங்கொங்கிலிருந்து இவருக்கு எழுதிய கடிதத்தில் கலாநிதிப் பட்டப்பின்படிப்பை நிறைவு செய்து நாடு திரும்பியதும் ஜாமிஆ விவகாரங்களில் முழுமையாக ஈடுபட வேண்டுமென வேண்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட மனப் போராட்டத்தின் பின்னர் தனது பல்கலைக்கழக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜாமிஆவின் பொறுப்பைச் சுமப்பது எனத் தீர்மானிக்கின்றார். 1981 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கலாநிதி சுக்ரி ஜாமிஆ நளீமிய்யாவில் பணிப்பாளராகப் பதவியேற்றார். இப்பதவிக்கு இவர் புதியவராக இருந்த போதும் ஜாமிஆவுடன் இவருக்கு அதன் தோற்றம் முதலே நெருக்கமான உறவு இருந்தது. ஜாமிஆவை நிறுவுவது தொடர்பான பூர்வாங்க ஆலோசனைக் கூட்டங்களில் கலாநிதி சுக்ரி கலந்து கொண்டார். அப்போது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்தார். ஜாமிஆ நளீமிய்யாவிற்கான பாடத்திட்டத்தை அமைக்கும் குழுவிலும் இவர் அங்கம் வகித்தார். இந்நாட்டில் ஜாமிஆ நளீமி;ய்யா போன்ற ஒரு முன்னோடி கல்வி நிலையத்திற்கான மாதிரியோ, பாடத்திட்ட அமைப்போ இலங்கையில் இல்லாதிருந்த காரணத்தினால் பாகிஸ்தான் போன்ற ஒரு முஸ்லிம் நாட்டைத் தரிசி;த்து அங்குள்ள இஸ்லாமிய கலாநிலையங்களுக்குச் சென்று அவற்றின் செயற்பாடுகளை அவதானித்து அங்குள்ள புகழ்பெற்ற அறிஞர்களைச் சந்தித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று ஜாமிஆ நளீமிய்யாவிற்கான கல்விக் கொள்கையையும் பாடத்திட்டத்தையும் வகுப்பதே மிகப்பொருத்தமானதாக அமையுமென அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் கருத்துத் தெரிவித்தார். இந்தக் கருத்தை நளீம் ஹாஜியாரும் ஏனையோரும் ஏற்றுக்கொண்டதோடு இதற்காக ஒரு குழு பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. இத்தீர்மானத்திற்கமைய ஐவர் கொண்ட ஒரு குழு 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயணமாகியது. இக்குழுவுடன் கலாநிதி சுக்ரியும் சென்றார்.
இக்குழு இலங்கை திரும்பியதும் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் உலகில் உள்ள பல்வேறு கலாநிலையங்களின் பாடத்திட்டங்களில் உள்ள பயனுள்ள அம்சங்கள் இணைக்கப்பட்டு ஜாமிஆவின் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. இப்பணிகளில் எல்லாம் தனது காத்திரமான பங்களிப்பை கலாநிதி சுக்ரி வழங்கினார். இவ்வாறு ஆரம்பம் முதல் ஜாமிஆவின் விவகாரங்களில் பங்கேற்ற இவர் பணிப்பாளராகப் பதவியேற்க முன்பே அவ்வப்போது ஜாமிஆவிற்கு வருகை தந்து மாணவர்களுக்குத் தொடர்வகுப்புக்களையும் விரிவுரைகளையும் நடாத்தி வந்தார் என்பதும் இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
ஜாமிஆ நளீமிய்யாவில் இணைந்ததன் பின்னர் கலாநிதி சுக்ரியின் பணிகள் புதிய பல பரிமாணங்களைப் பெற்றதெனலாம். ஜாமிஆவினதும் முஸ்லிம் சமூகத்தினதும் நலனும் மேம்பாடுமே நளீம் ஹாஜியாரின் பேச்சாகவும் மூச்சாகவும் இருந்தது. அவரது கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுத்த ஒரு மனிதராகவே கலாநிதி சுக்ரியைக் காணமுடிகின்றது. ஜாமிஆவின் மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியார் மேற்கொண்ட எல்லாப் பணிகளிலும் இவர் பங்கேற்றார்ளூ அவரோடு தோளோடு தோள் நின்று உழைத்தார். ஜாமிஆவின் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் நளீம் ஹாஜியாருடன் இவரும் சென்றார். உலகின் பல பாகங்களுக்கும் சென்று ஜாமிஆவை அறிமுகப்படுத்தி அதற்கு ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பின்புலமாக நின்றவர் கலாநிதி சுக்ரி அவர்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகளில் உள்ள பல கல்வி நிறுவனங்களுடனும், சமூக சேவை அமைப்புக்களுடனும் ஜாமிஆவுக்குத் தொடர்புகளை ஏற்படுத்துவதில் இவருடைய பங்கு மகத்தானதாகும். ராபிதா நிறுவனம், ஜித்தா இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, ஜித்தா இக்ரஃ நலன்புரி அமைப்பு உட்பட மற்றும் பல சர்வதேச அமைப்புகளுடன் ஜாமிஆவிற்கு நெருக்கமான தொடர்புகள் உருவாக இவர் முன்னின்று உழைத்தார். ஜாமிஆவின் வெளிநாட்டு உறவுகளைப் பேணுவதில் இன்றுவரை சளைக்காமல் செயற்பட்டு வருகின்றார். கடந்த சில ஆண்டுகளாக இப்பணியில் அவருடன் இணைந்து செயற்படும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. கடந்த காலங்களில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அவருடன் மேற்கொண்ட பயணங்களை இங்கு நான் நினைத்துப் பார்க்கிறேன். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்ற நிலையில் நாங்கள் மேற்கொண்ட சில கஷ்டமான பிரயாணங்கள் எனது நினைவில் நிழலாடுகின்றன.
ஜாமிஆவின் பட்டச்சான்றிதழை சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் பெற்ற ஒன்றாக மாற்றுவதற்கு கலாநிதி சுக்ரி அரும்பாடு பட்டார். பாகிஸ்தான் இஸ்லாமாபாத் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகம் ஜாமிஆவின் சான்றிதழை அதன் பட்டச் சான்றிதழுக்கு சமமானதாக ஏற்று அங்கீகரிப்பதற்கு ஜாமிஆவின் கல்வித்தரம் காரணமாக அமைந்தது போலவே கலாநிதி சுக்ரியின் ஆளுமையும் ஒரு முக்கிய காரணியாக அமைந்தது என்பதை இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. இவரது முயற்சியின் விளைவே இஸ்லாமிய உலக பல்கலைக்கழக ஒன்றியத்தில் ஜாமிஆவுக்குக் கிடைத்த அங்கத்துவமாகும். தொடர்ந்து மூன்று தவணைகள் ஒன்றியத்தின் செயற்குழுவில் ஜாமிஆவின் சார்பில் இவர் அங்கத்துவம் வகித்தமையும் இங்கு சிறப்பாக குறிப்பிடத்தக்கதாகும். பல சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஜாமிஆவிறகு விஜயம் செய்யவும் அவர்களில் சிலர் இங்கு தங்கி நின்று விரிவுரைகள் நடாத்தவும் வழிசெய்த பெருமையும் இவரைச் சாரும். மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வி, ஷேய்க் முஹம்மத் அல்கஸ்ஸாலி, கலாநிதி யூஸூப் அல்கர்ழாவி, பேராசிரியர் குர்ஷித் அஹ்மத், கலாநிதி ஹூஸைன் ஹாமித் ஹஸ்ஸான், கலாநிதி அஹ்மத் அல்அஸ்ஸால் போன்ற பல அறிஞர்கள் இவரது ஏற்பாட்டின் பேரில் ஜாமிஆவிற்கு வருகைதந்தவர்களாவர்.
ஜாமிஆவின் வெளியீட்டுப் பணியகத்தின் வளர்ச்சிக்கும் கலாநிதி சுக்ரி பெரும் பங்காற்றியுள்ளார். கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வெளிவரும் காலாண்டு இஸ்லாமிய சஞ்சிகையான ஷஇஸ்லாமிய சிந்தனை| யின் ஆலோசராகவும் தற்போது அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்து வரும் இவர் சஞ்சிகை ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை தொடர்ந்தேர்ச்சையாக ஆக்கங்களையும் வழங்கி வருகின்றார். ஜாமிஆ வெளியீட்டுப் பணியகம் வெளியிட்ட நூல்களில் பல கலாநிதி சுக்ரி எழுதியவையாகும்.
ஜாமிஆ நளீமிய்யாவின் ஆய்வு நிறுவனத்திற்கூடாக இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுப்பதற்கு இவர் மேற்கொண்ட முயற்சி இவரது மிகப்பெரும் சாதனையாகும். உள்நாட்டு, வெளிநாட்டு முஸ்லிம், முஸ்லிமல்லாத வரலாற்றுத்துறை அறிஞர்களை ஒன்று கூட்டி சர்வதேச தரத்திலான ஒரு கருத்தரங்கை நடாத்தி அதன் நிறைவாக இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றி ஒரு பெரு நூலை தொகுத்தளிக்கும் காத்திரமான பணிக்கு முன்னோடியாக அமைந்தவர் இவரே. இன்று இலங்கை முஸ்லிம்களின் வரலாறு பற்றிப் பேசும் முதற்தர உசாத்துணை நூலாக 1986 ல் இவர் தொகுத்து வெளியிட்ட “Muslims of Sri Lanka- Avenues to Anitiquity” எனும் நூல் விளங்குகின்றது.
சமூகப் பங்களிப்புக்கள்
இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இவர் மேற்கொண்ட மற்றொரு பணியே இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்கியமையாகும். அதன் நிருவாகத் தலைவராக இருந்து இவர் செய்த பங்களிப்பு பாராட்டுக்குரியதாகும். மறுமலர்ச்சி இயக்கத்தின் விளைவாகத் தோன்றிய இக்ரஃ தொழிநுட்பக் கல்லூரியின் உருவாக்கத்திலும் இவர் முக்கிய பங்காற்றினார். இன்றும் இக்கல்லூரியின் பொதுநிலைப் பொறுப்பாளராக (Custodian) இருந்து வருகின்றார். ஜித்தா இக்ரஃ நலன்புரி நிறுவனத்திற்கும் இக்ரஃ தொழிநுட்பக் கல்லூரிக்கும் இடையே பாலமாக இருந்து செயற்பட்டவரும் இவரே.
பல்வேறு பொறுப்புக்களை சுமந்துள்ள நிலையிலும் கலாநிதி சுக்ரி ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவதை விட்டுவிடவில்லை. இந்த வகையில் பல நூல்களை எழுதியுள்ள இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆங்கில மொழிக்கட்டுரைகள் The Muslim World League Journal, Islamic Studies, Journal of the Archaeological Survey Department, An Nahdah, Hamdard Islamicus முதலான சர்வதேச தரம் மிக்க ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல ஆய்வுக் கருத்தரங்குகளிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டுள்ள கலாநிதி சுக்ரி அவற்றில் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிய போதிலும் இலங்கையின் தேசிய கல்வித்துறையின் மேம்பாட்டிற்கான பங்களிப்பை இவர் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார். இந்த வகையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தினதும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தினதும் அறபு, இஸ்லாமிய நாகரிகத்துறைகள் இவரது வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றன. மேலும் நாட்டின் பாடசாலைக் கல்வி வளர்ச்சிக்கும் இவரது பங்களிப்பு தொடர்ந்து கிடைத்து வருகின்றது. பாடசாலைகளின் இஸ்லாம், இஸ்லாமிய நாகரிக பாடத்திட்டங்களை வகுப்பதிலும் பாடநூல்களை எழுதுவதிலும் ஆசிரியர் கைநூல்களைத் தயாரிப்பதிலும் இவர் தனது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்.
தேசிய மட்டத்திலான பல அரச, அரசசார்பற்ற நிறுவனங்களிலும் அமைப்புக்களிலும் அங்கத்துவம் வகிக்கும் இவர் அவற்றுக்கூடாக தனது நாட்டுக்கான பங்களிப்பையும் செய்துவருகின்றார். யுனெஸ்கோ நிறுவனத்தின் இலங்கைக்கான தேசிய கவுன்ஸில், களனிப் பல்கலைக்கழக கவுன்ஸில், அரச மொழிகளுக்கான கமிஷன், மனித உரிமைக் கமிஷனின் தென் மாகாண கமிட்டி, குற்றத்தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் கவுன்ஸில் போன்ற பல்வேறு அமைப்புக்களில் கடந்த காலங்களில் அங்கத்தவராக இருந்து பணிபுரிந்துள்ளார். மேலும் தொல்பொருள் ஆய்வுக்கான பட்டப் பின்படிப்பு நிறுவனத்தின் நிருவாக சபை, தேசிய அரும்பொருட்காட்சியகத்தின் ஆலோசனை சபை, நூலக சேவைகள் சபை முதலான தேசிய அமைப்புக்களில் தற்போதும் அங்கத்துவம் வகித்து வருகின்றார்.
இளமைக் காலம் முதலே சுதந்திரமாக நின்று இஸ்லாமிய பிரசாரப் பணியில் ஈடுபட்டு வந்தவர் கலாநிதி சுக்ரி அவர்கள். ஆயினும் இஸ்லாமிய இயக்கப்பணிகளிலும் இவர் பங்கேற்க தவறவில்லை. இலங்கை இஸ்லாமிய இயக்கத்தின் மாநாடுகள், கருத்தரங்குகள், கல்வி முகாம்கள் முதலானவற்றில் கலந்து கொண்டு தனது காத்திரமான அறிவுப் பங்களிப்பை செய்து வந்திருக்கின்றார். பொதுவாக இஸ்லாமிய அறிஞர்கள் அனைவரையும் மதிக்கும் மனப்பாங்கு கொண்டவர் இவர். பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆளுமையினால் இவர் ஆகர்ஷிக்கப்பட்டவராவார். குறிப்பாக 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய எழுச்சிக்கு முன்னோடிகளாக அமைந்த இமாம் ஹஸனுல் பன்னாவையும் மௌலானா மௌதூதியையும் இவர் பெரிதும் மதிக்கின்றார். ஷேய்க் யூஸூப் அல் கர்ளாவியின் பரந்த அறிவினாலும் மௌலானா அபுல் ஹஸன் அலி நத்வியின் பண்பட்ட ஆன்மீகத்தினாலும் பேராசிரியர் குர்ஷித் அஹ்மதின் உயர்ந்த ஆளுமையினாலும் கவரப்பட்டவர் கலாநிதி சுக்ரி.
சுருங்கக் கூறின் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒரு பெரும் புலமைச் சொத்து கலாநிதி சுக்ரி;. இவரது பெறுமதியை என்றோ புரிந்து வைத்திருந்தவர் மர்ஹூம் நளீம் ஹாஜியார். ஒரு சந்தர்ப்பத்தில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியைப் பொறுப்பேற்க கலாநிதி சுக்ரியை ஜாமிஆவில் இருந்து விடுவிக்குமாறு நளீம் ஹாஜியாரிடம் வேண்டப்பட்டபோது அவர் கூறிய பதில் இங்கு நினைவு கூரத்தக்கதாகும். ஷஷகலாநிதி சுக்ரியை ஒரு தட்டிலும் அவருடைய பாரத்திற்கு தங்கத்தை மறுதட்டிலும் வைத்து இரண்டில் ஒன்றை தெரிவு செய்யுமாறு நான் வேண்டப்பட்டால் கலாநிதி சுக்ரியையே தெரிவு செய்வேன்.
கலாநிதி சுக்ரி என்ற வரலாற்றுப் புருஷரை நாளைய இலங்கை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நினைவு கூரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர் வாழும் காலத்திலேயே அவரது சேவை நலனைப் பாராட்டுவதே நன்றியுடமையாகும். இந்த வகையில் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ள அவரது மாணவர்களான நளீமிய்யா பட்டதாரிகள் அவரை கௌரவிக்குமுகமாக ஒரு பாராட்டு விழாவை நடாத்த முன்வந்தமை மெச்சத் தக்கதாகும். இவ்விழாவை முன்னிட்டு வெளியிடப்படுகின்ற இம்மலரும் இதில் இடம்பெறும் ஆக்கங்களும் கலாநிதி சுக்ரியைப் பாராட்டுவதாக மாத்திரமன்றி அவர் பற்றிய வரலாற்றுப் பதிவுகளாகவும் அமையும்
இவரது நூல்கள்