ஆளுமை:சிவசங்கர், இரத்தினசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினசிங்கம் சிவசங்கர்
தந்தை சிவசங்கர்
தாய் கெங்காதேவி
பிறப்பு 1962.08.09
ஊர் யாழ்ப்பாணம்
வகை வைத்தியர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிவசங்கர் இரத்தினசிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு வைத்தியர்,உளவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 1962.08.09 இல் இரத்தினசிங்கம், கெங்காதேவி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இவர் தனது சிறுவயதை அநுராதபுரத்தில் கழித்ததுடன், ஆரம்பக்கல்வியை அநுராதபுரம் தமிழ் விவேகானந்தா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றார். உயர்கல்வியை (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்றுத் தேர்ந்தார். அத்துடன் உளவியல் துறையிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். அதே போல சமூக சேவைகளிலும் அக்கறை கொண்டவர். தனது பல்கலைக்கழகப் படிப்பு முடிந்த பிறகு FRSS இல் இணைந்து பணியாற்றிய பின் சாந்திகம் உருவாக காரணமான ஒருவர் ஆவார்.

சிவசங்கர் அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1989 -1991 புரட்டாதி மாதம் வரையான காலப்பகுதியில் உள்ளக வைத்தியராக கடமையாற்றியுள்ளார். அதன் பிறகு தெல்லிப்பளை வைத்தியசாலையில் 1991-1999 சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் உள மருத்துவ பகுதியில் வைத்தியராக கடமையாற்றியுள்ளார். 1999-2010 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தேசிய இரத்த மாற்ற பிரயோக சேவையின் பிராந்திய பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ஒரு வருட காலப்பகுதியில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றியுள்ளார். அதன் பிறகு 2012 வரையான காலப்பகுதியில் பிராந்திய சுகாதார பணிமனையிலும் கடமையாற்றியுள்ளார்.

சிவசங்கர் அவர்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். உதயன், வலம்புரி பத்திரிகைகளில் ,மருத்துவம் சார்ந்த கட்டுரைகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள் மற்றும் சமயம் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். அத்துடன் தேசிய இரத்த மாற்ற பிரயோக சேவைக்கும் சஞ்சிகைகள் பல வெளியிட்டுள்ளார்.

மனிதனால் உருவாக்கப்பட்ட மோதல்கள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் உட்பட பேரழிவுகளின் உளவியல் ரீதியான விளைவுகளை முதன்மையாகக் கொண்டு இவர் தனது வாழ்க்கை முழுவதும் கற்பித்தல், பல்வேறு சுகாதார வல்லுநர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளார். குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றும் நிபுணத்துவம் பெற்றவர். அவரது கல்வித் தேவைகளுக்கு மேலதிகமாக, அவர் சமூகம் சார்ந்த மனநல முயற்சிகள் மற்றும் போருக்குப் பிந்தைய நல்லிணக்கத்திற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மோதலால் பாதிக்கப்படும் நபர்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்களை எதிர்கொள்வதற்கான உளவியல் ரீதியான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளார்.