ஆளுமை:சியாமளாதேவி, தாமோதரம்பிள்ளை
பெயர் | சியாமளாதேவி |
தந்தை | தாமோதரம்பிள்ளை |
தாய் | பாக்கியம் |
பிறப்பு | 1947.06.19 |
ஊர் | திருகோணமலை |
வகை | ஆன்மீக துறைசார் ஆளுமை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இவர் திருகோணமலையை சேர்ந்த ஒரு ஆன்மீக துறைசார் ஆளுமை ஆவார்.
இவர் 1947 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் திகதி திருகோணமலை உப்புவெளி பகுதியில் தாமோதரம்பிள்ளை, பாக்கியம் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து ஆண் சகோதரர்களும், இரண்டு பெண் சகோதரிகளும் உள்ளனர்.
இவர் தனது ஆன்மீக பற்றுதலை சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் ஊடாக ஏற்படுத்திக்கொண்டார். தனது பத்தாவது வயதில் சுவாமியுடன் ஏற்பட்ட அறிமுகத்தின் ஊடாக, ஆன்மீக வாழ்வியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
இவர் தனது பாடசாலைக் கல்வியை சண்முக வித்தியாலயத்தில் கற்று தேர்ந்தார். இவர்களே சண்முக வித்தியாலயத்தின் முதலாவது தமிழ் மொழி மூல வகுப்பினர் ஆவார். அதுவரை சண்முக வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வி நடவடிக்கைகளே காணப்பட்டது.
இவர் தனது பாடசாலை கல்வியின் போது நடனம், இசைத்துறை என்பவற்றில் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார். இவரது தந்தையார் திருகோணமலை நகர சபையின் தவிசாளராக இருந்ததுடன், திருகோணமலையில் காணப்பட்ட பிரபல்யமான வைத்தியசாலையான ஷியாமளா வைத்தியசாலையை நடத்தி வந்தார். இந்த வைத்தியசாலை திருகோணமலையில் பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வந்த ஒரு வைத்தியசாலை ஆகும். 1958 ஆம் ஆண்டுக்கு முன்னர் பலருக்கு பிரசவம் இடம்பெற்ற வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலையை குறிப்பிட முடியும். இந்த வைத்தியசாலையில் "ஒரு ரூபாய் வாட்டு" எனும் வைத்திய சேவையும் காணப்பட்டுள்ளது. பின்னர் இந்த வைத்தியசாலை மெல்ல மெல்ல அழிவடைந்தது.
இவர் கெங்காதரானந்தா சுவாமிகளுடன் ஏற்பட்ட ஆன்மீக ஈர்ப்பு காரணமாக ஆன்மீக வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சுவாமியின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவராக இருந்ததுடன் சுவாமி தொடர்பான எழுத்தாக்கங்களை செய்யும் அரும்பெரும் பணியினை ஆற்றி வந்தார். குறிப்பாக சுவாமிகளுடன் ஆன்மீகப் பயணங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் போன்றவற்றில் செயல்பட்டு வந்தார். 1965 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிவயோக சமாயத்தின் சிறுவர் இல்லத்தில் இவரும் இணைந்து பணியாற்றினார்.
மேலும் கெங்காதரானந்தா சுவாமிகள் இருந்த காலத்திலேயே ஞானச்சுடர் எனப்படுகின்ற சுவாமியின் குணாதிசயங்கள் தொடர்பான நூலையும், குருமுகம் எனப்படும் சுவாமியின் வாழ்வியல் சம்பவங்கள் தொடர்பான நூலையும் எழுதினார். பின்னர் சுவாமியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பிரம்மஞானி என்ற நூலையும், சுவாமியின் சற்சங்க உரைகளை உள்ளடக்கிய நூல்களையும் எழுதினார். அமிர்த துளிகள் எனப்படுகின்ற ஆன்மீக கேள்வி, பதில் நூலை எழுதியதுடன், வாழ்க்கை வரலாறு தொடர்பான மூன்று பகுதிகளை கொண்ட நூல் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவரது காலப்பகுதியிலேயே சுவாமியுடன் பற்றுதலுடன் காணப்பட்ட வீரராகவன், ஸ்ரீரங்கநாதன், பஞ்சாட்சரவேல், வடிவேல், நவரத்தின மாஸ்டர், சிற்றம்பலம், வாமதேவன் என பலர் காணப்பட்டுள்ளனர்.