ஆளுமை:சித்தி றபீக்கா, முகம்மது இஸ்மாயில்
பெயர் | சித்தி றபீக்கா |
தந்தை | முஹம்மது இஸ்மாயில் |
தாய் | குழந்தையம்மா |
பிறப்பு | 1980.04.01 |
ஊர் | சம்மாந்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சித்தி றபீக்கா பாயிஸ் அவர்கள் சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு ஆளுமை மிக்க இலக்கியவாதி ஆவார். இவர் 1980.04.01 இல் முகம்மது இஸ்மாயில் மற்றும் குழந்தையம்மா தம்பதிகளுக்கு மகளாகப் பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை கமு/சது/தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்திலும் உயர்தரக் கல்வியை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியிலும் கற்றார். இவரது கணவர் எ.பி. பாயிஸ் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.இவர் உயர்தரத்திற்கு பின் ஒரு நிறுவனமொன்றில் கணக்காளராக கடமையாற்றிய போது அங்கு இருந்த நூலகம் இவருக்குள் இருந்த வாசிப்பு திறனைத் தூண்டி இலக்கியத்துறையில் ஆர்வத்தை வர வைத்தது. 1996 ஆம் ஆண்டு பெண்மை எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் இவரது கவிதை வாசிக்கப்பட்டது. அதிலிருந்து இலக்கியதுறையில் பிரவேசிக்கலானார். கவிதை, கட்டுரை, சிறுகதை, பாடல் என பல்துறை ஆற்றல் கொண்ட இவர் வானொலி, பத்திரிகை என்பவற்றில் இடம்பெறும் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்களை எழுதியுள்ளார்.
இருப்பு, மூன்றாவது மனிதன் சஞ்சிகைகள் இவரது கவிதைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. முதலாவது ஆக்கம் 2002 ஆண்டில் மனையாள் மண்டபம் எனும் நிகழ்ச்சியினூடாக வெளியானது. அந்தக் காலகட்டத்தில்தான் இருப்பு, மூன்றாவது மனிதன் போன்ற சஞ்சிகைகளுக்கு ஆக்கங்கள் எழுதுவதில் ஆர்வம் காட்டினார். முஸ்லிம் குரல் பத்திரிகையில் இவரது 15 ஆக்கங்கள் வெளிவந்தன.
2007ஆம் ஆண்டு வெளியிட வேண்டியிருந்த தொகுப்புக்கள் வாழ்க்கையோட்டத்தால் 2019 ஆம் ஆண்டு வற்றாத ஈரம் எனும் தலைப்பில் கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு கலாச்சாரபேரவை நடத்திய போட்டிக்காக சதுப்பு நில கொக்கின் கால்கள் எனும் கவிதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது. கனடாவில் இருந்து வெளிவரும் காலம் சஞ்சிகையிலும் கவிதைகள் எழுதி வருகிறார். முஸ்லிம் நிகழ்ச்சி, கவிதா மஞ்சரி போன்ற வானொலி நிகழ்ச்சிகளிலும் அவரது தொகுப்புக்கள் இடம்பெறுகிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலைமுகம் சஞ்சிகையிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்த வண்ணமிருக்கின்றன. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிடும் யுக்தி இதழிலும் அவரது ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மூத்த கவிஞர்களாக விளங்கிய ஓட்டமாவடி அரபாத், எம்.ஐ.ஜாபிர் ஆகியோரால் பட்டை தீட்டப்பட்டவர். இவரது கவிதைகள் பெரும்பாலும் மரபு சார்ந்து காணப்படாது புதுக்கவிதை வடிவில் காணப்படுகின்றன.
அத்தோடு பாடல் ஆக்கக் கவிதைகளில் ஆர்வமுள்ளவர். கவிதை மட்டுமல்லாது சிறுகதைகளிலும் ஆர்வமிக்கவர். சந்தனக்காற்று எனும் நிகழ்ச்சியில் அவருடைய சிறுகதைகள் வாசிக்கப்பட்டிருக்கிறது. அவ்வப்போது நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படாமல் அவரிடம் உள்ளது. இருப்பும் இதயமும், திசைமாறிய நகர்வு, மருதச்சாறும் நானும் போன்ற நாவல்களை எழுதி முடித்துள்ளார். கிட்டத்தட்ட 20 நாவல்கள் தற்போது கைவசம் வைத்துள்ளார்.
இவருக்கு 2019 ஆம் ஆண்டு தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு “சாகிய முத்து” விருதும் பிரதேச கலை இலக்கிய விழாவில் பாராட்டும், “கலைஞர் சுவதம்” எனும் விருதும் சம்மாந்துறை கலை இலக்கிய திட்டத்தின் கீழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு “கொடகே சாகித்திய” விருதும், சம்மாந்துறை கலை இலக்கிய மன்றத்தால் ஒரு விருதும், இந்தியாவில் கனவு திருப்பூர் மற்றும் கோவை நண்பர்கள் இயக்கம் இணைந்து நடத்திய இரத்ததான நிகழ்வில் “கவித்தென்றல்” விருதும் 2001 இல் இவருக்குக் கிடைத்தது. கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் “இளங்கலைஞர்” விருதும் வழங்கப்பட்டது.
வளங்கள்
- நூலக எண்: 1598 பக்கங்கள் 100