ஆளுமை:சத்தியசீலராஜா, கோணாமலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோணாமலை சத்தியசீலராஜா
தந்தை கோணாமலை
தாய் வள்ளிப்பிள்ளை
பிறப்பு 1939.12.16
இறப்பு 2021.08.31
ஊர் திருகோணமலை
வகை பல்துறை செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யாழ்மாவட்டத்தில் உள்ள பருத்தித்துறை என்னும் ஊரில் 1939 இல் கோணாமலை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். செல்வம் நிறைந்த கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்காக, பருத்தித்துறை வேலாயுதம் வித்தியாலயத்தில் சேர்ந்து வைத்தனர். இளமையில் துடுக்கத்தனமும், சிந்தனையும் கொண்ட இவர் கல்வியிலே சிறப்பாகக் கரிசனை காட்டி வந்தார்.

தனது ஆரம்பக்கல்வியைச் சிறப்பாக முடித்துக் கொண்ட இவர் உயர்கல்விக்காக அன்றும் இன்றும் பிரபலமாக விளங்கி வரும் ஹாட்லிக் கல்லூரியில் சேர்ந்து உயர்தரம் கற்கலானார். கல்வியில் நாட்டம் கொண்டு மும்மொழிப் புலமையினையும் சிறப்பாகப் பெற்றுக் கொண்டார். கல்வியில் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். 1963 இல் முதன்முதலாக திருகோணமலை (கப்பல் கம்பனி) துறைமுக அதிகார சபையில் எழுதுனராக இணைந்து கொண்டார்.

தொழிலில் பக்தியும், ஆர்வமும் கொண்டு உழைத்தார். துள்ளிவரும் காளைப் பருவம் அடைந்தார். பெற்றோர்களும், உறவுகளும் இணைந்து திருமணம் செய்து வைக்க சிந்தம் கொண்டனர். இதன் பயனாக, பருத்தித்துறையைச் சேர்த்த உறவுப் பெண்ணான சின்னத்துரை - நல்லம்மா தம்பதியரின் செல்வமகளான செல்வதியம்மா என்பவரை 1964இல் திருமணம் செய்து வைத்தனர். இல்லற வாழ்வு இனிதாக அமைய இரு ஆண்குழந்தைகளையும், நான்கு பெண் குழந்தைகளையும் மக்களாகப் பெற்றே மனம் மகிழ்ந்தார்.

சிறந்த சேவையின் பயனாக துறைமுக அதிகார சபையில் உதவி முகாமையாளர் பதவியுயர்வு பெற்று சீரிய பணி செய்தார். தந்தை செல்வா மீது அதிக பற்றுக் கொண்டு தமிழரசுக் கட்சியில் சேர்ந்தார். 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உவர்மலைப் பகுதியில் திருகோணமலை மக்கள் குடியேற முற்பட்டனர். இவ்வேளையில் உவர்மலை குடியேற்றவாசிகளில் ஆரம்ப கால குடியிருப்பாளர்களில் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டார். தனது உழைப்பிலே புதிய வீட்டினை அமைத்து, மனைவியோடு உவர்மலையை வாழ்விடமாகக் கொண்டு மகிழ்ச்சிகரமாக இல்லற வாழ்வை இனிதாக அமைத்துக் கொண்டார்.

உவர்மலைப் பிரதேச மக்களின் பல தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க முன்னின்று அயராது பாடுபட்டார். 1977ஆம் ஆண்டு உவர்மலை சன - சமூக நிலையத்தின் தலைவராகவும், ஞான வைரவர் ஆலயத்தின் ஆரம்ப கால உறுப்பினராகவும், 1990 ஆம் ஆண்டு உவர்மலை கண்ணகி அம்மன் ஆலயத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு சைவத் தொண்டாற்றினார்.

திருகோணமலையின் பிரபல விளையாட்டுக் கழகமாக விளங்கிய 'சைனிங்ஸ்ரார்' விளையாட்டுக் கழகத்தின் தலைவராகவும் இருந்து கரப்பந்தாட்ட விளையாட்டினை ஊக்குவித்ததோடு, அகில இலங்கை ரீதியில் வெற்றி வாகை சூடிக் கொள்ள அயராதுழைத்தார்.

இன்று தேசிய பாடசாலையாக விளங்கும் உவர்மலை விவேகானந்தாக் கல்லூரி உருவாக்கத்தில் கடுமையான முயற்சி செய்தவர்களில் இவரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். நீண்ட காலமாக இக்கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளராகப் பணியாற்றி பாடசாலையின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தார். தனது மருமகனான அமரர் காளிராஜா அவர்களின் நினைவாக கல்லூரியின் முகப்பு வாயிலை அமைத்துக் கொடுத்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக விளங்கியதோடு, மாவட்டத்தின் பொருளாளர், தொகுதித் தலைவர், உவர்மலைக்கிளைத் தலைவர், மத்திய குழு உறுப்பினர் போன்ற பதவிகள் தன்னகத்தே கொண்டு கட்சிக்காக அரும்பாடுபட்டார். திருகோணமலை நகரசபையின் முன்னாள் உறுப்பினராகவும் விளங்கி பல பணிகளை ஆற்றினார்.

அகில இலங்கை சமாதான நீதவானாகவும் இருந்து சமூகப்பணிப் பணியாற்றியானார். காலமும், நேரமும் விரைவாக மறைந்து போக, நோயுற்ற நிலையில் தனது 82 ஆவது வயதில் 2021.08.31 அன்று மண்ணுலக வாழ்வை முடித்து விண்ணுலகம் சென்றார்.