ஆளுமை:சண்முகலிங்கம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம் சண்முகலிங்கம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் செல்லம்மா
பிறப்பு 03.01.1945
இறப்பு 21.08.2019
ஊர் திருகோணமலை
வகை பல்துறை ஆளுமையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்கள் திருகோணமலைத் திருநகரின் வடக்குத் திசையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாம்பல்தீவு என்னும் பழம்பெரும் பதியினில் சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வனாக 03.01.1945ஆம் ஆண்டு பிறந்தார்.

ஆரம்பக்கல்வியை சாம்பல்தீவு மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் ஆரம்பித்த சண்முகலிங்கம் அவர்கள் கல்வியிலும், விளையாட்டிலும், புறக்கிருத்தியங்களிலும் சிறந்து விளங்கினார். இதன் பின்னணியாக ஐந்தாந்தர மாணவர்களுக்காகக் கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமையினைப் பெற்றுக் கொடுத்ததுடன், புள்ளிகளின் அடிப்படையில் சிறந்த பாடசாலைகளைத் தேர்ந்தெடுத்துக் கல்வி கற்கும் தகுதியின் அடிப்படையில் மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியினைத் தொடர்ந்தார். அச்சமயத்தில் பதினோராந்தர மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கல்விப் பொதுத்தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி ஒரே தடவையில் விசேட சித்தி, மற்றும் திறமைச் சித்திகளுடன் அப்போதிருந்த பாடத்திட்டத்தின் படி எட்டுப்பாடங்களிலும் சித்தியடைந்தார்.

அதனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாணவனின் எதிர்காலத் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையில் தனக்கு விருப்பமான துறையைத் தெரிவு செய்வதற்கான அத்தனை தகுதிகளையும் பெற்றிருந்த போதிலும் உயர்கல்வியைத் தொடரமுடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு அவ்வேளையில் வறுமைக்கோட்டின் கீழே தினம் தினம் வாழ்வோடு போராடிக்கொண்டிருந்த அவரது பெரிய குடும்பத்தின் பொறுப்பினைத் தன் தலை மீது தாங்கிச்செல்லவேண்டிய நிலை இட்டுச்சென்றது. குடும்பத்தை வழிநடத்துவதற்கான பொருளாதார வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு உடனடியாக அரச பணி ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டமையால் தனது நெருக்கமான உறவினர்களது நெற்செய்கைக் காணிகளையும், தோட்டக் காணிகளையும் குத்தகைக்குப் பெற்று வேளாண்மை மற்றும் காய்கறிப் பயிர்ச்செய்கைகளை மேற்கொண்டு தமது குடும்பத்தின் தனக்கு கீழ் உள்ளோர்களின் கல்வி மற்றும் உணவு, உடை தேவைகளை நிவர்த்தி செய்ய உழைத்தார்.

காலங்கனிந்துவரத் தனது 21வது வயதினிலே சாம்பல்தீவு கிராம சபையிலே இலிகிதர் பதவிக்கான நியமனத்தைப் பெற்ற அவர், தனது செயற்திறன் காரணமாக 1979ம் ஆண்டு திருகோணமலை நகராட்சி மன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கும் தனது செயல்நுணுக்கம் காரணமாகப் பதவி உயர்வுகளைப் பெற்றார்.

தம் பணியை நிறைவாக மேற்கொண்டு வந்த அவர் தன் இல்லற வாழ்வில் 1979ம் ஆண்டு திருகோணமலை தம்பலகாமம் கூட்டாம்புளியைச் சேர்ந்த இராமலிங்கம், தவமணி தம்பதியினரின் மூத்த புதல்வியான தமயந்தி அவர்களைத் தனது இல்லத்தரசியாக ஏற்று இல்லறம் என்னும் நல்லறம் நடாத்தி மகிழ்வோடு வாழ்ந்து வரும் நாளில் நிதர்ஷனி என்னும் ஏக செல்வப்புதல்வியைப் பெற்றெடுத்து கல்வி மூலம் அறிவு, திறன், மனப்பாங்கு விழுமியங்களை வழங்கியதன் பயனாக தம் மகளை கல்வியிலே சிறந்தோங்கச் செய்து திருகோணமலை மக்கள் வங்கியில் ஊழியராக சிறுவயதிலே இணைத்து உத்தியோகத்தராக தரமுயரும் அளவிற்கு தகுதியைப் பெற்றுக் கொடுத்தார்.

சண்முகலிங்கம் அவர்களின் திறமைக்கு மேலும் வலுச்சேர்க்குமுகமாக 1994ம் ஆண்டு உப்புவெளி பிரதேச சபைக்கு செயலாளராக பதவியுயர்வுடன் நியமனம் செய்யப்பட்டார். "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற கூற்றுக்கிணங்க தான் வகித்த பதவியை ஆதாரமாகக் கொண்டு சாம்பல்தீவுக் கிராமத்திலுள்ள இளைஞர், யுவதிகள் பலருக்கு பல அரச நிறுவனங்களில் நிரந்தர நியமனங்களைப் பெற்றுக்கொடுத்ததோடு பிரதேச சபைக்கு நிலுவையாக இருந்த வருமானங்களையும் தனது ஆளுமையால் பெற்றுக்கொடுத்தார். மேலும் தனது கிராமத்திலுள்ளவர்களின் கல்வியறிவும், பொருளாதார நிலையும் விருத்தியடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடசாலைப் பெயர் மாற்றித் தரமுயர்த்துதல், மற்றும் விவசாய பயிர்ச்செய்கைக்கான மேட்டு நிலக் காணிகளைப் பெற்று உப உணவுப் பயிர்ச்செய்கையினை மேற்கொள்வதற்கு வழிகாட்டியாக விளங்கினார்.

தொடர்ந்தும் தனது கடமையை செவ்வனே செய்து கொண்டிருந்தபோது 2003இல் குச்சவெளி பிரதேச சபைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டார். அங்கு 2004ம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற பாரிய சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பெற்றுக்கொள்ள தன்னால் இயன்ற உதவிகளை தனது பதவி மூலம் செய்து கொடுத்தார். எமது நாட்டில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வு பூரண சுதந்திரம் கொண்டதாக மலரவேண்டும் என்பதற்காக அவர் தமது இளமைப்பருவத்திலிருந்தே தன்னை இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தொண்டனாக இணைந்து கொண்ட அவர் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையின் காரணமாக 2006ம் ஆண்டு திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையின் கௌரவ உறுப்பினராக உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட அவர், தொடர்ந்து ஐந்து வருடங்கள் தனது சேவையினை வழங்கினார்.

சண்முகலிங்கம் அவர்கள் தான் பிறந்த மண்ணில் மக்கள் சிறந்த ஒழுக்கசீலர்களாக வாழ்வதற்கு ஆதாரமாக சாம்பல்தீவு கிராமத்திலுள்ள ஆலயங்களை புனரமைப்பதிலும், ஆலயங்களினூடாக அறநெறிப் போதனைகளை வழங்குவதிலும் தம் வழிகாட்டிகளோடு இணைந்து சிறந்ததொரு கட்டுக்கோப்பான சமூகத்தை உருவாக்கிய பெருமையைக் கண்டார். மேலும் தாம் பிறந்த மண்ணிற்கு ஆற்றிய சேவையைப்போல் இல்லாளைத் துணையாகத் தேடிய திருகோணமலை தம்பலகாமப் பிரதேசத்திற்கும் சேவை செய்யும் முகமாக தம்பலகாமம் ஆதிக்கோணேஸ்வரா தேவஸ்தானத்தில் 2006ம் ஆண்டு நடைபெற்ற நிர்வாகசபைத் தெரிவில் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டு 2011ம் ஆண்டு வரை பணிபுரிந்தார். மீண்டும் 2011 தொடக்கம் 2016ஆம் ஆண்டுக்கான நிர்வாக சபைத் தெரிவில் பொருளாளராகத் தெரிவு செய்யப்பட்டு, 25.07.2015ம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெறக் காரணமாய் உழைத்தார்.

இவரது சமய, சமூகப் பணியைக் கௌரவிக்கும் முகமாக 2012ல் சர்வதேச இந்துமத குருபீடத்தால் "சிவநெறிச்செல்வர்" என்னும் சிறப்புப்பட்டம் வழங்கி பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். தம் வாழ்நாளில் தான் வகித்த பதவிகளின் தகுதிக்கேற்ப அக் காலகட்டங்களில் நிகழ்ந்த இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணைபுரிந்த அவர், மனித உயிர்காக்கும் அடிப்படையில் குற்றமிழைக்காது இருந்தபோதும் தகுந்த ஆதாரமின்றி ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட ஆயுட்கைதியை தண்டனையிலிருந்து காப்பதற்காக யூரிமார் சபையில் இணைந்து விடுதலை பெற்றுக் கொடுத்தவர்களில் ஒருவராய்ப் காணப்பட்டார்.

இவ்வாறு தன்னலம் கருதாது பலசேவைகளை ஆற்றிய சண்முகலிங்கம் 21.08.2019ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.