ஆளுமை:சண்முகராசா, இளையதம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இளையதம்பி சண்முகராசா
தந்தை இளையதம்பி
தாய் அழகம்மா
பிறப்பு 1933
இறப்பு 2019.10.08
ஊர் திருக்கோணமலை
வகை ஆன்மீக சமூகப்பணியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை நகரத்தில் முத்துக்குமார சுவாமியாய் அமர்ந்து அருள் பாலிக்கும் அந்த முத்துக்குமாரசுவாமி கோவிலுக்கு அருகாமையில், இளையதம்பி, அழகம்மா தம்பதிகளுக்கு 1933ஆம் ஆண்டு தலைமகனாகப் பிறந்து, அந்த சுற்றாடலிலேயே இறுதி வரை வாழ்ந்து ஆன்மீக சமூகப்பணி செய்த பெருந்தகையே இந்த தொண்டர் ஐயா என அழைக்கப்படும் சண்முகராசா ஐயா ஆவார்.

ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலேயே கற்று இலங்கை அரசின் ஊழியராக திருகோணமலை அஞ்சல் திணைக்களத்தில் தபாற்சேவகராக பணியாற்றிய ஐயா அவர்கள், இளவயதிலேயே துறவு பூண்டு தான் இறைவனடி சேரும் வரைக்கும் எங்கள் திருகோணமலை மண்ணில் ஆன்மீகப் பணியாற்றிய தலைசிறந்த துறவியாவார்.

தன் இளம் வயதிலேயே முத்துக்குமாரசுவாமி கோவிலில் பூந்தோட்டம் அமைத்து, அதனை நீரூற்றிப் பாதுகாத்து, மலர்கள் பறித்து, முருக பூசைக்கு கொடுத்து, கோவிலை உள்ளும்புறமும் சுத்தமாக வைத்திருந்து, பராமரிக்கும் ஐயா அவர்களது சரீரத் தொண்டு, அவரின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகிப் போய் சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படும், சரியை எனப்படும் தாச மார்க்க வழியில் இறை அன்பின் துணையோடு பணி செய்த ஐயா அவர்களது தூய தெய்வ பக்தி அவரை இறுதி வரை ஆன்மீகப் பணி செய்ய வழிநடத்தியது.

இந்த ஆன்மீகப் பணியின் ஒரு பணியாக 1953ஆம் ஆண்டு குன்றக்குடி அடிகளார் திருக்கோணமலைக்கு வந்தபோது அன்றைய இளைஞர்களான இந்த தொண்டர் ஐயா உட்பட ச. ஜெயச்சந்திரன், மற்றும் பெரிவர்களான புலவர் வை. சோமாஸ்கந்தர், து. குலவீரசிங்கம், இ. சுப்பிரமணியம், வ. தா. சுப்பிரமணியம், கு. செந்திவேல், அத்தோடு சு. சிவசண்முகானேந்தேஸ்வர சர்மா உட்பட பலர் திருக்கோணமலையில் திருவள்ளுவர் கழகம் நடத்தி திருவாசகவிழா நடாத்தினார்.

இதன் பின்னர் தவத்திரு குன்றக்குடி அடிகளாரது ஆசியுடன் தொண்டர் ஐயாவும் திருவள்ளுவர் கழகத்தை சேர்ந்த அங்கத்தவர்கள் சிலரோடும் மற்றும் திரு. வே. வரதசுந்தரம் உட்பட பலருடன் சேர்ந்து இந்தத் தொண்டர் ஐயா அவர்கள் இளைஞர் அருள்நெறி மன்றத்தை ஆரம்பித்தார். அந்த அருள் நெறிமன்றம் ஆரம்பத்தில் மடத்தடி மாரியம்மன் ஆலயவீதியில் இயங்கிப் பின்னர் தொண்டர் ஐயா இருந்த முத்துக்குமாரசுவாமி ஆலயச் சூழலில் அக்கோவிலின் தீர்த்தக்கேணியாகிய சரவணப்பொய்கைக்கு அருகில் இயங்கியது. இதன் காரணமாக தவத்திரு குன்றக்குடி அடிகளாரைத் தம் குருவாகக் கொண்டிருந்த தொண்டர் ஐயா அவர்கள், தான் வாழ்ந்த இடத்தில் குடி கொண்ட முத்துக்குமாரரையும் அந்த திருவண்ணாமலையாரையும் என்றும் மறக்காது அந்த நாமங்கள் நாளும் குறைவில்லாமல் அவர் நாவில் புரளும் என்பதோடு அவர் முத்துக்குமாரரின் கிருத்தியங்களில் எந்தக் குறையும் நேர்ந்துவிடக் கூடாதென்பதற்காக அதிக பணி செய்தார். இதன் காரணமோ என்னவோ கோயில் ஆதீனகர்த்தாக்களான என். ஆர். இராஜவரோதயம் மற்றும் எஸ். சிவானந்தம் மட்டுமல்லாது பூசகர்கள் உட்பட அங்கு வரும் பக்தர்கள் எனப் பலரும் தொண்டர் ஐயாமேல் பெருமதிப்புக் கொண்டிருந்தார்கள்.

இந்த ஆன்மீகப் பணிகளோடு ஐயா அவர்கள் தனது இளைஞர் அருள்நெறி மன்றம் மூலம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு மாலைநேர வகுப்புக்களை அந்த சுற்றுச் சூழலில் வாழ்ந்த படித்த இளைஞர்களின் உதவியுடன் மூலம் நடத்தி அந்த பாடசலை மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை வழங்கினார்.

இந்த இலவசக் கல்வி யோடு மட்டுமல்லாது அங்கு படிக்கவரும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரிய இளைஞர்களுக்கும் தன் இயல்புக்கு ஏற்ப தினமும் உணவு வழங்கி தந்தைபோல் கவனித்த பெருந்தகை தனது இளைஞர் அருள்நெறி மன்றத்து இளைஞர்கள் குழந்தைகளைக் கொண்டு கொடி, குடை, ஆலவட்டம் முதலான உபசாரங்களையும், மார்கழி மாதத்து திருவெம்பாவையும் சிறப்பாக வழி நடத்தி செய்வித்தார். இதற்கு எல்லாம் மேலாய் ஐயா அவர்கள் தனது அந்த இளைஞர் அருள் நெறி மன்றத்தில் அரச பணியாளர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள் தமது பணி உயர்வுக்காக வகுப்புகள் நடத்த இலவசமாக அனுமதித்தார்.

இதனை விட மன்றத்தில் “குமரகுருபரன்” நூலகம் அமைத்து அந்த அரிய நூல்களை மிகக் கவனமாகப் பேணிக்காத்த தொண்டர் ஐயா அவர்கள், படிக்கவரும் அனைவரையும் உபசரித்து படிக்க வைத்து படித்து முடிந்ததும் பாதுகாப்பாகப் அந்த நூல்களைப் பெற்று பூட்டி வைக்கும் பழக்கத்தை கொண்டு இருந்ததனால் அந்த பொக்கிஷமான புத்தகங்களை அவர் பாதுகாத்தார். இதனை விட இந்த மன்றத்தின் மூலம் ஆண்டுதோறும் விழா எடுத்து தமிழகப் பேரறிஞர்களான குன்றக்குடி அடிகளார், திருமுருக கிருபானந்தவாரியார், மற்றும் பித்துக்குளி முருகதாஸ் போன்றவர்களை அழைத்து அவர்களை ஆன்மிக உரையாற்ற வைத்து அந்த விழாக்களுக்கு தமிழ் பெயர்களில் அரங்கமைத்து திருகோணமலை நகரத்து மக்களை ஆன்மீக மழையில் நனையவைத்தார்.

தொண்டர் ஐயா அவர்கள் திருகோணமலை நகரத்தில் மட்டும் அல்லாது கப்பல்துறைக் கிராமத்துக்குச் சென்று அங்கு “திருக்காளகஸ்தீஸ்வரருக்கும் பூங்கோதை அம்மையாருக்கும்” தன் முயற்சியால் ஆலயத்தை அமைத்து அங்கு வாழ்ந்த மக்களின் வழிபாட்டுத் தலமாக்கி தனது இறுதிக் காலம்வரை வரை இக்கோயிலின் தர்மகர்த்தாவாகவும் பூசகராகவும் அரும்பணியாற்றி அதனைப் பராமரித்தும் வந்தார்.

இவர் 2019.10.08 திகதி இறைபதம் அடைந்தார்.