ஆளுமை:சடாட்சரன், மு
பெயர் | முருகேசு சடாட்சரன் |
தந்தை | முருகேசு |
தாய் | கனகம்மா |
பிறப்பு | 1940.05.06 |
ஊர் | பெரியநீலாவணை, அம்பாறை |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகேசு சடாட்சரன் அவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தைப் பிறப்பிடமாகவும் பெரிய நீலாவணையை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவர் 1940.05.06 அன்று முருகேசு மற்றும் கனகம்மா தம்பதியினரின் மகனாகப் பிறந்தார்.
1959 இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான பாரதியார் எனும் கவிதை மூலம் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்து 1960 களில் கவிஞர் நீலாவணன், மருதூர்க்கொத்தன், நுஃமான் ஆகியோரோடு கைகோர்த்து கல்முனைப் பிரதேச தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவரும் தம்மைத் தொடர்ந்து வந்த கவிஞர் குழாத்தினை இனங்கண்டு ஊக்கப்படுத்திய கவிஞர் நீலாவணனின் வழிகாட்டலில் உருவானவரே கவிஞர் மு. சடாட்சரன் ஆவார். கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மத்தியில் 1960 களில் இருந்து எழுத்தாளராகவும், கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராகவும் அறியப்படுகிறார். இவரின் மனைவி ந. பாக்கியம் இவருக்கு மொத்தம் 6 பிள்ளைகள் அதில் ஒரு மகனும் 5 மகள்களும் உள்ளனர். இவர் தனது 19ஆவது வயதில் 1959ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயின்று முடித்தார்.
அதன் பின் எழுதுவினைஞராக மூன்று மாதங்கள் கொழும்பில் உள்ள சிறுவர் நல்லொழுக்க பரிபாலன சேவைப் பகுதியில் 1963 ஆம் ஆண்டு கடமையாற்றினார். பின்னர் 1964 ஆம் ஆண்டு இரத்தினபுரியில் ஆசிரியராக பணியாற்றினார். 1975 ஆம் ஆண்டு சவளக்கடைப் பகுதியில் உள்ள 7ஆம் கிராமத்திலுள்ள கமு/சது/கணேஷா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றினார். “பாதை புதிது” எனும் கவிதைத் தொகுதியையும் “மேட்டு நிலம்” எனும் சிறுகதைத் தொகுதியையும் நூலுருவாக்கியுள்ளார். அறுபதுகளிலே கவிதை உலகில் பிரவேசித்த மு.சடாட்சரன் 1970 கள் வரை எழுதியவற்றுள் “பாதை புதிது” எனும் தொகுப்பில் உள்ள எழுபது கவிதைகளுள் அரசு எனும் கவிதையானது 1966 இல் தினகரனில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்க்கால பேரினவாத ஒடுக்குமுறைகளை, நாளாந்த வாழ்க்கை அனுபவங்களை விடியும் வேளை எனும் கவிதையூடாக வெளிப்படுத்துகின்றார். இயற்கையின் இயல்பினை மட்டுமன்றி சமகால வாழ்வியற் சூழலையும் மாற்றமுற்ற மனித நாகரீகத்தின் மாட்சியையும் வெள்ளக்காடு எனும் கவிதையூடாக எடுத்துக் காட்டுகிறார். மிக அண்மைக்கால வாழ்வியலை வசந்தம் நிலைத்திட எனும் கவிதை மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். அகவற்பா வடிவத்தினை அதிகம் கையாண்டு உணர்ச்சி அழுத்தங்களுக்கேற்ப பேச்சோசைப் பாங்கில் கவிதை யாத்த பெருமையும் மு. சடாட்சரன் அவர்களையே சாரும்.
மரபுரீதியான வெளிப்பாட்டு முறையினை மென்மேலும் நெகிழ்வடையைச் செய்து புதுக்கவிதையை அண்மித்துச் செல்கின்ற வெளிப்பாட்டு முறையினை இவரது கவிதைகளூடாக காண முடிகின்றது. பாதை புதிது எனும் கவிதை 1965 இல் கி.வா.ஜகநாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் இதழில் வெளிவந்தது 1960 களில் உபாயம் என்ன, பற்றுக்கோல் தாராயோ, வாராயோ நெடு ரெயிலே, வாழ்க்கை இனிக்கிறது, தூங்காதிருக்கிறேன், உதவி செய்க உத்தமி என்பன ஆரம்ப கால காதல் கவிதைகளாகவுள்ளன. தினகரன், வீரகேசரி, தினக்குரல், சரிநிகர், களம், சுதந்திரன் செய்தித்தாள்களிலும் கலைமகள், களம், கணையாளி, வயல், மல்லிகை, செங்கதிர், யாத்திரா, ஆசிரியம், கவிஞன், மூன்றாவது மனிதன் போன்ற இதழ்களிலும் மு.சடாட்சரனின் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
மு. சடாட்சரனின் மேட்டுநிலம் சிறுகதைத் தொகுதியானது புரவலர் புத்தக பூங்கா வெளியீடாக 2009 இல் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்ததுடன் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் இலக்கிய நூலுக்கான பரிசையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேட்டு நிலம் எனும் சிறுகதைத் தொகுதியில் பச்சமண், சுமை போன்ற கதைகள் மருதமுனை ஏ. எம். பாறுக் என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலப் பத்திரிகையில் (டெய்லி நியூஸ்) பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீலாவணனின் தலைமையிலான எழுத்தாளர்கள் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனையிலிருந்து தரமான இலக்கிய சஞ்சிகையொன்று வெளிவரவேண்டும் என்று கனவு கண்டனர். அக்கனவு 1967 இல் பாடும்மீன் சஞ்சிகை மூலமாக பலித்தது. பாடும்மீன் என்ற இதழானது மாசி 1967 இல் வெளியானது. பாடும்மீன் சஞ்சிகையானது பண் -01, பண் - 02 எனும் இரு இதழ்களே வெளிவந்தது. பாடும்மீன் - 01 இல் மு. சடாட்சரனின் பிடிப்பு எனும் கதை வெளிவந்தது. சிறந்த மரபுக் கவிதைகளையும் தரமான புதுக் கவிதைகளையும் எழுதியுள்ள மு.சடாட்சரன் அவர்கள் நாடக ஆக்கம், நடிப்பு, மேடைப்பேச்சு, சஞ்சிகை வெளியீடு எனப் பன்முக ஆற்றல் கொண்டு விளங்கினார். நீலாவணனின் மழைக்கை என்ற பா நாடகத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் கலாபூஷண விருது, அரச சாகித்திய விருது, கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள வித்தகர் விருது, கொடகே சாஹித்ய விருது போன்ற பல விருதுகளை தன்வயப்படுத்தியுள்ளார். தன் கவிதைகளோடு அனைவரும் மகிழ்ந்து வாழ்கின்ற ஒரு புத்துலகை ஆக்க முனைந்து வரும் மு.சடாட்சரனின் ஆயுட்கால கவிதைப் பணியைப் பாராட்டி கம்பன் புகழ் விருதாளர் கவிக்கோ அப்துல் ரகுமான்(தமிழ்நாடு) அவர்களால் நிறுவப்பட்ட “மகரந்தச் சிறகு” விருதினை 2016.03.24 அன்று கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர் நீதியரசர் மாண்புமிகு ஜெ.விஸ்வநாதன் அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கை வரலாறுடன் அவரைப்பற்றிய ஒரு ஆய்வு நூல் (மு.சடாட்சரத்தின் படைப்புகள்: இலக்கிய விமர்சன நோக்கு) ஆதம்பாவா அஸ்வறுவல் நிமெய்ரி என்பவரால் தமிழ் பிரிவு, மொழித்துறை, கலை கலாச்சார பீடத்திற்கு (இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ஒலுவில்) 2018ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 13147 பக்கங்கள் 3-4