ஆளுமை:கோணேஸ்வரன், கந்தவனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தவனம் கோணேஸ்வரன்
தந்தை கந்தவனம்
தாய் தில்லை நாச்சியார்
பிறப்பு 1950.07.22
ஊர் திருகோணமலை
வகை கவிஞர், அரசியல் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கந்தவனம் கோணேஸ்வரன் அவர்கள் திருகோணமலையைச் சேர்ந்த கவிஞரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார்.

இவர் 1950 ஆம் ஆண்டு ஆடி மாதம் 22 ஆம் திகதி சுப்பிரமணியம் கந்தவனம் மற்றும் தில்லை நாச்சியார் தம்பதியினருக்கு மகனாக யாழ் வடமராட்சியில் கரவெட்டியில் பிறந்தார். இவரது தந்தையார் தொலைதொடர்பு திணைக்களத்தில் பணியாற்றி வந்தவர். இவர் பிறந்து 19வது நாள் திருகோணமலைக்கு திரும்பினார்.

தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை சண்முக வித்தியாலயத்தில் கல்வி கற்று, பின்னர் தரம் நான்கு தொடக்கம் JSC வரை திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தனது சாதாரண தரத்தை கரவெட்டி இருதய கல்லூரியில் கற்றுத் தேர்ந்தார். இவரது தமிழ் தொடர்பான ஆர்வமும், சிறு வயது முதலே பேச்சுப் போட்டிகளில் பங்கு கொண்டு வந்த திறனும் இவரை இலக்கியத் துறை சார்ந்த செயற்பாடுகளில் ஈடுபட தூண்டியது. தனது 15 ஆவது வயதில் 1966 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 31ஆம் திகதி தினபதி பத்திரிகையின் சிறுவர் பகுதியில் தனது முதலாவது கவிதையை எழுதி வெளியிட்டார். அத்துடன் 19 வயது முதல் சுதந்திரன் பத்திரிகையின் நிருபராகவும் பணியாற்றினார்.

முரசொலி, ஈழமுரசு போன்ற பத்திரிகைகளிலும் நிருபராக பணியாற்றியுள்ளார். மேலும் சரிநிகர் பத்திரிகை எழுத்தாளராகவும் அரசியல் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு வந்தார். அத்துடன் தினமுரசு நிருபராகவும் செயற்பட்டார். தினமுரசு நிருபராக செயற்பட்ட காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையில் இடம் பெற்ற ஊழல் தொடர்பில் பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்தார். கனடா ஆதவன் ஊடகத்தின் நிருபராகவும் செயற்பட்டார். மேலும் ITBC என்கின்ற வானொலியில் செய்தி வாசிப்பாளராகவும் செயற்பட்டார். சுடரொளியில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் அரசியல் கட்டுரைகளை எழுதி வந்த ஒருவராவார்.

இவர் தனது கல்வியை சாதாரண தரத்துடன் இடைநிறுத்தி பின்னர் தனது திருமணத்தின் பின்னர் உயர்தரத்தை கற்று பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் கல்வி கற்க தேர்வானார். எனினும் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிவாரியாக தனது பட்டத்தை கற்றுக் கொண்டு இருந்த காலத்தில் 1977 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம் காரணமாக தனது படிப்பை பூர்த்தி செய்ய முடியாமல் இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி கற்கையை ஒரு வருடம் கற்று அதிலிருந்தும் இடை விலக வேண்டிய சூழல் காரணமாக இடை விலகினார்.

1973 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு திணைக்களத்தில் பணியாற்றி வந்த பொழுது அஞ்சல் அதிபர் பதவிக்கு போட்டி பரீட்சை ஊடாக உள்வாங்கப்பட்டிருந்தார். இவர் தபால் கந்தோரில் அஞ்சல் அதிபராக திருகோணமலை, மூதூர், கிண்ணியா, பொத்துவில் போன்ற பகுதிகளில் பணியாற்றி 1993 ஆம் ஆண்டு 43 வது வயதில் ஓய்வு பெற்றுக் கொண்டார்.

மேலும் இவரது ஆரம்பகால ஆசிரியர்களாகிய திருமதி. கந்தையா ஆசிரியை, கணபதிப்பிள்ளை ஆசிரியர் போன்றவர்களால் பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் ஊக்குவிக்கப்பட்டு, தமிழ் சார்ந்த ஆர்வத்தை அதிக அளவில் பெற்றுக் கொண்டார். மேலும் திருகோணமலை கவிராயர், சிவசேகரனார், கழகப்புலவர் போன்றோரின் செயற்பாடுகளும் இவரது திறன் விருத்திக்கு காரணமாகியது. மேலும் ஆரம்ப முதலே இலங்கை தமிழரசு கட்சியின் ஆர்வலராக செயல்பட்டு வந்ததுடன், பல்வேறுபட்ட கட்சிசார் அரசியல் விடயங்களிலும் ஈடுபட்டு வந்தார். மேலும் கட்சியின் ஒரு பேச்சாளராகவும் மேடைகளில் பேசினார். 1996 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்சபை உறுப்பினராக உள்வாங்கப்பட்ட இவர் திருகோணமலை மாவட்ட உப தலைவராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி சில நூறு வாக்குகளால் தோல்வியுற்றார்.

திருகோணமலை சார்ந்த பல செயற்பாடுகளில் முன்னின்று செயல்பட்ட ஒருவராவார். மேலும் இவர் 1964 காலப்பகுதிகளில் கையெழுத்து சஞ்சிகை ஆகிய "யாழ்" என்ற சஞ்சிகையை தனசேகர் என்பவருடன் இணைந்து நடத்தினார். அவ்வாறே 1967 இல் நவஜோதிராசாவுடன் இணைந்து கன்னித்தமிழ், தமிழ்மகள் போன்ற கையெழுத்து பத்திரிகைகளையும் நடத்தி வந்தார்.

1999 ஆம் ஆண்டு "மணக்கோலங்கள்" என்ற புத்தகத்தை வெளியிட்டார். மேலும் "இலக்கணம் அறிவோம்" என்ற நூலையும் வெளியிட்டார். அத்துடன் அரசியல் கட்டுரைகளை மற்றும் கவிதைகளை பல்வேறுபட்ட பத்திரிகைகளுக்கு தொடர்ச்சியாக எழுதி வரும் ஒரு நபர் ஆவார். இவர் இலங்கை தமிழரசு கட்சியின் செயல்பாடுகளுடன் நீண்ட காலம் இணைந்து செயற்பட்டதுடன், இரா. சம்பந்தன் அவர்களுடனும் மிக நீண்ட நட்புறவுடன் பழகியவர். கட்சியின் முக்கிய அரசியல் விடயங்களில் தாக்கம் செலுத்தும் ஒரு நபராக காணப்பட்டார்.