ஆளுமை:கெஜரத்தினம், கனகர் கைலாயப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகர் கைலாயப்பிள்ளை கெஜரத்தினம்
தந்தை கனகர் கைலாயப்பிள்ளை
தாய் மாணிக்கம்
பிறப்பு 1914.03.15
இறப்பு 2021.02.13
ஊர் நிலாவெளி
வகை சமூக சேவையாளர், அதிபர், ஆசிரியர், கிராம சங்க தலைவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நிலாவெளியின் ஒரு ஆளுமை மிக்க நபர் இவராவார். இவர் நிலாவெளி ஊரில் மூத்த பிரஜை என்ற வகையிலும், ஒரு ஆசிரியராகவும், அதிபராகவும், ஆலய பரிபாலன சபை தலைவராகவும், சமூக தொண்டனாகவும் நூற்றாண்டு காலம் நிலாவெளியில் வாழ்ந்து பங்காற்றிய ஒருவராவார்.

கோனேசர் கல்வெட்டு குறிப்பிடப்பட்ட கனகசுந்தரப்பெருமாள் வழி வந்த காப்புக்கட்டியார் பரம்பரையைச் சேர்ந்த கனகர் கைலாயப்பிள்ளை, மற்றும் முருகேசு மகள் மாணிக்கம் தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1914 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி திருக்கோணமலையில் பிறந்தார். இவரது இளைய சகோதரன் கைலாயப்பிள்ளை கனகரத்தினம் 1927 இல் பிறந்தார். கெஜரத்தினம் தனது ஐந்தாவது வயதில் நிலாவெளி சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரம்மஸ்ரீ சிவச்சாமி குருக்களால் வித்தியாரம்பம் செய்யப்பட்டு, நிலாவெளி மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையில் கல்வி பயின்று 1925 ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பில் சித்தி அடைந்தார். தொடர்ச்சியாக கல்வி பயில முடியாத நிலை கிராமத்தில் காணப்பட்டதனால், சமய நூல்கள், அறிவு நூல்களை மனனம் செய்து, தந்தையாருக்கு ஒப்புவித்து படித்து வந்தார். 1928 ஆம் ஆண்டு முதல் நிலாவெளி மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலைக்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக திரு. தர்மலிங்கம் அவர்களும், திரு. கே. ஆர். இரத்தினசிங்கம் அவர்களும் நியமிக்கப்பட்டனர். மேற்படி ஆசிரியர்கள் இவரை தனி ஒரு மாணவனாக வைத்து ஆறாம், ஏழாம் வகுப்பு கற்பித்து, எட்டாம் வகுப்புக்கு கனிஷ்ட தராதர பத்திரம் படிக்க மட்டக்களப்பு அரசடி சாதனா பாடசாலைக்கு அனுப்புவதற்கு திரு. கே. ஆர். இரத்தினசிங்கம் பொறுப்பேற்று கற்பித்து, 1930 ஆம் ஆண்டு ஆனி மாதம் மட்டக்களப்பு அரசினர் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு பாடசாலை கனிஷ்ட தராதரப்பத்திரம் வகுப்பில் சித்தி அடைந்து சிரேஷ்ட பாடசாலை தராதரப்பத்திர வகுப்பு கற்றுக் கொண்டிருக்கும் போது தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்தமையால், கல்வியில் தடை ஏற்பட்டு, பரீட்சையில் தோல்வி கண்டார்.

இதனால் மேற்படிப்பை தொடர முடியாத நிலையில் தந்தையாரின் நண்பர் பொ. சிவசம்பு என்னும் கட்டுக்குளபற்று வன்னிமை காரியாலய இலிகிதராக இருந்தவர் மூலம் உப்பு செய்கைக்கால கரைக்காவல் வேலை கிடைத்தது. 1934 காலங்களில் அங்கு வேலை செய்த போது திருக்கோணமலை நகருக்கு சென்ற சந்தர்ப்பத்தில், அரசடி பாடசாலையில் படித்த போது அங்கு ஆசிரியராக இருந்த எம். கே. சிதம்பரம்பிள்ளை அவர்களை சந்தித்தார். அவர் ஊடாக தனிப்பட்ட பரீட்சார்த்தியாக சிரேஷ்ட பாடசாலை தராதரப் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்தார். 1935 ஆம் ஆண்டளவில் ஐப்பசி மாதம் சாம்பல்தீவு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தற்காலிக ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து கற்பித்து வந்த நிலையில் 1936 ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி நிரந்தர ஆசிரியராக நியமனம் பெற்றார். 1937 ஆம் ஆண்டு ஆடி மாதம் பெருந்தெரு மெதடிஸ்த மிஷன் பாடசாலைக்கு மாற்றப்பட்டு, அதன் பின்னர் 1938 ஆம் ஆண்டு நிலாவளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டு, 1951 வரை அங்கு உதவி ஆசிரியராக கடமை ஆற்றினார்.

1939 ஆம் ஆண்டு நிலாவளியைச் சேர்ந்த திரு. விசுவர் சபாபதிப்பிள்ளையின் புதல்வி இலட்சுமிப்பிள்ளை என்பவரை மணம் முடித்து, திருமண பந்தத்தில் இணைந்தார். இவர்களது குழந்தைகளாக இராசநாயகி, சித்திரவேலாயுதன், மகேஸ்வரி, தவராசா, தர்மகுலராசா ஆகியோரை குழந்தையாக பெற்றனர். எனினும் இராசேஸ்வரி, கயிலாயராசா ஆகியோர் சிறு குழந்தையிலேயே இறந்து போயினர். இவர் நிலாவளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றிய போது நிலாவளி ஐக்கிய பண்டகசாலை செயலாளராகவும், நிலாவளி கிராமச் சங்க உதவி தலைவராகவும் இருந்து பொது சேவைகளில் முன்னின்று செயலாற்றினார். 1952 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் ஆசிரியர் கல்லூரியில் பயிற்றப்பட்டு, 1954 ஆம் ஆண்டு நிலாவளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு பொறுப்பாசிரியராக கடமை ஏற்றார். அக்காலத்தில் வித்தியா அபிவிருத்தி பண பரீட்சையில் 1954 ஆம் ஆண்டு 8 மாணவர்களும், 1955 ஆம் ஆண்டு தோற்றிய 16 மாணவர்களில் 14 மாணவர்களும் சித்தி அடைந்தனர். இந்த சதவிகிதம் இன்று வரை நிலாவளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் சிறந்த பெறுபவராக பதிவு செய்யப்பட்டுள்ளது. 1957ஆம் ஆண்டு இவர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று, கும்புறுபிட்டி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதுவரை மூன்றாம் ஆண்டு வரை இருந்த பாடசாலையை ஆறாம் வகுப்பு வரை உயர்த்தியதோடு, வித்தியா அபிவிருத்தி பண பரீட்சையில் மாணவர்களை சித்தியடைய செய்து, பாடசாலையின் வளர்ச்சிக்கு அரும்பெரும் பங்காற்றினார்.

1964 ஆம் ஆண்டு வரை அங்கு தலைமை ஆசிரியர் செயலாற்றி, அதன் பின்னர் நிலாவெளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார். இவருடைய காலப்பகுதியில் பாடசாலை மாபெரும் வளர்ச்சி கண்டதுடன், 1967 ஆம் ஆண்டு நிலாவெளி தமிழ் மகா வித்தியாலமாக தரம் உயர்த்தப்பட்டது. இவர் தனது 57 வது வயதில் 1971 ஆம் ஆண்டு நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்தின் முதல் அதிபராக ஓய்வு பெற்றார். அந்தக் காலப்பகுதியில் ஊர் மக்கள் இவரது சேவையை போற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. இவர் கிராம முன்னேற்ற சங்கத்தின் செயலாளராக இருந்து பல பொது சேவைகளை செய்ததுடன், 1967 ஆம் ஆண்டு நிலாவளி இந்து பரிபாலன சபைத் தலைவராகவும் இருந்து கோயில் திருப்பணிகளை செய்து 1972 ஆம் ஆண்டு நிலாவளி சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழாவையும் முன்னின்று நடத்தி வைத்தார். மேலும் கிராம முன்னேற்ற சங்க தலைவராகவும், நிலாவெளி ஐக்கிய நாணய சங்கத் தலைவராகவும், மக்கள் குழு தலைவராகவும், ஆலய பரிபாலன சபை போஸ்வரராகவும் பணியாற்றி உள்ளார். 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து, இருந்த போது கோயில்கள் பூட்டியிருந்த காலத்தின் பின் 1994 ஆம் ஆண்டு மக்கள் ஒன்றிணைந்து நிலாவளி சித்தி விநாயகர் கோயில் திருத்தங்களை செய்வித்து, கோயிலை மீண்டும் திறந்து பூஜையில் நடத்த ஏற்பாடு செய்தார். பின் 1996 ஆம் ஆண்டு ஆலய பரிபாலன சபை தலைவராக இருந்து 2002ல் கோவில் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி முடித்தார். அவ்வாறே திருகோணச்சர ஆலயத்தின் மகோற்சவத்தில் பத்தாம் நாள் திருவிழாவான கட்டுக்குளப்பற்று திருவிழாவையும் பொறுப்பேற்று சிறப்பாக நடத்தி வந்தார். இவர் 1947 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல கோயில்களில் கந்தபுராண படலம், திருவாசக முற்றோதல், பத்தினி அம்மன் கோயில் சிலம்பு கூறல் போன்றவற்றில் ஈடுபட்டு தொண்டாற்றி வந்தார். ஏடுகளில் இருந்த சிலம்பு கூறல் போன்ற பாடல்களை புத்தகத்தில் மாற்றி எழுதித்தந்தமையும் இவரது அரும்பெரும் சேவையாகும்.

இவர் 13.02.2021 யாழ்ப்பாணத்தில் இளையமகனிடம் சென்றிருந்த போது 107வது வயதில் மரணமடைந்தார்.