ஆளுமை:குருமுதல்வர் அகத்தியர் அடிகள், தில்லையம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குருமுதல்வர் அகத்தியர் அடிகள்
தந்தை தில்லையம்பலம்
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1963.07.29
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை சைவ பெரியார், ஆத்மீக சிந்தனையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை நகரில் சங்கீத இசைக்குடும்பத்தில் 1963.07.29 ஆந் திகதி தில்லையம்பலம், வள்ளியம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தில்லைக்குமரன் என்பது இவரது இயற்பெயராகும். இவருடைய தந்தையார் சங்கீதம் பயில்வதற்காக அடிக்கடி இந்தியா சென்று வருபவர் என்றும் அறியக் கூடியதாகவுள்ளது. திருகோணமலையின் மூத்த சங்கீதக் கலைஞர்களுள் அனேகமானோர் தில்லையம்பலம் ஆசிரியர் அவர்களிடம் சங்கீதம் பயின்றவர்களே என்பது அவரது புலமைக்கு எடுத்துக்காட்டாகும்.

திருகோணமலை கோணேஸ்வரா வித்தியாலயம், புனிதவளனார் பாடசாலை, இந்துக்கல்லூரி போன்றவற்றில் கல்வி கற்ற தில்லைக்குமரன் அவர்கள் தம்முடைய தந்தையாரைப் போல தாமும் சங்கீத ஆசிரியராக பதினொரு வருடங்கள் கடமையாற்றினார். பின்னர் ஆத்மீகத்தில் ஏற்பட்ட துறவு நாட்டம் காரணமாக வேலையை உதறிவிட்டு, 1993 ஆம் ஆண்டு இந்தியா சென்று திருவண்ணாமலையில் தங்கி அங்குள்ள துறவிகளுடன் தானுமொரு துறவியாக வாழ்ந்தார்.

இவர் இலங்கையில் இருந்தபோது சுவாமி நித்தியானந்தாவுடனான கடிதத்தொடர்பு காரணமாக சிற்பவானந்தரின் ஆச்சிரமத்தை நோக்கி இந்தியா சென்றார். அங்கு சுவாமி தமது குருவாக சுவாமி நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சுவாமி ஸ்வஸ்தானந்தா எனப் பெயரும் பெற்றார். பின்னர் மீண்டும் தனது சொந்த இடமான திருக்கோணமலைக்கு வந்து இசையுடனான ஆத்மீகப் பணியில் டுபட்டு வரலானார்.

இவ்வாறிருக்கும் காலப்பகுதியில் கன்னியாவில் பீலியடி என்னுமிடத்தில் ஒரு துண்டுக்காணியைப் பெற்று, காடு திருத்தி, சிவன் மலையை மையமாகக் கொண்டு "பிரம்ம சேத்ரா ஆத்மீக பீடம்" என்னும் அமைப்பு ஒன்றை உருவாக்கியதோடு, ஸ்ரீ லலிதாம்பிகா உடனுறை பேரானந்தீஸ்வரர் ஆலயத்தையும் தோற்றுவித்தார். அத்தோடு இங்கு தினப்பூசைகளையும் செய்து வந்தார்.

இசை மூலமே இறைவனின் நெருக்கத்தை அதிகப்படுத்தலாம் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட சுவாமி ஸ்வஸ்தானந்தா அவர்கள் கலை இலக்கிய செயற்பாடுகள், கீர்த்தனைகள், நடனவிழாக்கள், நாட்டிய நாடகங்கள் போன்றவற்றை திருகோணமலையைச் சேர்ந்த சங்கீத, நடன ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஒன்று சேர்த்துக் கொண்டு முத்தமிழ் செழித்தோங்க தன்னாலான பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

திருக்கோணமலையுடன் மட்டும் நில்லாது மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, மலேசியா, சிங்கப்பூர் என இவரது இசைத்திறமை பிரகாசித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது. 28-09-2018 தென்கைலை ஆதீன கலை பண்பாட்டு அமைப்பு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட "தித்திக்கும் முத்தமிழ் கதம்ப நிகழ்வு - 2018" மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது.

இது கண்ணகியின் வாழ்க்கை வரலாற்றை தமிழர்கள் வகுத்து வாழ்ந்த ஐவகை நிலங்களுக்குரிய ஒழுக்கங்களுடன் இணைத்துக் காட்டும் நாட்டிய நிகழ்வாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சுவாமி அவர்களின் தலைமையில் திருக்கோணமலையிலுள்ள பெருமளவிலான சங்கீத, நடன ஆசிரியர்களும் மாணவர்களும் நூற்றுக்கும் மேல் கலந்து கொண்டிருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இந்நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்ட ஒன்றாகவும் விளங்கியது.

2015 ஆம் ஆண்டளவில் தனது பெயரை "அகத்தியர்" என தமிழில் அமைத்துக் கொண்ட சுவாமி அவர்கள், தன்னுடைய நிலையத்தையும் "தென்கயிலை ஆதீனம்" எனவும் மாற்றிக்கொண்டார். திருக்கோணமலையில் ஓர் ஆதீனம் என்னும் போது நம்முடைய நினைவுக்கு வருவது சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் சைவத்துக்கும் தமிழுக்கும் அளப்பெரும் பணியாற்றியதாக அறியப்பட்ட திருக்கோணாச்சல ஆதீனம் ஆகும். சின்னத் தொடுவாய் பிள்ளையார் கோயில் வளாக சூழலில் அமைக்கப்பட்டிருந்த திருக்கோணாச்சல ஆதீனம் இன்றில்லை என்பது வருந்தத்தக்கது.

சுவாமி அகத்தியர் அடிகளார் தென்கையிலை ஆதீனத்தில் இருந்துகொண்டு முதலிக்குளம், இலங்கைத்துறை, வெருகல் முகத்துவாரம், வாகரை, களுத்துறை, மலையகம் எனப் பல்வேறு இடங்களில் அறநெறி வகுப்புக்களை ஆரம்பித்தும், ஏற்கனவே உள்ளவற்றை உதவி வழங்கல் மூலம் ஊக்கப்படுத்தியும் சைவத்தை வளர்த்து வருகின்றார். இவருக்கு உறுதுணையாக இவரது சீடரான "இளையபட்டம் திருமூலர் தம்பிரான்" அவர்கள் இருந்து வருகின்றார். இவர் தம்பலகாமத்தைச் சேர்ந்தவராவார்.

இங்கு நடைபெறுகின்ற தமிழ், தமிழர், சைவம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பை வழங்கி வருகின்ற அகத்தியர் அடிகளார், சம்பூர் தமிழ்க்கலா மன்றத்தினால் 2018 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக ஆண்டுதோறும் சம்பூரில் நடாத்தி வருகின்ற முத்தமிழ் விழாக்கள், சைவசமயப் பெருவிழாக்கள் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தமது ஆசியை வழங்கி சிறப்பித்துள்ளார்.

இவரது கலை இலக்கிய சமூக சமய சேவையைப் பாராட்டி 2016 ஆம் ஆண்டு திருகோணமலை பிரதேச செயலகத்தினரால் கௌரவிக்கப்பட்டார். திருகோணமலை இசை நர்த்தன கலைஞர் ஒன்றியத்தால் 2014 ஆம் ஆண்டில் "இயல் இசை ஆத்மஞானி" என்னும் விருதும், தித்திக்கும் முத்தமிழ் கதம்ப நிகழ்வு -2018 இன் போது முத்தமிழ் கலைவாரிதி" என்னும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கன்னியாவில் பிரதான வீதி, செம்பியன் ஆறு, சூழவர வயல்வெளிகள் காணப்படுகின்ற சிவன் மலையில், 2021.03.11 இல் இம்மலையைச் சூழவர 108க்கு மேற்பட்ட சிவலிங்கங்கள் வைத்துப் பூசித்து சைவப்பெரு மக்களுக்கான ஆத்மீக சூழலை அகத்தியர் அடிகள் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள்.

இன்றளவும் தினப்பூசைகள், திருமந்திரம் ஓதுதல், திருமுறை முற்றோதல், பண்ணிசைப் போட்டி, சைவர்களுக்கான சிவதீட்சை வழங்குதல், அறநெறி வகுப்புகள், போன்றவற்றை தென்கயிலை ஆதீனத்திலும் வெளியிலுமாக நடாத்தி வருகின்ற சுவாமி அகத்தியர் அடிகளாரின் பணி போற்றுதற்குரியதே.