ஆளுமை:குமாரநாயகம், கோணாமலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோணாமலை குமாரநாயகம்
தந்தை கோணாமலை
தாய் தங்கம்மா
பிறப்பு 1955.09.10
இறப்பு 2023.05.16
ஊர் சம்பூர், மூதூர்
வகை பல்துறை செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கோணாமலை குமாரநாயகம் அவர்கள் குளக்கோட்டு மன்னனால் பெயரிட்டு குடியமர்த்திய சம்பூரணப் பதியில் கணபதிப்பிள்ளை கோணாமலை, தங்கம்மா தம்பதியினருக்கு 1955 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பத்தாம் நாள் சனிக்கிழமை ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.

இவர் தபாலகர், அறிவிப்பாளர், சம்பூர் ஆலய பரிபாலன சபை உபசெயலாளர், சம்பூர் அரசையாடி விநாயகர் நாகாம்பாள் ஆலய பரிபாலன சபை தலைவர், சம்பூர் ராமகிருஷ்ணா விளையாட்டு கழக தலைவர், அரச ஊழியர் ஓய்வூதிய சங்க தலைவர், தி/மூ/சம்பூர் மகாவித்தியாலய பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் ஊடகவியலாளர் என பல பதவிகளில் இருந்தவர் ஆவார்.

சிறுவயதில் குறும்புத்தனம் நிறைந்தவராக வளர்ந்து வரும் காலத்தில் 1960 இல் சம்பூர் மகா வித்தியாலயத்தில் தனது பள்ளி படிப்பை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பள்ளி செல்வதில் நாட்டம் காட்டாது நண்பர்களுடன் காடு, மேடு, கடல், குளம் என சுற்றி திரிந்தார். தாயாரின் கண்டிப்பால் ஒருநாள் அவரின் புத்தகங்களை எல்லாம் எடுத்து முற்றத்தில் வீசி எறிந்து, "இனிமேல் நீ பாடசாலைக்கு போக வேண்டாம் கடல், குளம் என்று சுற்று அதுவே உனக்கு நல்ல வாழ்க்கையைக் தரும்" என கடிந்து ஏசியதன் விளைவாக அன்று தனது தோளில் ஏற்றிய புத்தகப்பையை SSC படிப்பு முடியும் போதுதான் இறக்கி வைத்தார்.

பாடசாலையின் பரிசளிப்பு விழாக்களில் தொடர்ச்சியான வரவுக்காக வருடந்தோறும் பரிசில்களைப் பெற்றுக் கொள்வார். காலையில் பாடசாலையின் படலையை முதலில் திறப்பது குட்டி தான் என்றும், குட்டி என்றே பெயரில் அவரை செல்லமாக வீட்டாரும், நண்பர்களும் அழைப்பார்கள். பாடசாலையின் முடிவிலும் இறுதியாகச் செல்பவரும் இவர்தான் என்றும் கூறுவார்கள். இவர் மீது ஆசிரியர்கள், அதிபர்கள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்கள்.

சம்பூர் மகா வித்தியாலயத்தின் பெயரை நிலை நாட்ட கிழக்கு மாகாணத்தின் குறுந்தூர (100 மீட்டர்) ஓட்ட சம்பியனாகவும், மரதனோட்ட சம்பியனாகவும், பல பிரதேசங்களும் அறியப்பட்டவராக காணப்பட்டார். அயல் பாடசாலைகளில் நடைபெற்ற இல்ல, வட்டார விளையாட்டுப் போட்டிகளில் அஞ்சல் ஓட்ட குழுவினை வெற்றிப் பாதையில் இட்டுச் சென்றவராகவும் காணப்பட்டார். இந்தக் குழுவில் வே. சிறிதரன், பே. ராமநாதன், வே. யோகேந்திரா, சரா. புவனேஸ்வரன் போன்ற இன்னும் பலர் இணைந்திருந்தனர். இதனால் இவர் ஒரு ஓட்ட வீரனாகவும் மதிக்கப்பட்டார்.

1975 காலப்பகுதிகளில் சம்பூரில் மணி சவுண்ட் என்ற பெயரில் ஸ்பீக்கர் மணியம் என்றறிந்த பி. எஸ். மணியம் அவர்கள் ஒலிபெருக்கி துறையில் பாரிய பணியை செயற்படுத்தி வந்தார். இவரே குமாரநாயகம் அவர்களை அறிவிப்பாளராக அறிமுகம் செய்தார். அயல் கிராமமான கட்டைபறிச்சானின் கலைவாணி இசைக் குழுவிலும் இவர் அறிவிப்பாளராக செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் பாட்டுக்கார தியாகன் என்றழைக்கப்படும் தியாகராஜா, ஹார்மோனியம் சிவசேகரம் மற்றும் இவர் சேர்ந்து 'நீரோ' இசைக்குழு என்று ஒன்றை அமைத்து அதன் தலைவராக இருந்து அறிவிப்பாளராகவும், டோள்கி வாத்திய கலைஞராகவும் திகழ்ந்தார். இதற்காக இவருக்கு சம்பூர் தமிழ் கலா மன்றம் "மதுரக் குரலோன்" என்ற விருதினை 70 காலப்பகுதியில் வழங்கியது. பின்னாளில் அக்கழகம் ஸ்ரீ முருகன் இசைக்கழகம் என பெயர் பெற்று அதிலும் அறிவிப்பாளராகவும் சில காலம் தலைவராகவும் திகழ்ந்தார்.

1975 ஆண்டில் இந்து இளைஞர் மன்றம் சம்பூரில் ஸ்தாபிக்கப்பட்டபோது திரு. இ. தங்கவடிவேல் (RDO) தலைவராகவும், திரு. அ. குகராஜா செயலாளராகவும், கோ. குமாரநாயகம் பொருளாளராகவும் இருந்து அறநெறி வகுப்புக்கள் மற்றும் ஆன்மீக சேவைகளை சம்பூர் மக்களுக்கு ஆற்றி வந்தார். விளையாட்டுத் துறையில் YMTA என்ற கைப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவராகி, பின்னாளில் அது ராமகிருஷ்ணா விளையாட்டு கழகமாகியது. இதன் தலைவராக இறக்கும் வரை செயல்பட்டார். அகில இலங்கை முழுவதும் பல வெற்றிகளை பெற்று முன்னணியில் திகழ்ந்த கழகமாக விளங்கச் செய்தார். கழகத்தின் வீரர்களை அரவணைப்பதிலும் அவர்களுக்கான உதவிகளை வழங்குவதிலும் ஒரு சிறந்த தலைமைத்துவத்தை மேற்கொண்டவராக காணப்பட்டார்.

1988 களில் சம்பூர் அரசையடி விநாயகர் நாகாம்பாள் ஆலயத்தின் பரிபாலன சபை தலைவராக பொறுப்பேற்று பல புனரமைப்பு வேலைகளை மேற்கொண்டு வைகாசி விசாக பொங்கல் நிகழ்வினை வருடா வருடம் திறம்பட நடத்தி ஆன்மீகத்திற்கு சேவையாற்றினார். அத்தோடு சம்பூர் ஆலய பரிபாலன சபையின் பன்னிரு குடி முகாமையாளருள் சந்தானர் குடியின் முகாமையாளராகி சம்பூர் ஆலய பரிபாலன சபையின் உப செயலாளராக செயல்பட்டு சம்பூர் பத்திரகாளி அம்பாள் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், கிராம தேவதைகள் வணக்கம் அனைத்துக்கும் ஆன்மீகத் தொண்டாற்றினார். சமூக நலன் வேலைகளிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டார்.

தி/மு/சம்பூர் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராக 2000 ஆண்டுகளில் இருந்து நோய்வாய்ப்படும் வரை சிறப்புற பணியாற்றினார். இரவு நேர வகுப்புக்கள், பாடசாலையின் பௌதீக வள அபிவிருத்திக்கும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைக்கும் உறுதுணையாக அதிபரோடும் ஆசிரியர்களோடும் சேர்ந்து செயல்பட்டார்.

அத்தோடு 2016 ஆண்டு சம்பூர் மீள்குடியேற்றத்தின் பின்னர், அரச ஊழியர்கள் ஓய்வூதியர்கள் என அனைவரது உதவிகளும் மறுக்கப்பட்டதால் 'அரச ஊழியர் ஓய்வூதியர் சங்கம்" என ஆரம்பித்து அதன் தலைவராக கோ. குமாரநாயகம் அவர்களும், செயலாளராக அ. குகராஜா அவர்களும், பொருளாளராக திரு. ந. ராசலிங்கம் அவர்களும் செயற்பட்டு நலனோம்பு வேலைகள் புரிந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் எண்பதுகளில் இவருடைய அண்ணன் கலாபூஷணம் கோணாமலை திரவியராசா அவர்கள் தினபதி, சிந்தாமணி,தந்தி, மித்திரன், உதயன், சஞ்சீவி போன்ற பத்திரிகைகளுக்கான ஊடகவியலாளராக செயல்பட்டு சேவையாற்றிய போது, இவர் இலங்கையின் முதன்மை நாளேடான “வீரகேசரி" நாளிதழின் ஊடகவியலாளராகவும் செயற்பட்டு மூதூர் பிரதேசத்தின் செய்திகளை சுடச்சுட மக்களுக்கு வழங்கி ஒரு ஊடகவியலாளராக சிறந்த சேவையாற்றினார். இவ்வாறு இவரின் பொதுச் சேவைகளை சொல்லில் அடங்க முடியாது மேலும் சொல்லிக் கொண்டே போகலாம்.

1965 களில் தனது அக்காவுடன் திரியாயில் சில காலம் வசித்து வந்தார். அந்த நேரத்தில் அங்கு பாடசாலைகளில் நடைபெற்ற ஓட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னாளில் தந்தையுடன் சேர்ந்து வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு சம்பூர் பிரதேசத்திற்கான கமத்தொழில் செயற்பாட்டிலும் ஒரு கமக்காரராக முன்னின்று உழைத்தார்.

கல்வி கற்று முடிந்த காலத்தில் இலங்கை தபால் திணைக்களத்தில் அரச ஊழியராக பணியாற்றினார். இவர் தபாலகராக 35 ஆண்டுகள் சேவையாற்றியிருந்தார். மூதூர், மட்டக்களப்பு, திருகோணமலை, கட்டைப்பறிச்சான், சம்பூர் போன்ற தபாலகங்களில் உன்னத சேவை புரிந்தார்.

இவரது திருமண வாழ்க்கை இனிதாக அமைந்தது. 1992 இல் சம்பூரைச் சேர்ந்த செல்லத்தம்பி வடிவம்மா தம்பதிகளின் புதல்வி உதயசந்திரிக்காவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூத்தவராக நிரோசனா என்ற மகளும், இரண்டாவதாக கோபிசாந் என்ற மகனும், மூன்றாவதாக சுதர்சனா என்ற மகளும் மூன்று மக்கட் செல்வங்களாக ஈன்றெடுத்தார்கள்.

காலனின் அழைப்பு நெருங்கியதும் இறுதியில் சிகிச்சை பெறுவதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போதும், சிகிச்சை பயனளிக்காததால், 2023.05.16 அன்று மாலை 8.10 மணியளவில் அன்னாரது உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தது. எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்தி பரமபதம் அடைந்துவிட்டார்.