ஆளுமை:குகதாசன், சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகம் குகதாசன்
தந்தை சண்முகம்
தாய் தனபாக்கியம்
பிறப்பு 1953.10.16
ஊர் திரியாய், திருகோணமலை
வகை அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். திருகோணமலை நகரில் இருந்து கடலோரமண்டி வடக்கு நோக்கி நகரும் போது குச்சவெளிக்கும், புல்மோட்டைக்கும் இடையில் இருக்கும் திரியாய் என்ற அழகான சிற்றூரில் சண்முகம், தனபாக்கியம் தம்பதிகளுக்கு 1953 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 16 ஆம் திகதி பிறந்தார்.

குகதாசன் அவர்கள் அந்த திரியாய் மண்ணின் பொருளாதார அபிவிருத்தித் திட்டமிடலில் இளநிலைப் பட்டமும் (B.A.), அரச அறிவியலில் முதுநிலைப் பட்டமும் (M.A.) பயின்ற முதல் பட்டதாரி ஆவார் என்பதோடு, வடக்கு கிழக்குத் தமிழர்களின் உரிமைகளை பெற்று எடுப்பதற்காக நடைபெற்ற போராட்ட வரலாற்றில், 1970 களின் இறுதிக் காலங்களில் டேவிட் ஐயா, மற்றும் டாக்டர் ராஜசுந்தரம் இணைந்து தொடங்கிய காந்தீயம் திருகோணமலைக்கு வந்த போது அதன் முதல் தலைவராக இருந்த “சிவஞானச் செல்வர்” செல்லப்பா சிவபாதசுந்தரம் ஐயா அவர்களின் பின்னர் 1977 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை அரசாங்கத்தினால் காந்தீயம் தடை செய்யப்படும் வரை அந்த காந்தீயத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவராக கடமையாற்றினார்.

சண்முகம் குகதாசன் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் காந்தீய தலைவராக கடமையாற்றிய காலத்தில் இலங்கை முழுவதும் 1977ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் இன்னலுற்ற மலையகத் தமிழ் மக்களை கொண்டுவந்து குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லம்பத்தை, மொறவெவப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பன்குளப்பகுதி மற்றும் எல்லைக் காளிகோவில் பகுதி, அத்தோடு மூதூர்ப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியடிச் சோலைப் பகுதி, முதலிய இடங்களில் குடியமர்த்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் முன்னின்று உழைத்தார் என்பதோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட காந்தீயப் பாலர் பாடசாலைகளையும் காந்தீயத்தின் மூலம் நடத்தி வந்தார் .

குகதாசன் அவர்கள் தலைமை வகித்த காந்தீய அமைப்பில் தொண்டர்களாக இயங்கிய பலர் காந்தீய தடையின் பின்னாளில் ஆயுதப் போராளிகளாகி தீவிரவாத அரசியலை கையில் எடுத்த போதும், சண்முகம் குகதாசன் அவர்கள் மிதவாத அரசியலுடனேயே தன்னை மட்டுப் படுத்திக் கொண்டாரே என்றாலும், இவரது மிதவாத அரசியலைப் பின்பற்றி வளர்ந்து வந்த திரியாய் இளைஞர்களில் பலர் தீவிர ஆயுதப் போராட்டங்களிலும் தங்களின் பங்களிப்புகளைச் செய்தார்கள்.

இலங்கை அரசாங்கத்தினால் காந்தீயம் தடைசெய்யப்பட்டு, அதன் தலைவராகிய டேவிட் ஐயா, மற்றும் செயலாளராகிய டாக்டர் ராஜசுந்தரம் அவர்கள் கைது செய்யப்பட, திருகோணமலை மாவட்ட காந்தீய தலைவரான சண்முகம் குகதாசன் அவர்களும் இலங்கை காவல் துறையால் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்குப் பின்னர் ஆதாரத்துடன் எதையும் நிரூபிக்க முடியாத காரணத்தால் விடுதலையாக்கப்பட்டார்.

விடுதலையானாலும் தொடர் கண்காணிப்பில் இலங்கை காவல் துறையின் அச்சுறுத்தல்களின் மத்தியில் வாழ்ந்த சண்முகம் குகதாசன் அவர்கள் 1983 ஆம் ஆண்டு ஜூலைமாதம் 23 ஆம் திகதி விடுதலை புலிகளால் இலங்கை ராணுவத்திற்கு எதிராக நடத்தப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரத்தினால், இலங்கைப் படைகளின் கண்காணிப்பில் இருந்த குகதாசனுக்கு ஏற்கனவே இருந்த உயிர் அச்சுறுத்தல்களின் காரணமாகவும் வேறு வழியின்றி அவர் தமிழ்நாட்டுக்கு சென்றார்.

அங்கே தமிழரசுக் கட்சியின் நிறுவனரான செல்வநாயகத்தின் மகன் சந்திரஹாசனுடன் இணைந்து, ஈழ எதிலியர் மறுவாழ்வுக் கழகம் (OFERR) என்ற அமைப்பைத் தமிழ் நாட்டில் பதிவு செய்தார். அந்த அமைப்பின் மூலம் இலங்கையில் இடம்பெற்ற இனக்கலவரங்களால் உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து, முகாம்களில் தங்கியிருந்த இலட்சக் கணக்கான இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு நிவாரணம் மறுவாழ்வு மற்றும் கல்வி வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அந்த வகையில் அன்றைய கால கட்டத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த எம். ஜி. இராமச்சந்திரனை, அந்த OFERR அமைப்பின் பிரதிநிதியாகப் பல முறை நேரில் சந்தித்து அந்த MGR என்ற மக்கள் திலகத்தின் மூலம், தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழ் அகதி மாணவர்கள் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில் நுட்பம், வணிகம் மற்றும் கலைத் துறைகளில் பட்டப் படிப்புகளுக்கு அனுமதி பெறவும் மிகக் குறைந்த கட்டணத்தில் தம் கல்வியைத் தொடரவும் தமிழ் நாட்டு முதலமைச்சர் MGR மூலம் ஆவண செய்து அரும்பணி ஆற்றினார்.

இவ்வாறு ஆறு ஆண்டு தொடர்ச்சியான குகதாசனின் சிறப்பான பணியாற்றலினால் இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற இலங்கைத் தமிழ் மாணவர்களில் 180 மாணவர்கள் மருத்துவ படிப்பையும், 480 மாணவர் பொறியியல் படிப்பையும், 2000 மாணவர் பட்டப்படிப்பையும் பெற்றுக் கொண்டார்கள் என்பதோடு அந்த மாணவர்கள் கல்வியைத் தொடர ஐயா அவர்களது அந்த OFERR நிறுவனத்தின் மூலம் பண உதவியும் பெற்றுக் கொடுத்தார். இவரது இந்த உதவியினால் இந்தியாவின் தமிழ் நாட்டில் பட்டப்படிப்பை முடித்த பல ஆயிரம் ஈழத் தமிழ் இளைஞர்கள், சட்டத்துறை, வைத்தியத்துறை, அத்தோடு பொறியியல் துறை என்று இன்னும் பல தொழில்முறைத் துறைகளில் தமக்கென தனித்துவ வழிசமைத்து, உலகெல்லாம் பரந்து வாழ்கின்றார்கள் என்பதோடு, அவர்களில் சிலரது நிதி உதவி சண்முகம் குகதாசன் அவர்களினது நல்ல திட்டங்களுக்கு இன்றுவரை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதே யதார்த்தம் ஆகும்.

குகதாசன் அவர்கள் தமிழ் நாட்டில் தங்கி இருந்த அதே காலத்தில் தனது OfERR நிறுவனத்தில் பணியாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மா என்ற பெண்ணை காதலித்து மணந்து ஆண், பெண் என இரு பிள்ளைகளுக்கு தந்தையாகி இருந்தாலும், தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் மாறாத பற்று கொண்டதனால் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தின் தேவையை வலியுறுத்தி அதனை அனைத்து இந்திய மக்களுக்கும் அறியப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்னையில் காந்தளகம் புத்தக நிலையம் வைத்திருந்த மறவன் புலவு சச்சிதானந்தத்துடன் பணியாற்றி அதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றையும் நடத்தினார். இதன் காரணமாக அன்றைய இந்தியாவின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட அரசின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய உளவுத்துறையால் கண்காணிக்கப்பட்டார் என்பதோடு ஐயா அவர்களது அந்த ஆங்கிலப் பத்திரிகையும் இந்திய அதிகார வர்க்கத்தினால் தடை செய்யப்பட்டதுடன், 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி நடைபெற்ற துன்பியல் சம்பவத்தின் பின்னரான காலத்தில் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழருக்கு எதிரான கெடுபிடிகள் அதிகரித்த வேளையில் குகதாசன் அவர்களை இந்தியா வெளியேறக் கூறியதை தொடர்ந்து கனடாவுக்கு வந்த குகதாசன் அவர்கள் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத்தில் இணைந்து, அந்த சங்கத்தின் தலைவர், மற்றும் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்தக் காலப் பகுதியில் போராலும் இயற்கைப் பேரிடர்களாலும் இன்னலுற்ற திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு, கல்வி, வாழ்வாதாரம் முதலியன கிடைக்க அயராது உழைத்தார் என்பதோடு தனது திருகோணமலை மண்ணின் மீது மட்டும் தனது பற்றுறுதியினை மட்டுப் படுத்திக் கொள்ளாமல், தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மொழி மீதும் மாறாத பற்று கொண்டதனால், கனடாவில் வாழும், இலங்கைத் தமிழரது பிள்ளைகள், தமிழர் என்ற அடையாளத்தைத் தொலைக்காமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை இலக்காக்கி, அரச மற்றும் அரசுசாரா நிறுவனங்கள் வழியாகத் தமிழ் கல்வியை ஊக்குவித்தார் என்பதோடு, கனடாவில் தமிழ்க் கற்பிப்பதற்குப் பாடநூல் இன்மை பெரும் சிக்கலாக இருந்ததை உணர்ந்த குகதாசன் அவர்கள், இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டாக கனடியக் கல்வி முறைக்கு அமையப் பாட நூல்களையும் பயிற்சி நூல்களையும் எழுதிக் கொடுத்து, கனடாவில் உள்ள தமிழ் பயிற்றுவிக்கும் நிறுவனங்களில் ஆசிரியர் அறிவுரையாளர், விரிவுரையாளர், மற்றும் துறைத் தலைவர் ஆகிய பதவிகளில் பணிபுரிந்து கனேடிய மண்ணில் தமிழ்க் கல்வியை தொடர்ந்தும் ஊக்குவித்தார்.

இதனைவிட குகதாசன் அவர்கள் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலிப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து, தமிழ்மொழி BA மற்றும் MA பட்டப் படிப்புகளைக் கனடாவில் நடத்தினார் என்பதனால், இதன் மூலமாக கனடாவில் தமிழ்மொழிப் பட்டதாரிகளும் தமிழ் ஆசிரியர்களும் கனேடிய மண்ணில் உருவாகுவதற்கு முதன்மைக் காரணமானார். இதற்கெல்லாம் மேலாய் கனேடியக் குடிவரவுத் துறையின் குடியமர்வு மற்றும் இசைவாக்கத் திட்டத்தில் வேலை வாய்ப்புப் பிரிவு இணைப்பாளராகப் பதினெட்டு ஆண்டுகள் பணிபுரிந்த குகதாசன் அவர்கள், இந்தக் காலத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் பல பாகங்களில் இருந்து கனடாவுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான புதிய குடிவரவாளருக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, குடியமர்வு உள்ளிட்ட புதுவாழ்வு கிடைக்கத் துணை புரிந்தார்.

மேலும் அவர் கனடாவில் வாழ்ந்த காலத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நிவாரணம், மறுவாழ்வு மற்றும் கல்விப் பணிகளுக்குப் பேருதவி புரிந்துள்ளார் என்பதோடு 2009 ஆம் ஆண்டு காலத்தின் பின்னரான 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளை வெளிநாட்டு தூதுவர்கள் வந்து சந்தித்து செல்ல ஏதுவாக கொழும்பில் தமிழரசு கட்சி அலுவலகத்தை வாடகை வீடொன்றினை எடுத்து பூர்த்தி செய்தார்.

இந்த காலத்தின் பின்னர் கனடா நாட்டுக்கு வருகை தந்த இலங்கை தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் அவர்களது வேண்டுகோளினால் குறிப்பாக, தனக்கு பின்னர் திருகோணமலைக்கு நல்ல தலைமைத்துவம் தேவை என்ற ஐயா சம்பந்தனது வற்புறுத்தலினால் குகதாசன் அவர்கள் தனது கனேடிய உரிமைகளை துறந்து, 2018 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் நிரந்தரமாக இலங்கை திரும்பினார். இவ்வாறு இலங்கை திரும்பிய குகதாசன் அவர்கள் எங்கள் திருகோணமலை மண்ணில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஈட்டவில்லை என்றாலும் இலங்கையின் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் நல்லிணக்க அரசாங்க காலத்தில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் கட்டுப்பாட்டில் இயங்கிய கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி இணைப்பாளராகவும் பணிபுரிந்தார்.

இக்காலத்தில் குகதாசன் அவர்கள் சம்பந்தன் அவர்களது ஆதரவோடு, 2019 ஆம் ஆண்டில் மட்டும் 2217 மில்லியன் ரூபா செலவில் வீடமைப்பு, குளங்கள் திருத்துதல், வீதியமைப்பு, பாடசாலைக் கட்டடங்களை நிறுவுதல் கோவில் திருத்தங்கள், நீர் வழங்கல், மருத்துவமனை மறுசீரமைப்பு, கடற்தொழில் கட்டடங்கள் அமைத்தல், பெண்களுக்கான கைத்தொழில் முயற்சிகளை உருவாக்குதல், இளையோர் தொழில் பயிற்சி, சமூக சேவைக் கட்டடங்கள் அமைத்தல் போன்ற முக்கிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள அயராது உழைத்தார்.

இதனை விட கட்டுக்குளம், குமாரபுரம், ஆகிய இடங்களில் நெசவு சாலைகளை திறக்க வழிவகை செய்தார் என்பதோடு, நூறு தமிழ் இளையோருக்கு பார ஊர்திகள் இயக்குநர் வேலைவாய்ப்பை பெறக்கூடிய பயிற்சிகளை அளித்துள்ளார் என்பது எதிர்கால எம் மண்ணின் வளர்ச்சிக்கு அவர் எடுத்திருக்கும் சிரத்தையை காட்டுகின்றது.

இதனை விட 2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2017 ஆம் ஆண்டின் இறுதி வரை தமிழரசு கட்சியின் கனடாக் கிளைச் செயலாளர், தலைவர் ஆகிய பொறுப்புகளிலும் பணியாற்றி, இந்தக் காலப் பகுதியில் தமிழரசு கட்சியின் செயற்பாடுகளுக்கு அதிக நிதியுதவி கிடைக்கவும் முன்னின்று உழைத்தார் என்பதோடு, 2018 ஆம் ஆண்டு 360 உறுப்பினரோடு இருந்த தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை உறுப்பினர்களின் தொகையை 5000 ஆக உயர்த்தி 60 வட்டார கிளைகள் 6 கோட்டக் கிளைகள் ஒரு மாவட்ட கிளை என்ற அடிப்படையில் பிரமிட் வடிவில் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியை கட்டமைத்துள்ளார் என்பதோடு தமிழரசு கட்சிக்குத் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு மாவட்ட பணிமனை இல்லை என்ற குறையை போக்கி, பணிமனை ஒன்றை திருகோணமலை நகரில் திறந்து 2018 தை மாத முதல் நடத்தி வருகின்றார்.வயோதிபம் காரணமாக திருக்கோணமலை மண்ணின் தமிழ் மக்களின் பிரதிநிதி சம்பந்தன் திருகோணமலைக்கு வராத சூழலில், குகதாசன் ஐயா அவர்கள் புத்த பிக்குகள், வனத்துறை, வன விலங்குத் துறை, தொல்பொருள் துறை, எல்லை நிர்ணயக் குழு, துறைமுக அதிகாரசபை, ஆக்கிரமிப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலப்பறிப்புக்கு எதிராக இலைமறைகாயாக இருந்து தன்னால் முடிந்ததைச் செய்து வருகின்றார் என்பதே யதார்த்தமாகும்.