ஆளுமை:காலித், எம். சி. எம்
பெயர் | முகம்மது காலித் |
தந்தை | முகம்மது காஸீம் |
தாய் | கவ்வாவும்மா |
பிறப்பு | 1968.02.09 |
ஊர் | சம்மாந்துறை, அம்பாறை |
வகை | எழுத்தாளர், வைத்தியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது காலித் அவர்கள் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் 1968.02.09 அன்று முகம்மது இஸ்மாயில் போடி முகம்மது காஸீம் மற்றும் கவ்வாவும்மா என்ற தம்பதிகளுக்கு 5ஆவது மகனாகப் பிறந்தார். இவர் ஒரு ஆளுமை மிக்க எழுத்தாளரும், வைத்தியரும் ஆவார்.
காலித் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை மகளிர் கல்லூரியிலும் இரண்டாம் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றார். ஆரம்பத்தில் பழைய ஆவணங்களை சேகரிக்கும் பழக்கம் அவரது தந்தை வழியாக இவருக்கு வந்தது. பாடசாலைக் காலங்களில் இவருடைய கலை இலக்கியப் பயணங்கள் ஆரம்பித்தன. அத்தோடு சித்திரம் வரைதல் கைப்பணி ஆக்கங்கள் செய்தல் போன்ற திறமைகளையும் வளர்த்துக் கொண்டார். அக்காலத்தில் இவர் சித்திரம் வரைதல், சிறுகதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், சிற்பங்கள் செய்தல், சாரணியம், விளையாட்டு, முதலுதவி, பொலிஸ் கடேட் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளமையை அறிய முடிகின்றது.
இவர் இளைஞர் சேவை மன்றத்தில் அங்கத்தவராக சேர்ந்த பிற்பாடுதான் இந்த கலை உலகில் தடம் பதிக்க முடிந்தது. 1981, 1986, 1987, 1988 காலப்பகுதிகளில் இலக்கிய உலகில் கால்பதித்த வேளை இவரின் அநாதை ஆனந்தன் எனும் நாடகம் முதலாமிடம் பெற்றது. 1980 ஆம் ஆண்டு அப்பாவிகள் எனும் நாடகமும், 1981ஆம் ஆண்டு சிலைகள் எனும் நாடகமும், 1983ஆம் ஆண்டு இரு பொம்மைகளின் விளையாட்டு நாடகமும், 1984 இல் தண்டனை, அனுபவிக்கிறான் ஆனந்தன் எனும் நாடகங்களும், 1986 இல் அந்தஸ்து எனும் நாடகமும், 1991 இல் எப்போது நீதி, சார்லி சாப்ளின் எனும் நாடகங்களும் இதுவரையில் இவர் நடித்துள்ளார்.
இவருக்கு 1990 ஆம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சித்திர பாடத்திற்கான பயிற்சி ஆசிரியராக நியமனம் கிடைத்தது. அதன் பின் சந்திப்பு, நீதி எப்போது, சர்வதிகாரம் எனும் நாடகமும் நடித்தார். 1990 இல் உலக ஆசிரியர் தினத்தில் எழுதிய சிறுகதையானது சம்மாந்துறை வலயத்தில் முதலிடம் பிடித்தது. 1995 ஆம் ஆண்டு பாடசாலையில் நடந்த கண்காட்சியில் இவரது ஆக்கத்திறன் வெளிப்பட்டது. 15 அடி உயரமும் 25 அடி நீளமுடைய டைனோசர் உருவாக்கியமை, மின்சாரத்தில் இயங்கும் உலங்கு விமானம், யுத்த பீரங்கி உருவாக்கியமை போன்றன அன்றைய காலத்தில் மிகவும் பேசு பொருளாக விளங்கி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று பத்திரிகைகளில் வெளிவந்தமை சிறப்பான தொன்றாகும்.
இவர் அதன் பின்னர் யுனானி மருத்துவத்திற்கு விண்ணப்பித்து அதில் இணைந்து பல்கலைக்கழகத்தில் கற்று முடித்தார். இதுவரை சுமார் 450 கவிதைகள் எழுதியுள்ளார். இதில் அந்தாதிக் கவிதைகளும் அடங்கும். இந்த கவிதை தொகுப்புக்கள் வெளிவரவுள்ளன. மாற்று மருத்துவம், இவரது உணவுகள் எவை? போன்ற மருத்துவ தொகுப்புக்களும் உழைப்பால் உயர்ந்த மாமனிதர் கோசுப்போடியார் அவர்களும் அவரது வழித்தோன்றல்களும் எனும் குடும்ப வரலாற்று ஆய்வு நூலையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். அத்துடன் சம்மாந்துறை இலக்கியவாதிகள் இணைந்து மாதமொருமுறை நடாத்தும் குயிலோசை எனும் நிகழ்வில் இவரது கவிதைகள் அவ்வப்போது இடம்பெறுகிறது.
2018 ஆம் ஆண்டு சம்மாந்துறை பிரதேச சபையுடன் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இணைந்து வழங்கிய “கலைஞர் சுவதம்” விருது, லக்சோ மீடியா வினால் “சமூகதீபம்” விருது, 2019 இல் தமிழா ஊடக வலையமைப்பால் “இலக்கிய முரசு” விருது, 2021 இல் கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் இந்தியாவில் இருந்து “கவித்தென்றல்” விருது போன்ற பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. அத்துடன் 2022 இல் திறனொளி கலாச்சார ஊடகத்தினால் “கலைஒளி” விருது, 2023 இல் சுகாதார அமைச்சும் ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து வழங்கிய “வெததுறு அபிமாண ஜனாதிபதி வைத்தியசூரி” தேசிய விருது போன்றவற்றினையும் இதுவரையில் பெற்றுள்ளார்.