ஆளுமை:இஸ்மாயில் மௌலானா, எஸ். ஏ. எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எஸ். ஏ. எஸ். இஸ்மாயில் மௌலானா
பிறப்பு 1933.05.01
இறப்பு 1999
ஊர் கிண்ணியா
வகை ஆன்மீக துறை சார் ஆளுமை
புனை பெயர் ஆலிம் சேர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆன்மீக ரீதியான வழிகாட்டலை சமூகத்துக்கு வழங்கிய வகையில் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்பவர் எஸ். ஏ. எஸ். இஸ்மாயில் மௌலானா அவர்களாவர். இவர் 1933.05.01 ஆம் திகதி பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்ற இவர், மார்க்கக் கல்வி கற்பதற்காக மகரகம கபூரியா அறபுக் கல்லூரியில் சேர்ந்தார். 1952 இல் மௌலவிப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து கிண்ணியா சஹ்தியா அறபுக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

1958 இல் இவருக்கு அறபு ஆசிரியர் நியமனம் கிடைத்தது. 1973, 1974 காலப் பகுதியில் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி நெறியை நிறைவு செய்தார். மகரு கிராமம் அலிகார் மகா வித்தியாலயம், பூவரசந்தீவு அல்மினா மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி போன்ற பாடசாலைகளில் அறபு ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

கிண்ணியா றஹ்மானியா அறபுக் கல்லூரி, சுமையா மகளிர் அறபுக் கல்லூரி ஆகியவற்றில் அதிபராகப் பணியாற்றியுள்ளார். கிண்ணியா ஜெம்இய்யத்துல் உலமாசபையின் ஆயுட்காலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.

ஆன்மீக வழிகாட்டலுக்கு ஜெம்இய்யத்துல் உலமாசபை இருப்பதைப் போல சமூக வழிகாட்டலுக்கு துறைசார்ந்தோரைக் கொண்ட ஒரு அமைப்புத் தேவை என்பதை உணர்ந்தார். இதனை நிவர்த்திக்கும் அமைப்பாக கிண்ணியா மஜ்லிஸ் அஸ் சூரா இவரது எண்ணத்தில் உருவானது. இதற்காக பல சுற்றுக் கலந்துரையாடல்களை துறைசார்ந்தோருடன் நடத்தியுள்ளார்.

இவர் உலமாசபைத் தலைவராக இருந்த காலத்தில் உலமாக்கள் அனைவரும் ஒரே அமைப்பின் கீழ் இருக்கும் வகையில் அந்தச் சபையை வழிநடத்தினார். இனப்பிரச்சினை காலத்தில் உலமா சபையின் பங்கு மிகப் பிரதானமானதாக இருந்தது. சமூகத்திற்கு நல்ல வழிகாட்டலை வழங்கி இன ஐக்கியத்தைப் பேணுவதில் அளப்பெரும் பங்காற்றினார்.

மிகவும் மென்மையான போக்குள்ள இவர் சமூக, சமயப் பிரச்சினைகளை மிக நிதானமாக அணுகி தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தார். மகருகிராமம் பகுதியில் குடியிருந்தாலும் சைக்கிளில் அங்கிருந்து கிண்ணியாவுக்கு தினமும் வருகை தந்து தனது சமூகப் பணிகளை முன்னெடுத்தார்.

ஸவ்ரியத்தும்மா இவரது வாழ்க்கைத் துணைவி ஆவார். ஆபிதா, ஸாதிக்கீன், ஹபீபா, வஜீஹா, முனீரா, இமாம்பீவி, தஸ்னீம் ஆகியோர் இவரது பிள்ளைகள்.

1999ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவர் மறைந்து பல ஆண்டுகள் சென்றாலும் இவரது அரும்பணியினால் மக்கள் மனங்களில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.