ஆளுமை:இராஜரஞ்சன், இராஜரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜரத்தினம் இராஜரஞ்சன்
தந்தை இரத்தினம்
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1955.11.24
ஊர் திருக்கோணமலை
வகை முன்னால் திருக்கோணமலை மாவட்ட சாரண ஆணையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருக்கோணமலை மாவட்ட சாரணியத்துக்கு அளப்பெரும் சேவையாற்றிய ஒரு மாவட்ட ஆணையாளர் ஆவார். இவர் 1955 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாவை கொல்லங்கலட்டி எனும் இடத்தில் இரத்தினம் மற்றும் பரமேஸ்வரி தம்பதியினருக்கு புதல்வராக பிறந்தார்.

தனது ஆரம்பக் கல்வியை இவரது பாட்டனார் ஆறுமுகம் வேலுப்பிள்ளை அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட யாழ் கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலையில் கற்றதுடன், தனது உயர்கல்வியை யாழ்ப்பாணம் மகாஜனக் கல்லூரியில் கற்றார்.

பத்தாம் தேதி இரண்டாம் மாதம் 1968 ஆம் ஆண்டு சாரண இயக்கத்தில் இணைந்து, 1973 ஆம் ஆண்டு யாழ் மகாஜனக் கல்லூரியில் ஜனாதிபதி விருதை பெற்றார். 1974 ஆம் ஆண்டு தனது சாரண ஆசிரியர் அவத்தை ஒன்று பயிற்சி நெறியை பூர்த்தி செய்து, யாழ் கொல்லங்கலட்டி சைவ வித்தியாசாலையில் முதன்முதலாக சாரண குழுவை ஆரம்பித்தார்.

1977 ஆம் ஆண்டு சிறைச்சாலை உத்தியோகத்தராக தனது பணியினை ஆரம்பித்தார். 1980 ஆம் ஆண்டு சாரணத் தலைவர் அவத்தை இரண்டு பயிற்சி நெறியை பூர்த்தி செய்து தனது சாரண ஆசிரியர் பணியை தொடர்ந்து வந்தார். 1988 ஆம் ஆண்டு காங்கேசன்துறை உதவி மாவட்ட ஆணையாளராக பதவியை பொறுப்பு எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

1991 ஆம் ஆண்டு தனது பணி நிமிர்த்தம் திருக்கோணமலை சிறைச்சாலைக்கு இடமாற்றம் பெற்று வந்து, திருக்கோணமலை மாவட்டத்திலும் தனது சாரணர் பணியை ஆரம்பித்தார். திருக்கோணமலை இ கி ச ஸ்ரீ கோனேஸ்வரா இந்துக்கல்லூரியில் தனது சாரணியப் பணியை தொடர்ந்தார்.

குறுங் காலத்திலேயே திருக்கோணமலை மாவட்ட சாரண அலுவலராக நியமிக்கப்பட்டார். ஏழாம் திகதி ஒன்பதாம் மாதம் 1994 ஆம் ஆண்டு உதவி மாவட்ட ஆணையாளராக திருக்கோணமலை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டார்.

பின்னர் திருக்கோணமலை மாவட்ட ஆணையாளராக திருக்கோணமலை மாவட்டத்தில் பல பாடசாலைகளில் சாரணியம் மீள உருவாக்கப்படுவதற்கும், சாரணிய செயற்பாடு உயர்வதற்கும் தன்னால் இயன்ற அரும் பெரும் பணிகளை ஆற்றினார்.

இவர் பல சாரணிய உயரிய விருதுகளை சாரணர்களும், சாரண தலைவர்களும் பெற காரணமானவர் இவர் ஆவார். திருகோணமலையின் முதலாவது திறந்த சாரணர் குழு (காந்தி சேவா சங்கம்), திருகோணமலை மாவட்ட திரிசாரணர் குழு (District Rovers) போன்றவற்றை ஆரம்பித்தவர். மிகச் சிறந்த ஒரு பயிற்சியாளார், அதிலும் சாரணீயத்தின் உயிர் நாடியான கயிற்றுக்கலை, துடி நிலை, சமையற் கலை, திட்டமிடல் ஆகியவற்றில் ஆகச் சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

இளம் சாரணர் தலைவர்களை இனம் கண்டு "மாவட்ட பயிற்சி அணி" ஒன்றினை உருவாக்கியவர். ஒவ்வொரு மாதமும் "மாதாந்த‌ மாவட்ட சாரணர் பரிசோதனை நாள்" அறிமுகம் செய்தார். சாரணர் தலைவர் குழு, உதவி மாவட்ட ஆணையாளார்கள் குழு, மாவட்ட ஆலோசனைக் குழு போன்றவற்றை உருவாக்கி நடாத்திக் காட்டியவர். இவர் உதவி மற்றும் மாட்ட ஆணையாளராக திருகோணமலையில் சேவை புரிந்த காலம் திருகோணமலை சாரணீயத்தின் ஒரு பொற்காலம்.