ஆளுமை:இரத்தினவேலோன், ஆ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினவேலோன்
தந்தை ஆறுமுகம்
தாய் பாறுபதி
பிறப்பு 1958.12.25
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புலோலியூர் இரத்தினவேலோன், ஆறுமுகம் 1958.12.25 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம், புலோலியூரில் பிறந்தார். சிறுகதை எழுத்தாளர். இவர் புற்றளை மகாவித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். இவர் யாழ் புற்றளை மகா வித்தியாலயம், யாழ் ஹாட்லிக் கல்லூரி மற்றும் யாழ் சென் ஜோன்ஸ் அக்கடமி ஆகியவற்றின் பழைய மாணவராவார். தினகரன் பத்திரிகையில் பிரசுரமான புரளும் அத்தியாயம் எனும் சிறுகதையூடு 1977 இல் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர். 1977 ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துறையில் ஈடுபட்டவரும் ஆவர். இவர் இற்றைவரை ஏழு சிறுகதை நூல்களையும் ஐந்து கட்டுரைத் தொகுதிகளையும் வெளிக் கொணர்ந்துள்ளார். இவர் கொழும்பு மீரா பதிப்பகத்தின் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். இதழ்களில் நூல் அறிமுகக் கட்டுரைகளைத் தொடர்ச்சியாக எழுதி வந்துள்ள இவரது சிறுகதைகளும் நூல் அறிமுகக் கட்டுரைகளும் தொகுப்புக்களாக வெளிவந்துள்ளன.

இவரது சிறுகதைகள் பல பரிசில்களை வென்றுள்ளன. 'நிலாக்காலம்', 'நெஞ்சாங்கூட்டு நினைவுகள்' ஆகிய தொகுதிகள் முறையே வடக்கு கிழக்கு மாகாண/ வட மாகாண இலக்கிய விருதினை வென்றுள்ளன. இருதடவைகள் யாழ் இலக்கிய வட்டத்தின் கனக செந்தி கதா விருதினையும், தகவம் நிறுவனத்தினரின் விருதினையும் இவர் பெற்றுள்ளார். 'ஒரு பக்கத்தாளம்' எனும் இவரது சிறுகதை மொழிபெயர்க்கப் பட்டு 'மெதபெரதிக' எனும் சிங்கள சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது. இவரது சிறுகதைகள் பற்றிய ஆய்வொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் சிறப்புக் கலைமாணவி எம்.திருமகள் செய்து முடித்து அது நூலுருவப்பெற்றுள்ளது. மல்லிகை இலக்கிய சஞ்சிகையின் அட்டைப்படக் கௌரவத்தினை 2007 ஜூலையில் பெற்றார். 'இலண்டன் பூபாளராகங்கள்' நடாத்திய சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவின் 2006 ஆம் ஆண்டு நிகழ்வில் பிரதம அதிதியாக இவர் அழைக்கப்பட்டிருந்தார்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை விளம்பரத்துறை மற்றும் கணக்கியல் துறைகளில் பணியாற்றி இறுதியாக தினக்குரல் பத்திரிகையில் 'ஊடக முகாமையாளராக' பணிநிலைகொண்டு 2018 ஜூன் 10 இல் ஓய்வு பெற்றார். இலக்கியத் துறைக்கான கலாபூஷணம் அரச விருது 2021 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

கொம்மந்தறை, கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஐக்கிய இராச்சியக்கிளை தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய பூபாளராகங்கள் சிறுகதைப் போட்டியில் ஐந்து ஆண்டுகள் இலங்கைக்கான இணைப்பாளராக இருந்ததோடு அவ்விழாவிற்கு சிறப்பு அதிதியாக 2006 ஆம் ஆண்டில் லண்டனுக்கு அழைக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டவர். அல்வாயூரைச் சேர்ந்த எம். திருமகள் எனும் யாழ் பல்கலைக்கழக மாணவி தமிழ்ச் சிறப்பு கலைமாணித் தேர்வின் நிறைவாண்டுப் பரீட்சை பின் பொருட்டு 2004 இல் இவரது சிறுகதைகளை ஆய்வு செய்து சமர்ப்பித்துச் சித்தி எய்தினார். பல அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் மற்றும் தனியார் அச்சு ஊடகங்கள் நடாத்தும் இலக்கியப் போட்டிகளின் மதிப்பீட்டுக்குழுவில் அங்கம் வகித்து வருகின்றார்.

ஈழத்தின் காத்திரமான இலக்கிய இதழ்களான மல்லிகை (ஜூலை 2007) ஞானம் (டிசம்பர் 2018), ஜீவநதி ( இருதடவைகள்; ஏப்ரல் 2013 & டிசம்பர் 2018) போன்றவற்றின் அட்டைப்பட அதிதி' கௌரவத்தினைப் பெற்றவர். ஞானம், சுடர் போன்ற சஞ்சிகைகள் நடாத்திய சிறுகதைப்போட்டிகளில் பரிசில்களை வென்றவர். ஞாயிறு தினக்குரலில் 'அண்மைக்கால அறுவடைகள்' எனும் மகுடத்தில் இவர் தொடர்ச்சியாக எழுதி வந்த பத்தி எழுத்துக்கள் மிகப் பிரசித்தமானவை.

புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், விடியலுக்கு முன், நெஞ்சாங்கூட்டு நினைவுகள், திக்கற்றவர்கள் போன்ற சிறுகதைகளையும் புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழத்துச் சிறுகதைகள், அண்மைக்கால அறுவடைகள், புலோலியூர் சொல்லும் கதைகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழத்துச் சிறுகதைகள் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.

கட்டுரைத் தொகுதிகள் • புதிய சகத்திரப் புலர்வின் முன் ஈழச் சிறுகதைகள் (1999) • அண்மைக்கால அறுவடைகள் தொடுதி 1.(2001) • அண்மைக் கால அறுவடைகள் தொகுதி 2.(2009) •புலவொலி. (2019)

தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுதி • இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஈழச்சிறுகதைகள் (2006) தொகுப்பாசிரியர்/ பகுப்பாசிரியராக • புலோலியூர் சொல்லும் கதைகள் (2002) கனகசெந்தி கதா விருது பெற்ற கதைகள் (2008) நூலாசிரியர் பற்றிய நூல் புலோலியூர் ஆ இரத்தின வேலோன் சிறுகதைகள் ஆய்வுநூல். ம.திருமகள், யாழ் பல்கலைக்கழகம் (2004) மீரா பதிப்பகத்தினூடு(பதிப்பாசிரியராக) வெளிக்கொணர்ந்த நூல்கள் • நூற்றி நான்கு (104) நூல்களை பீரா பதிப்பகத்தின் மூலம் இதுவரை பதிப்பித்துள்ளார்.



இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 319 பக்கங்கள் 15-28
  • நூலக எண்: 1778 பக்கங்கள் 08
  • நூலக எண்: 13509 பக்கங்கள் 20-23