ஆளுமை:அரசரெத்தினம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம் அரசரெத்தினம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1952.09.17
ஊர் கல்முனை, அம்பாறை
வகை எழுத்தாளர்
புனை பெயர் எஸ். அரசரெத்தினம்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சுப்பிரமணியம் அரசரெத்தினம் அவர்கள் (பி.1952.09.17) அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த ஒரு எழுத்தாளராவார். இவர் சுப்பிரமணியம் மற்றும் சின்னத்தங்கம் தம்பதியினருக்கு நான்காவது மகனாக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை பட்டிருப்பு மகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலும் அதன் பின்னர் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை தொடர்ந்த போது இலங்கை வங்கியில் பதவி கிடைத்தது. வேலை பார்த்துக்கொண்டே திறந்த பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கை நெறியில் டிப்ளோமா பட்டத்தையும் பெற்றார்.

முதலாவது வேலை நியமனம் இவருக்கு யாழ்ப்பாண இலங்கை வங்கியில் கிடைத்தது. அடுத்து மூன்று வருடங்களின் பின் கிளிநொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு அதன் பின்னர் 2 வருடங்களில் பதவி உயர்வு கிடைத்து வாழைச்சேனை கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின் களுவாஞ்சிக்குடிக்கு இடம்மாற்றம் கிடைத்தது.

இவர் 1983ம் ஆண்டு திருமணமாகி கல்முனையில் வாழ்ந்து வருகின்றார். மனைவியின் பெயர் கிருபை மலர் மற்றும் இவருக்கு இரண்டு புதல்விகள் இரண்டு புதல்வர்கள் உண்டு. இவரின் இலக்கியப் பிரவேசமானது 1967ம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்து கொண்டிருந்த சிந்தாமணி பத்திரிகையில் அத்தாணி மண்டபம் எனும் பகுதியில் முதன் முதலாக இவரின் களுவாஞ்சிக்குடி அரசு என்ற கட்டுரையின் மூலம் ஆரம்பமானது.

இவரின் இலக்கிய துறைக்கு ஊக்கமாக இருந்தது இவரின் மூத்த சகோதரர் ஆவார். அவர் இலக்கிய சஞ்சிகை, பத்திரிகை போன்ற சேகரித்து வாசிக்கும் பழக்கம் கொண்ட காரணத்தினால் அதனை இவரும் வாசித்து எழுத்து துறையில் ஆர்வம் கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சிந்தாமணி, தினபதி, தினகுரல், வீரகேசரி போன்ற பத்திரிகையில் கட்டுரைகள் சிறுகதைகள் எழுதி வந்தார். பெரும்பாலும் 25க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். அரசியல் சார்ந்த கட்டுரைகள் அதிகளவில் எழுதியுள்ளார்.

இவர் மொத்தமாக 6 நூல்களை வெளியிட்டுள்ளார். அவையாவன வளமான வாழ்வைத் தேடி, விழிகளால் கதைகள் பேசி, இலங்கை அரசியல் வரலாறும் பதின்மூன்றாவது பொதுத் தேர்தலும், இலங்கைப் பாராளுமன்ற அரசியலும், பன்னிரெண்டாவது பொதுத் தேர்தலும், சாம்பல் பறவைகள், கல்முனையில் தமிழர் போன்றவையாகும். இதில் இரண்டு அரசியல் சார்ந்த இரண்டு நூல்களும், ஒரு இட வரலாறு சார்ந்த நூலும், ஒரு குடும்ப ஆய்வு நூலும் அடங்குகின்றன.

அதில் சாம்பல் பறவை எனும் நூலானது 2009 இல் வன்னியில் நடைபெற்ற இறுதிச் சமர் பற்றிய ஒரு நாவலாகும். இது பெரும்பாலானோர் பாராட்டிய படைப்பாகும். அத்தோடு இவர் பல சமூக சேவைகளிலும் ஈடுபாடு கொண்டவராவார். களுவாஞ்சிக்குடியில் இருக்கும் போதும் இவர் பாடசாலை அபிவிருத்தி சங்கம், சைவமகா சங்கம், அறநெறிப் பாடசாலை, சனசமூக நிலையம் போன்றவற்றில் இணைந்து பல பொதுச் சேவைகள் புரிந்துள்ளார். கல்முனையில் ஆலய பொருளாளராகவும், அறநெறிபாடசாலை அதிபராகவும், கல்முனை வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத் தலைவராகவும், கார்மேல் பாத்திமா பாடசாலை, இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் அபிவிருத்திச் சங்கத்தில் இணைந்து மாணவர்களுக்கான பல வேலைத்திட்டங்களில் சேவை புரிந்துள்ளார்.

கல்முனை சைவ மகாசபையை நடாத்தி வருகிறார். இவருக்கு இலங்கை அரசினால் 2014ம் ஆண்டு கலாபூசணம் விருதும், 2017ம் ஆண்டு கலாச்சார மாகாண அமைச்சினால் வித்தகர் விருதும், சாம்பல் பறவைக்காக 2011ம் ஆண்டு கிழக்கு மாகாண சாகித்திய விருதும், பிரதேச செயலம், சைவமகா சபை, விளையாட்டு மற்றும் சமூக கழகங்கள் என்பவற்றிலிருந்தும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.