ஆளுமை:அப்துல் ஹாதி, எம்.எஸ்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மர்ஹூம் எம்.எஸ்.அப்துல் ஹாதி
தந்தை மர்ஹூம் முகம்மது சுல்தான்
தாய் அவ்வா உம்மா
பிறப்பு 1948.04.24
இறப்பு 2023.10.02
ஊர் கிண்ணியா
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அப்துல் ஹாதி அவர்கள் முன்னாள் பதிவாளர் ஆகிய மர்ஹூம் முகம்மது சுல்தான், அவ்வா உம்மா ஆகியோரின் மகனாக 1948.04.24 இல் பெரிய கிண்ணியாவில் பிறந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்திலும், உயர்தரம் வரை கிண்ணியா மத்திய கல்லூரியிலும் கற்றார். இதனைவிட கிண்ணியா புகாரி அறபுக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைக் கற்ற இவர் 1973 இல் மௌலவி பட்டம் பெற்றார். 1976 இல் அல் ஆலிம் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 1971 இல் ஆசிரியராக முதல் நியமனம் பெற்ற இவர் கிண்ணியா அல் அக்ஸா வித்தியாலயத்தில் தனது கல்விப்பணியை ஆரம்பித்தார். 1973/74 இல் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் கற்று பயிற்றப்பட்ட ஆசிரியரானார்.

முத்துநகர் முஸ்லிம் வித்தியாலயம், குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம், பண்டாரவளை சேர் ராசிக் பரீத் மகா வித்தியாலயம், பண்டாரவளை ஹீல்ஓயா அல் யாசீன் வித்தியாலயம், முள்ளிப்பொத்தானை புகாரிநகர் முஸ்லிம் வித்தியாலயம், பெரியாற்றுமுனை முஸ்லிம் வித்தியாலயம், கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயம், கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளிலும் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக கற்ற இவர் 1991 இல் கலைப் பட்டதாரியானார். 1998 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் இச்சேவைக்குத் தெரிவான முதல் உலமா என்ற அந்தஸ்தைப் பெற்றார். முழு அதிகாரத்துடன் இயங்கிய கிண்ணியா கோட்டக்கல்வி அலுவலகத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இதனைவிட மூதூர் மற்றும் கந்தளாய் வலயக் கல்வி அலுவலகம், வடக்கு கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றில் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

2002 இல் கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்று 2006 வரை அங்கு கடமையாற்றினார். 2006 இல் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்ற இவர் 2008 இல் ஓய்வுபெறும் வரை அப்பணியைச் செய்தார். இதற்கு மேலதிகமாக இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால் 1990இல் கிண்ணியா காதி நீதிபதியாக நியமனம் பெற்று 2001 வரை பணியாற்றியுள்ளார். அதேபோல 2008 முதல் 2011 வரை இரண்டாவது தடவையாகவும் காதி நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டு தனது பணியைச் செய்துள்ளார்.

சமூக, கலாசார பணிகளில் ஆர்வமுள்ள இவர் ஹஜ், உம்ரா யாத்திரிகர்களின் வழிகாட்டியாகவும் செயற்பட்டுள்ளார். தனது நிர்வாகத்தின் கீழ் பணிபுரிந்தோருடன் சுமுகமாகப் பழகிய இவர் நல்ல நிர்வாகியாகவும் திகழ்ந்தார். ஒவ்வொருவரது திறமையையும் இனங்கண்டு அவர்களிடமிருந்து தேவையான ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டார்.

நிஹ்மத்தும்மா இவரது வாழ்க்கைத்துணைவி ஆவார். முயிஸ்ஸூ (ஆசிரியர்), அப்துல் முஹீத், சுமையா (ஆசிரியை), சுல்பிகா (ஆசிரியை), சுஹாதா (ஆசிரியை), சுகைரா, சுஹதா, நுஸ்கியா ஆகியோர் இவரது பிள்ளைகள் ஆவர்.

2023.10.02ஆம் திகதி தனது 75 வது வயதில் இவர் காலமானார்.