ஆளுமை:அப்துல் அசன், ஐதுரூஸ்
பெயர் | அப்துல் ஹசன் |
தந்தை | ஐதுரூஸ் |
தாய் | - |
பிறப்பு | 1958.06.25 |
ஊர் | திருகோணமலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்துல் ஹசன், ஐதுரூஸ் (1958.06.25 - ) திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது தந்தை ஐதுரூஸ். இவர் கிண்ணியா அல் அக்ஷா கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.
'இரவு' எனும் கவிதை மூலம் இவர் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். 1972 இல் தினபதி கவிதா மண்டலம் பகுதியில் இக்கவிதை வெளியானது. அன்று முதல் கவிதை, சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், போன்ற பல்துறை இலக்கியங்கள் படைத்து வருகின்றார். ஹஸன்ஜீ, நவரசகவி, எழில்வாணன் என்பன இவரது புனைபெயர்கள் ஆகும்.
தினபதி, சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, மித்திரன், நேயம், குறுநகை போன்ற பத்திரிகைளிலும், சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிமஞ்சரி, பாவளம் ஆகிய நிகழ்ச்சிகளிலும் இவரது கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. இதுவரை 350 க்கும் மேற்பட்ட கவிதைகள் இவர் எழுதியுள்ளார்.
'நெஞ்சில் மலர்ந்த கவிதைகள்' புதுக்கவிதைத் தொகுப்பு இவரது முதல் வெளியீடாகும். இது 1989 இல் வெளியிடப்பட்டது. 'வைகறைப்பூக்கள்' என்பது இவரது மரபுக் கவிதைத் தொகுப்பு. இது 1992 இல் வெளியிடப்பட்டது.
அதேபோல அண்மைக்காலத்தில் 'மழைக்குள் வெள்ளம்' என்ற கவிதைத் தொகுதியையும், சிறுவர் பாடல்கள் தொகுப்பும் வெளியிட்டுள்ளார். இதுவரை 50க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். 'கனவிலும் அழியாச்சின்னம்' என்பது இவரது சிறுகதைத் தொகுப்பு. 2013 இல் இது வெளியிடப்பட்டது. பத்திரிகைகளில் வெளிவந்த 15 சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும்.
'சீதனம் வேண்டுமா?, எல்லாம் நமக்காக, வாங்க மாப்பிள்ளை வாங்க, நீதியின் இரு பக்கங்கள், இம்மையும், மறுமையும்' போன்ற நாடகங்கள் இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளன. பல மீலாத் விழாக்களில் இவரது நாடகங்கள் அரங்கேறியுள்ளன. கிண்ணியாவில் முதன் முதல் வெளியான 'இரு பயணங்கள்' என்ற குறுந்திரைப்படத்தின் கதை வசனம் எழுதி நெறிப்படுத்தியுள்ளார். இக்குறுந்திரைப்படம் 1992இல் வெளியானது.
மறைந்து வரும் நாட்டார் இலக்கியங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகின்றார். நாட்டார் பாடல்கள் தொடர்பான இவரது சில ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. இவரது நாடகப் பங்களிப்புக்காக 2008 கிண்ணியா பிரதேச சாகித்திய விழாவில் 'அரங்கத்தாரகை' பட்டமும், விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
காயல் பட்டணத்தில் இடம் பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். இதற்காக 2011 இல் கொழும்பில் மக்கீன் பவுண்டேசன் நிறுவனத்தினால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். கலாசார அலுவல்கள் திணைக்களம் இவருக்கு 'கலாபூசணம்' விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. அதேபோல கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 'வித்தகர் விருது' வழங்கி கௌரவித்துள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 142-144