ஆளுமை:அன்பு முகைதீன், மு. இ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகம்மது இபுறாஹீம் அன்பு முகையதீன்
தந்தை முகம்மது இபுறாஹீம்
தாய் -
பிறப்பு 1940.03.20
இறப்பு 2003.09.16
ஊர் அம்பாறை, கல்முனைக்குடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலாபூஷணம் மு. இ. அன்பு முகையதீன்(பி.1940.03.20 - 2003.09.16) கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடி கிராமத்தைச் சேர்ந்த முகம்மது இபுறாஹீம் அன்பு முகையதீன் அவர்கள்; அன்பு முகையதீன், அன்பகத்தான் ஆகிய பெயர்களில் கவிதைகள் ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை இலங்கையில் வெளிவரும் தினசரிகள், வாரமலர்கள், சஞ்சிகைகள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் இந்தியாவிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் எழுதியிருக்கின்றார்.

அன்பு முகையதீன் அவர்கள் தனது ஆரம்பக்கல்வியினை கல்முனை சாஹிராக்கல்லூரியில் பெற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர், நாடறிந்த கவிஞனாகத் திகழ்ந்தவர் 'கடமையின் கண்' எனும் தலைப்பில் இவரது முதலாவது ஆக்கம் 1950ஆம் ஆண்டு தினகரன் பத்திரிகையில் பிரசுரமாகியது. அதிலிருந்து 2003 ஆண்டு வரை ஆயிரத்துக்கு மேற்பட்ட கவிதைகளையும், சுமார் 190 கட்டுரைகளையும், இரண்டு சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

சமய, சமூகத்தாக்கமுள்ள கவிதைகளை எழுதி வந்த இவர் அண்ணல் நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை கவிதையாக்கியுள்ளமை தமிழுக்குச் செய்துள்ள உயரிய பங்களிப்பாகும். பேச்சிலும், எழுத்திலும் செந்தமிழ் கமழும் இவரால் ஒன்பது கவிதை நூல்கள் எழுதி வெளியிடப்பட்டுள்ளன. அவை நபிகள் வாழ்வில் நடந்த கதைகள் (1976), அண்ணல் நபி பிறந்தார் (1979), மாதருக்கு வாழ்வளித்த மகான் (1980), மாதுளம் முத்துக்கள் (1984), புதுப்புனல் (1988), எழுவான் கதிர்கள் (1988), அரசியல் வானில் அழகிய முழுநிலா (1997), உத்தம நபி வாழ்வில் (2000), வட்டமுகம் வடிவான கருவிழிகள் (2001) போன்றனவாகும்.

தேசிய ரீதியில் நடைபெற்ற பல கவிதைப்போட்டிகளிலும், பேச்சுப் போட்டிகளிலும் பரிசில்களை வென்றெடுத்துள்ளர். இவர் 1960களில் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் உரை, கவிதைப்பொழிவு, கவியரங்குகள் செய்துள்ளார். நாட்டார் கவிநயம், கவிநயம், மகரந்தம் என்ற மகுடங்களில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் ரூபவாஹினியிலும் "உதயம்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவரின் இலக்கியச் சேவையை கெளரவித்து இலங்கை அரசு 2002 ஆம் ஆண்டில் கலைஞர்களுக்குரிய அதி உயர் விருதான 'கலாபூஷணம்' விருது வழங்கி கெளரவித்தது. அத்துடன் 1987ம் ஆண்டு பிரதேச அபிவிருத்தி அமைச்சினால் "கவிச்சுடர்" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. 1993ம் ஆண்டு முஸ்லிம் கலாசார அமைச்சினால் "நஜ்மஷஸுஹாறா" விருது வழங்கப்பட்டது. 2000ம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு "ஆளுனர் விருது" வழங்கி கெளரவித்துள்ளது.

இவருடைய "மாதுளம் முத்துக்கள்" கவிதை நுால் 1984ம் ஆண்டு வரை இலங்கையில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களில் ஒன்றாக இலங்கை இலக்கியப் பேரவையின் சான்றிதழ் பெற்றது. இதே கவிதை நூலை முஸ்லிம் எழுத்தாளர் தேசிய கவுன்சில் சிறந்த கவிதை நுாலாகத் தேர்ந்தெடுத்து பொற்கிழி வழங்கியது. "நபிகள் வாழ்வில் நடந்த கதைகள்" என்ற நூலில் உள்ள ஒரு கவிதை "மகிழ்ந்தான் பையன்" என்ற தலைப்பில் தரம் - 5 தமிழ்ப்பாட நூலில் இடம் பெற்றுள்ளது.

இவருடைய இலக்கியச் சேவையைப் பாராட்டி பல அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி கெளரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருடைய மணிவிழா 30.06.2000 அன்று கல்முனையில் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பிரதம அதிதியாக, மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் கலந்து கவிச்சுடருக்கு தங்கப் பதக்கம் சூட்டி கெளரவித்தார். இம்மணி விழாவில் ஒரு காத்திரமான மணிவிழா மலரும் வெளியிடப்பட்டது.

அன்பு முகையதீன் அவர்கள் 2003.09.16ம் திகதி இறையடி எய்தினார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 42-44
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 13-15