ஆளுமை:அகல்யா ராஜேந்திரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகல்யா
தந்தை ராஜேந்திரன்
தாய் புஷ்பவதி
பிறப்பு 1985.06.17
ஊர் பசறை
வகை விளையாட்டுத்துறை ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
அகல்யாராஜேந்திரன்.jpg

அகல்யா ராஜேந்திரன் (1985.06.17 ) பதுளை மாவட்டத்தில் பசறை பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டுத்துறை ஆளுமை. இவரது தந்தை மாரிமுத்து ராஜேந்திரன்; தாய் புஷ்பவதி. தனது ஆரம்ப கல்வியை பசறை தமிழ் தேசிய பாடசாலையில் கற்றதோடு, இடைநிலை கல்வியை பதுளை - ஹாலிஎல விஞ்ஞான கல்லூரியிலும் கற்றுள்ளார். பின்னர் கல்வி பொது தராதர உயர்தர கல்வியை பசறை தமிழ் தேசிய கல்லூரியில் வர்த்தக பிரிவில் கற்றார். வலைப்பந்து, கரப்பந்து, பூப்பந்து, கபடி, மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்துகொண்டு தனது திறைமையை வெளிக்காட்டியுள்ளார்.

பாடசாலை காலத்தில் வலைப்பந்து, கபடி போட்டிகளில் பங்குபற்றி வலய, மாகாண மட்டம் வரை தனது பாடசாலை அணியின் வெற்றிகளுக்கு உந்துசக்தியாக விளங்கியுள்ளார். இதனை தொடர்ந்து (2006 - 2008) பண்டாரவளை தேசிய கல்வியியற் கல்லூரிக்கு உடற்கல்வி பிரிவிற்கு தெரிவாகி தனது உடற்கல்வி பாடநெறி டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்துள்ளார். கல்லூரி காலத்தில் பூப்பந்து மற்றும் டென்னிஸ் மேசைப்பந்து போட்டிகளில் தனது திறமையை நிருபித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கல்வியியற் கல்லூரியில் பயிற்சியை நிறைவு செய்த செல்வி. ஆசிரியை மாரிமுத்து ராஜேந்திரன் அகல்யா தான் கல்வி கற்ற பாடசாலையாகிய பசறை தமிழ் தேசிய கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக நியமனம் பெற்று இன்றுவரை பணியாற்றி வருகின்றார். 2021ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி தொடரில் பூப்பந்து போட்டி தொழில்நுட்ப அலுவலராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார் பசறை தமிழ் தேசிய பாடசாலை விளையாட்டுதுறை ஆசிரியர் செல்வி. அகல்யா. இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் இருந்து பூப்பந்து (பெட்மின்டன்) போட்டிக்கு அலுவலராக செல்லும் முதலாவது நபராகவும் பெண்மணியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு உலகளவில் தமிழர் சார்பில் முதல் பெண் நபராகவும் இவர் மாத்திரமே இவ்வாய்ப்பை பெற்றுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்க அம்சமாகும்.

பாடசாலையில் சக விளையாட்டு துறை ஆசிரியர்களோடு சேர்ந்து மாணவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளித்து வருவதோடு, இவரின் ஆதரவோடு பல்வேறு போட்டிகளில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் விளையாட்டு துறையில் வலய, மாகாண, தேசிய மட்டங்களில் சாதனை படைத்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இலங்கை பெட்மின்டன் சங்கம் நடாத்திய தேசிய ரீதியிலான போட்டி பரீட்சையில் தோற்றி அகில இலங்கை ரீதியில் செல்வி ராஜேந்திரன் அகல்யா இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளதோடு, 2016 ஆம் ஆண்டு ஆசிய பெட்மின்டன் நடுவர் தெரிவு போட்டி பரீட்சையில் தோற்றி மூன்றாம் இடத்தையும் பெற்று பெட்மிமின்டன் போட்டி நடுவராக தகைமைப் பெற்றுள்ளார். பாடசாலை மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்ட போட்டிகளுக்கு நடுவராகவும் பணியாற்றிய அனுபவமும் இவரது நேர்த்தியான பணியின் மூலம் சர்வதேச மட்ட போட்டிகளுக்கும் நடுவராக கடமையாற்றும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. 2017 ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பெட்மின்டன் போட்டி, 2018 ஆம் ஆண்டு மலேசியா ஆசியா பெட்மின்டன் குழு போட்டி, 2018 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா பொதுநலவாய விளையாட்டு போட்டி, 2019 ஆம் ஆண்டு சீனா ௭ச்.எஸ்.பி.சி உலகதர சுற்று போட்டி ஆகியவற்றில் நடுவராக பணியாற்றியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தும் பொருளாதார பிரச்சினை காரணமாக இப்போட்டித்தொடரில் கலந்துகொள்ள இவரால் முடியவில்லை. தொடர்ந்து ஒலிம்பிக் போட்டிகளில் பெட்மின்டன் போட்டித்தொடரின் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றுவதற்கான அழைப்பு சர்வதேச ஒலிம்பிக் சம்மேளத்தினால் இவருக்கு விடுக்கப்பட்டது.

இருப்பினும் 2020 ஆம் ஆண்டு ஜப்பானில் இடம்பெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் உலகளாவிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வருடம் நடாத்தப்படாமல் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இவ்வாண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் நடுவர் குழாமின் தொழில்நுட்ப அலுவலராக பணியாற்றுவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவரது தனது விளையாட்டு திறனை இனங்கண்டு ஊக்குவித்த ஆசிரியர் பி.யூ.சி. பிரியதர்ஷன், திருமதி. திலினா குணவர்த்தன ஆகியோரே தனக்கு சிறந்து வழிகாட்டிகளாக திகழந்தனர் என பெருமையோடு குறிப்பிட்டார்.


வெளி இணைப்புக்கள்