நிறுவனம்:பன்குளம் நான்காம் கண்டம் அருள்மிகு ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பன்குளம் நான்காம் கண்டம் அருள்மிகு ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பன்குளம்
முகவரி பன்குளம் நான்காம் கண்டம் அருள்மிகு ஶ்ரீ நாகதம்பிரான் ஆலயம், பன்குளம், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலை பன்குளம் நான்காம் கண்டம் பகுதியில் புராதன காலத்தில் இந்தப்பகுதியில் குடியிருந்த ஒரு அடியவர், புளியம்பொக்கனை நாகதம்பபிரான் ஆலயத்தின் மீது தீராத பக்தி உடையவர். தைப்பூசதினத்தில் அந்த புளியம்பொக்கனை தம்பிரான் ஆலயத்தில் பொங்கல் விழா இடம்பெறுவது வழமை. அங்கு அந்த அடியவர் செல்ல விரும்புவது வழமை. ஒரு தடவை வயல் வேலை காரணமாகவும், ஆசூசம் காரணமாகவும் செல்ல முடியவில்லை. இதனால் கவலை அடைந்த அடியவர், கவலையோடு இரவு நித்திரைக்கு சென்றார். அவருக்கு இரவில் தம்பிரான் கனவிலே தோன்றி, நான் நாளை வெளியிலே அலரி மரத்தில் உனக்கு காட்சியளிப்பேன். என்னை நீ கும்பிடலாம் என சொல்லி மறைந்தார். அடியவர் எழுந்து காலை, அலரி மரத்தைப் பார்த்த போது அங்கு வெள்ளைநிற தம்பிரான் (பாம்பு) காட்சியளித்தது.

அதனைக்கொண்டு அந்த இடத்திலே ஒரு சிறிய ஆலயத்தினை அமைத்து வழிபடலாயினர். இந்த ஆலயம் 1950 ஆண்டளவில் தற்காலிக கொட்டிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவ்வூர் மக்களால் வழிபடப்பட்டு வந்தது. பின்பு சீமெந்தால் சிறிய கட்டமாக கட்டப்பட்டு, அதனோடு இணைந்து ஒரு பாலர் பாடசாலையும் ஆக அமைக்கப்பட்டு, கிராமிய பூசை மரபுகளோடு, விழாக்கள், பண்டிகைகளும் கொண்டாப்பட்டு வந்தது. அடியார் அவர்களின் வம்சம், மணியகார குடும்பத்தினராக இருந்து, ஆலயந்தினை பரிபாலித்து வந்தார்கள்.

குறிப்பாக 450 தமிழ்க் குடும்பங்கள் வாழ்ந்த, குறித்த ஆலயம் அமையப்பெற்ற கிராம அலுவலர் பிரிவில், 1983ம் ஆண்டுக்குப் பின் நிகழ்ந்த இன வன்செயலால் ஆலயம் அழிக்கப்பட்டது. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனை "பன்குளப் படுகொலை" என அக்காலத்தில் சொல்லுவார்கள். இதனால் அப்பகுதியில் இருந்து பாதுகாப்புக்காக, தமிழ்க்குடும்பங்கள் திருகோணமலை நகரை நோக்கி புலம்பெயரத் தொடங்கினார்கள். இதனால் ஆலயம் பராமரிப்பு இன்றி அழிவடைந்து கிடந்தது.

பின்பு யுத்தம் முடிந்து 2009ம் ஆண்டுக்குப் பின், மக்கள் மீளக்குடியமர ஆயத்தமான போது, மணியகார மரபில் உள்ள குடும்பத்தவர்களால், இலங்கை விமானப்படையின் உதவியோடு, தற்காலிகமாக ஒரு ஆலயம் அமைக்கப்பட்டு, கிராமிய வழிபாடு இடம்பெற்று வந்தது. இக்காலப்பகுதியில் மணியகார மரபில் உள்ள சுவிஸ் நாட்டில் வாழும் வினோதா ஜெயமோகன் அவர்களின் இளையமகன் தபிஷேக் அவர்கள் 5 வயது அடைந்த போதும் சரியான பேச்சுவாண்மை இல்லாத போது, பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பயணின்றி, இந்தியாவில் வேதாராணயம் பகுதியில் உள்ள, ஒரு பிரபல சோதிட தேசிகரின், பலன் வாசிப்பில், மேற்படி திருக்கோணமலை பன்குளம் 4ம் கண்டம் அருள்மிகு நாகதம்பிரான் ஆலயத்தினை வேதாகமாக முறைப்படி சங்குஸ்தாபனம் செய்து, ஆலயமாக கட்டி மஹாகும்பாபிஷேகம் செய்தால் குழந்தை பேசுவான் என திருவாய் மொழிந்தார்.

அதன் பிரகாரம் 2021ம் ஆண்டு தைப்பூச மஹாதிதியில் திருக்கோணமலை பத்திரகாளி கோவில் பிரதமகுரு சிவஶ்ரீ இரவிச்சந்திரக்குருக்களின் ஆகம வழிகாட்டலில் அனைத்து அடியவர்களின் பிரசன்னத்தோடு சங்குஸ்தாபனம் செய்யப்பட்டது. ஆலயத்தினை நிர்மாணம் செய்வதற்காக சிற்பச்சக்கரவர்த்தி ஆசாரியார் யக்‌ஷன் அவர்களிடம் பொறுப்பளிக்கப்பட்டது. கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மஹா மண்டபம், விநாயகர் பரிவாரக்கோவில், முருகன் பரிவாரக்கோயில், வைரவர் பரிவாரக்கோயில், இராகு கேது பரிவாரக்கோயில், தாமரைத்தடாக புண்ணிய தீர்த்தக்கிணறு, தற்காலிக அன்னதான மண்டபம் என்பன வினோதா அவர்களின் குடும்பம் சார்ந்த மணியகாரமரபில் உள்ள அமர்ர் குமாரசாமி வேலுப்பிள்ளை கமலாம்பாள் குடும்பத்தினரால் அமைக்கப்பட்டது. மணிக்கூட்டுக்கோபுரம் மணியகார மரபில் உள்ள கந்தையா காளிராசா அவர்களால் அமைக்கப்பட்டது.

திருப்பணிகள் பூர்த்தியடைந்து 2022ம் ஆண்டு ஆனி மாத உத்தர நஷ்சத்திரத்தன்று, வேதாகமாகவிற்பனர் திருக்கோணமலை பத்திரகாளி கோவில் பிரதம குரு சிவஶ்ரீ இரவிச்சந்திரக்குருக்கள் அவர்களால் மஹாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இது சம்பந்தமான அனைத்து வழிகாட்டுதல்களையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஒய்வுநிலை வரலாற்றுத்துறைத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஷ்பரத்தினம் அவர்கள் வழங்கினார். கும்பாபிஷேக தினத்தன்று திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜெயவிக்கிரம அவர்களும், மாவட்ட பொலிஸ் அத்தியேட்சகர், விமானப்படைத் தளபதிகள், மொறாவேவ பிரதேசெயலாளர் மற்றும் உயர் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

மணியகாரமரபில் உள்ள குமராசாமி ஜெயராசா என்பவரைத் தலைவராக கொண்டு, அவ்வூர் மக்களையும் இணைத்து ஒர் ஆலய பரிபாலனசபை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நித்தியபூசை இடம்பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 16.30 க்கு மாலைப் பூசை இடம்பெறுகிறது. தைப்பூசம், ஆனிஉத்தரம், சரஸ்வதிப்பூசை, கௌரிவிரதம் என பல உற்சவங்கள் சிறப்பாக இடம்பெறுகின்றன.

கும்பாபிஷேகம் பூர்த்தியடைந்த நிலையோடு மணியகாரமரபில் பிறந்த குறித்த குழந்தை, மிகச்சிறந்த பேச்சாற்றலைப் பெற்றான். நாகதம்பிரானின் அருளை அனைவரும் போற்றினர். தற்போது பேச்சாற்றல் குறைந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் பல நேர்த்திகளை வைத்து, அவற்றில் வெற்றியும் சந்தோசமும் பெற்று வருகிறார்கள். நாகதோஷம் செய்வதற்கான சிறந்த பரிகார தலமாக கிழக்கு மாகணத்தில் இந்த ஆலயம் விளங்குகிறது. இதற்காக விஷேடமாக அமைக்கப்பெற்ற இராகு, கேது விக்கிரக பிரதிஷ்டையும் உதவுகிறது.