நிறுவனம்:சல்லி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சல்லி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் சல்லி
முகவரி சல்லி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், சல்லி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருகோணமலையின் சாம்பல்தீவு கிராமத்தில் சல்லி பகுதியில் காணப்படும் சல்லி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கடலோர கிராமத்தில் பெருந்தொகையான சல்லிக்கற்கள் ஒதுங்கி இருந்தமையினால் இவ்விடம் "சல்லி" எனும் காரணப் பெயரை பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த ஆலயத்தின் ஆலய வரலாறு, பூஜை வழிபாட்டு முறைகள் என்பன திருக்கோணாச்சல வைபவம் என்ற நூல் மற்றும் கர்ண பரம்பரை கதைகள், மூத்தோர் வாக்குகள் மூலம் அறியக் கூடியதாக உள்ளது.

இவ்வாலயம் ஆண்டான் குளத்திலிருந்து உற்பத்தியாகும் செம்பியன் ஆறு வங்கக் கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. எலிசபெத் முனை அருள்மலை என போற்றப்படும் வெள்ளை மலை குன்றின் மீது இந்த ஆலயம் அமைந்துள்ளது. திருக்கோணாச்சல வைபவம் நூலின் அடிப்படையில் இந்த இடத்தில் கோணேச பெருமானின் சொத்துக்கலான 40 லட்சம் களஞ்சியம் நிறை உடைய பொன் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த பொன்னை பாதுகாக்க இரத்த சாமுண்டியை இவ்வெள்ளை மலையில் காவலாக நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்வாலயத்தில் அமர்ந்துள்ள துர்க்கை அம்மன் இராமாயணத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. ஸ்ரீராமன் ராவணனை சம்காரம் செய்து சீதையை மீட்பதற்காக "சுவேதகிரி" என அழைக்கப்படும் வெள்ளை மலையில் பாசறை அமைத்து தங்கி இருந்த போது யுத்தத்தில் சிவ பக்தனான ராவணனை வெல்ல முடியாத கவலையுற்றிருந்த வேளை நாரதர் தோன்றி யுத்த தேவதையான கொற்றவை (துர்க்கை அம்மன்) வேண்டி நவராத்திரி விரதத்தை நோற்றால், யுத்தத்தில் வெற்றி அடையலாம் என ஆலோசனை வழங்கினார். இதன்படி ராமன் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக்க துர்க்கை காட்சி கொடுத்து அகத்தியரை அழைத்தால் வெற்றி உண்டாகும் என அருளினார். அகத்தியரை பிரார்த்திக்க யுத்த முனையில் தோன்றிய அகத்தியர் "ஆதித்த கிருதயம்" என்ற வழிபாட்டையும், ஏற்கனவே ராமன் வனவாசம் செய்த போது அகத்தியரால் வழங்கப்பட்ட அஸ்த்திரங்களையும், உபயோகிக்கின்ற முறைகளையும், அதற்கு பிறகு மந்திரங்களையும் கூற ராமர் அதனை பிரயோகித்து போரில் வெற்றி அடைந்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த ராமன் தனது வெற்றிக்கு காரணமாக துர்க்கையை தன் பாசறை அமைத்து தங்கியிருந்த வெள்ளை மலையின் மீது நிரந்தரமாக அமர்ந்தி, இந்த பூமிக்கும் உலகிற்கும் நல்லருளை வழங்குமாறு வேண்டி பிரார்த்தித்து நிரந்தரமாக அவ்விடத்தில் ஆலயம் அமைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.

இவ்விடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டதற்கான வரலாற்றை ஆராயும் பொழுது, இந்த வெள்ளை மலை சுமார் 200 வருடங்களுக்கு முன் விராலி மரங்கள் சூழப்பட்ட பத்தையாகவும், மக்கள் பயன்படுத்தாத அச்சமூட்டும் இடமாகவும் இருந்துள்ளது. இந்நிலையில் பிரபலஸ்தரான வேலுப்பிள்ளை என்பவர் தனது எட்டு குழந்தைகளுடன் இல்லறம் எனும் நல்லறத்தை சிறப்பாக வாழ்ந்து வந்த ஒரு நாளில், அவரது கனவில் தோன்றிய ஒரு பெண் வெள்ளை சீலையுடன் தான் திருகோணமலை துறைமுகத்தை நோக்கி மரக்கலத்தில் வந்த வேளையில் இக்கிராமத்தை கடந்து செல்லும்போது தான் வந்த மரக்கலத்தில் இருந்து இறங்கி வெள்ளை மலை அருகில் உள்ள விராலிப்பற்றை சூழ்ந்த இடம் ஒன்றில் தங்கி இருப்பதாகவும், தன்னை அவ்விடத்தில் வைத்து பூசிக்கச் சொல்லி மறைந்தருளினார். ஆசாரம் அற்ற தான் அப்பத்தினி தெய்வத்தை ஆதரிக்க முடியாது என மனம் கலங்கினார். இதன் பலனாக அவரது குழந்தைகளுள் ஒருவர் பின் ஒருவராக இறந்து, அவரது சந்ததி அழிவடைந்தது. இந்த விரக்தியுடன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த வேலுப்பிள்ளை கனவில் நரை, திரை, தாடி, மீசையுடன் வயோதிபர் ஒருவர் தோன்றி திருகோணமலையில் இருக்கும் கதிர்காமத்தம்பியை சந்திக்குமாறு குறிப்புச் சொல்லி மறைந்தார்.

மறுநாள் அந்த முதியவர் குறிப்பாக உணர்த்தியது, கோணேசர் சந்தானத்தை சேர்ந்தவரும், மாரியம்மன் ஆலய பசுபத அந்தணரும் ஆகிய கதிர்காமத்தம்பி குருக்கள் என்பதை அறிந்து அவரது ஆலோசனையுடன் கொட்டில் அமைத்து அம்பிகையை பிரதிஷ்டை செய்தனர். ஆலயம் கிழக்கு நோக்கி கோணேசரை பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. இவ்வாறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்த நிலையில் வெள்ளை மலையில் உள்ள ரத்த சாமுண்டி தகாதவர்களை தண்டிக்கத் தொடங்க, இதனால் குழப்பம் அடைந்த ஊர் மக்கள் ஆலயத்தின் உள்ளே வீற்றிருக்கின்ற அம்பிகை தான் அடாத செயலை செய்வதாக எண்ணி சந்நிதி குருமாருடன் தொடர்பு கொண்டு உள்ளிருந்த பத்தினி தெய்வத்தை ஒரு மாட்டு வண்டியில் ஏற்று "பாலம்போட்டாறு" எனும் இடத்தில் நீரோடைக்கு அருகாமையில் கொட்டில் அமைத்து அங்கேயே பிரதிஷ்டை செய்தனர். இவ்வாறு சல்லியம்பாள் ஆலயத்திற்கும், பாலம்போட்டாறு அம்மனுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்ததன் காரணத்தால் சல்லியம்பாள் உற்சவ தினத்தன்று பாலம்போட்டாறு அம்மனுக்கும் ஒரு நாள் பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்று வருகின்றது. இவ்வாறு சல்லியம்மன் ஆலயத்தில் இருந்த அம்மனை "பாலம்போட்டாறு" எனும் இடத்தில் கொண்டு சென்ற பின் ஊர் நன்மைக்காக வெள்ளை மலையில் வீற்றிருந்த "கொற்றவை" எனும் துர்க்கையை முத்துமாரியாக பிரதிஷ்டை செய்து ஆலயத்தில் எழுந்தருள செய்தனர். அவரே இன்று "முத்துமாரியம்மன்" என்ற பெயரோடு இன்று அருள் ஆட்சி புரிகின்றார். இவ்வாறு சிறந்த பூசை, புனஷ்காரங்களுடன், விசேட தினங்களாகிய தைப்பொங்கல், தைப்பூசம், சித்திரை வருட பிறப்பு, வைகாசி பொங்கல், ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், சூரன் போர், மானம் பூ உற்சவம், திருவம்பாவை என வருடாந்தம் பல அபிஷேகங்களுடன் உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இதில் வைகாசி மாதத்தில் வரும் பூரணை திதியில், விசாக நட்சத்திரத்தில் அலங்கார உற்சவம் ஆரம்பமாகி பத்து நாட்கள் இடம்பெறுகின்றது. இதில் கிராமமே விழாக்கோலம் பூண்டிருப்பதுடன், திருகோணமலையை சேர்ந்த அனைத்து மக்களும் அன்றைய தினத்தில் சல்லி கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். இதில் ஒன்பதாவது நாள் திருவிழா பொங்கல் நிகழ்வாக இடம் பெறும். அன்றைய தினம் துலா காவடி, பாற் காவடி, காவடிகள், கும்பம், கரகம் என அடியார்கள் தங்களுடைய நேர்த்திக்கடன்களை நிறைவு செய்து வழிபடுவார்கள். அன்றைய தினத்தில் பிட்டும், பலாப்பழமும் உண்டு மகிழ்வதை அந்த கிராமத்தின் நடைமுறையாக காணப்படுகின்றது. அத்தோடு அன்றி இரவு பொங்கல் முடிந்ததும், அடுத்த நாள் காலையில் சேவல் குத்தும் நிகழ்வும் குறிப்பிடத்தக்க விடயமாக இங்கு இடம் பெற்று வருகின்றது. அடுத்த நாள் நேர்த்திக்கடன்களை பூர்த்தி செய்து அடியார்கள் தீர்த்தம் ஆடி, அன்னதானத்தை உண்டு விரதத்தை முடித்துக்கொள்வார்கள். இந்த தினங்களில் ஒன்பதாம் திருவிழா, எட்டாம் மடை ஆகிய தினங்களில் ஆலயத்தில் மக்கள் பெருந்தொகையாக காணக் கூடியதாக உள்ளது.

இந்த உற்சவம் ஆரம்பமாவதற்கு முதல் நாள் காத்தான் ஊரை காவல் செய்யும் நிகழ்வு இடம் பெறுகிறது. அதாவது கெட்ட செயல்கள் அகன்று போக, தேவர்கள் வருகை தரவும், அம்பிகையின் உற்சவம் தடையின்றி இனிதே நடைபெறவும் இந்த நிகழ்வு செய்யப்பட்டு காத்தான் ஊர்வலம் இடம்பெறுகின்றது.

இந்த ஆலயத்தைச் சார்ந்து சில அதிசயங்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இனப் பிரச்சினை காலகட்டத்தில் தமது வாழிடங்களை விட்டு குழந்தைகள், உற்றார் உறவினர்களுடன் ஆழ்கடலில் பயணத்தை மேற்கொண்ட குழுவினர், ஆள் கடலில் வள்ளம் கவிழ்ந்து சென்றவர்கள் துன்பப்பட்ட போது அம்பிகையின் ஆலயத்தில் ஓர் பேரொளி தோன்றி, திடீரென்று ஒரு இளைஞர் குழாம் வந்து தத்தளித்தவர்களை காப்பாற்றினர்.

இந்த ஆலயத்தின் ஆரம்ப குடிகள் யாழ் வல்வெட்டித்துறையில் இருந்து வந்தவர்கள். ஆலயம் அமைக்கப்பட்ட காணியும் இவர்களின் சந்ததியினரின் காணியாகவே இருந்துள்ளது. அவர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஆலயத்திற்கான இடத்தை கொடுக்க முதலில் குடிசையாகவே ஆலயம் அமைக்கப்பட்டது. பின்பு மடாலயமாக உருப்பெற்றது. இக்காலகட்டத்தில் ஊரை காவல் செய்யும் காத்தவராயன் அடியார்களால் கொண்டுவரப்பட்டது. ஆரம்ப காலத்தில் கொட்டகை அமைத்து அம்பிகையை கும்பத்தில் பிரதிஷ்டை செய்து, வருடம் ஒரு முறை கதிர்காமத்தம்பி குருக்களால் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. மற்றைய தினங்களில் வேலுப்பிள்ளையின் பரம்பரையினர் விளக்கேற்றி வந்தனர்.

அத்தோடு நாகமுத்து, இராமலிங்கம், மாரிமுத்து, முத்து ஆச்சி போன்ற வேலுப்பிள்ளை பரம்பரையைச் சேர்ந்தவர்களே அம்மனுக்குரிய தொழும்பாளர்களாக இருந்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் முத்திரை வழங்கப்பட்டு அதிலிருந்து பொருட்களை வாங்கி பிரசாதம் செய்து வழிபட்டனர். பின்பு வேலுப்பிள்ளையின் பிள்ளைகள் வருடத்திற்கு ஒருவர் என திருவிழாவினை நடத்தி வந்தனர். பின்னர் மக்கள் கூடுதலாக குடியேறியதன் பின்னர் பரம்பரை முறை ஒழிந்து, பொது விழாவாக 10 நாள் திருவிழாஇடம்பெற்று வருகின்றது. ஊர் தனவந்தரான கார்த்திகேசு என்பவர் ஆலயத்தை அமைத்துக் கொடுத்தார். இவரது மறைவுக்கு பின், அவரது மகன் இரத்தினசபாபதிப்பிள்ளை 1933 ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பின்பு 1979 ஆம் ஆண்டு சல்லி வாழ் மக்களின் அயராத உழைப்பினால், திருப்பணிகள் நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின் ஆலயத்தின் புனஸ்காரங்கள் யாவற்றையும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பாசுபத பிராமண சந்தானத்தை சேர்ந்த சிவப்பிரம்ம ஸ்ரீ இராஜ கந்தசாமி குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேவல் குத்துதல், வளர்ந்தெடுத்தல் போன்ற நிகழ்வுகள் வேலுப்பிள்ளை வழி வந்த தொழும்பாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாலயத்தின் வருமானம் மின் இணைப்பு சாதனங்களை வாடகைக்கு விடல், மேடை வாடகைக்கு விடல், பொதுமக்களிடம் வரி அறவிடல் மூலமும், "அமஞ்சி" மூலமும் இடம்பெற்று, வருகிறது. மீண்டும் மூன்றாவது முறை 1995இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இறுதியாக நான்காவது முறையாக 2010ல் கும்பாபிஷேகம் நடைபெற்ற முடிவடைந்துள்ளது. இப்பொழுது ஐந்தாவது கும்பாபிஷேகத்திற்காக பாலஸ்தானம் 2023 ஜூன் மாதத்தில் இடம்பெற்றுள்ளது. அத்தோடு பல அடியார்கள் திருப்பணிகளை இந்த ஆலயத்திற்கு செய்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த ஆலயமானது வரலாற்று தொன்மை உடைய ஆலயமாக காணப்பட்டு வருகின்றது.