ஆளுமை:ரவிச்சந்தர், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தசாமி ரவிச்சந்தர்
தந்தை கந்தசாமி
தாய் வள்ளியாச்சி
பிறப்பு 1964.05.15
இறப்பு 2019.12.17
ஊர் ஆலங்கேணி, திருகோணமலை
வகை சமூக செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்காபுரி தன்னில் சரித்திரப் புகழ்கூறும் தெட்சண கைலாயம் என்று அழைக்கப்படும் கோணேச்சரம் அமைந்திட்ட கிழக்கிலங்கை தலைநகர் திருகோணமலை நகரின் மேற்கே அமைந்திட்ட ஆலங்கேணி எனும் அழகிய வெண்மணற் கிராமத்தை தன்பிறப்பிடமாய் கொண்டவரே கந்தசாமி ரவிச்சந்தர். இவ் ஆலங்கேணியூரில் 15.05.1964 இல் இவர் கந்தசாமி, வள்ளியாச்சிக்கு எட்டாவது ஆண் மகனாய் தோற்றமுற்று செல்லப் பிள்ளையாய் வாழ்ந்தார்.

இளமையிலேயே ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரை கல்வி கற்றார். தம்பலகாமம் ஆதி கோணேஸ்வரா மகா வித்தியாலயத்திலும் ஓராண்டு உயர்தர கல்வியை கற்றவராய் இடைவிலகி தன் சொந்தவூரிலே கல்வியை தொடர்ந்தார். இளமைக்காலத்தில் வள்ளுவன் இல்லத்திற்கு பெருமை சேர்த்து தொடர் சம்பியனாக தன் வெற்றியை தக்க வைத்த ஓட்ட வீரனாவார். கிரிகெட், கரப்பந்தாட்டம், எல்லே போன்ற குழுவிளையாட்டுகளில் ஈடுபட்டு பாரதி விளையாட்டுக் கழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டாளன். அதுமட்டுமல்ல மனம் போன போக்கு, குழிக்குண்டு, ஊர்சுற்றி பண்டார வன்னியன், செவிட்டு குடும்பம் போன்ற நாடகங்களை காசியமாக வீரவசனங்கள் பேசி தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்திய நன்நடிகனாய் திகழ்ந்தவர்.

சங்கீத பாடத்தில் மிகவும் பாண்டித்தியம் மிக்கவனாய், உணர்ச்சி பாவ வெளிப்பாட்டுடன் மிக்க ராகத்தோடு பாடுவதிலே வல்லவன். பாடசாலை மாணவ மன்றங்களில் அண்ணன் சௌந்தரராஜன் முதல் தேவிகா ஈறாய் இவனும் ஒருத்தராய் பாடல்களை பாடி மற்றவர்களின் உள்ளங்களை வென்றெடுத்த இசை மேதை என்றே கூறலாம்.

கிண்ணியா வலயத்தில் அவ்வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை நிகழ்வுகளில் பாடல்களை சரமாரியாக பாடுவதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை. அதுமட்டுமல்லாமல் சிறந்த ஓவியனாகவும், எழுத்தாளனாகவும் கவிதைகளை எழுதி மற்றவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் திகழவைத்தவனாகவும், எல்லையற்ற திறமைகளை இச் சமூகத்திற்கு தந்தவனாகவும் வாழ்ந்தார். ரவிச்சந்தரின் கல்வி வாழ்க்கையில் திருமலைநவம், கோணாமலை, அருளானந்தம், முத்து குமாரசுவாமி, தங்கராசா போன்ற நல்லாசான்கள் வழிகாட்டி அறிவு வழங்கியவர்களாக இருந்தார்கள். ஆலங்கேணியிலே முதன்முதலாக உயர்தரத்தை ஆரம்பித்த போது மகேஸ்வரன் இரகுநாதன், ரவிதாஸ், மல்லிகா, மாலாதேவி, விஜயசூர்யா, ருக்குமணி போன்றோருடன் ரவிச்சந்தரும் ஒருவனாக சிறந்த பெறுபேற்றை பெற்று பல்கலைகழக வாய்ப்பையும் தட்டி கொண்டனர்.

க.பொ.த உயர்தரத்தை முடித்துக் கொண்ட இவரோ இலங்கை தேசிய வீடமைப்பு அதிகார சபையில் தன்னையும் ஒரு மேற்பார்வையாளராய் இணைத்துக் கொண்டு பின்னாளில் உயர்பதவியினை பெற்றுக் கொண்டு வீடுகள் அற்ற திருகோணமலை வாழ் ஏழைப்பாமர மக்களுக்கு முடிந்தவரை வீடுகளை பெறுவதற்கு தன்னால் முடிந்த உதவிகளை போர்ச்சூழல், இடப்பெயர்வு காலத்தில் முன்னெடுத்த நற்பணியாளன். இவர் தான் ஏற்றுக் கொண்ட பணியை மென்மேலும் வாண்மையுறச் செய்வதற்காக பொறியியல் துறைசார்ந்த விடயங்களை யாழ்பல்கலைகழகத்தில் பகுதிநேர உயர்கல்வியை இரண்டு ஆண்டு காலம் நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டு தன் பதவிக்கு உரமிட்டுக் கொண்டார்.

பின்நாளில் யுத்த சூழ்நிலையில் அத்தொழிலை செய்ய முடியாமல் போனதன் காரணத்தால் கல்விப்பணியில் இணைந்து, தான் கற்ற பாடசாலையிலேயே ஆசானாய் கடமையாற்றி சமாவச்சந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் அல் அக்‌ஷா தேசிய பாடசாலையில் நீண்ட பணியாற்றி தன் கடமையை சீராய் புரிந்தார்.

ஆலங்கேணி விநாயகர் ஆலயத்தில் பொறுப்புள்ள முக்கிய பதவிகளை ஆற்றி ஆலய வளர்ச்சிக்கு தொண்டினை மேற்கொண்டு உறுப்பினர் மற்றும் பாரதி விளையாட்டுக் கழகத்தில் செயலாளராகவும், வாழ்வாதார அபிவிருத்திச் சங்க உறுப்பினராகவும், சமாதானக் குழுவில் உறுப்பினராகவும், மாதர் சங்கத்தின் பொறுப்பாளராகவும், சமாதான நீதவானாகவும் மக்களுக்கு பலவகையிலும் உதவியும் ஒத்தாசையும் வழங்கிய ஒரு புனித மாமனிதராய் சமூகம் போற்ற வாழ்ந்த மனிதன் இவர். ஆலங்கேணி மாணாக்கர்களுக்கு பொருத்தமான நாடகங்களை எழுதி நடிப்பதற்கு வழிப்படுத்திய நாடகக்கலைஞன் இவர். பொதுவாக சொல்வதென்றால் கலையுகத்தை ஆட்சி செய்த கலை "மா மேதை" என்று அழைப்பதில் யாரும் மறுப்பதற்கு இல்லை.

ஆலங்கேணி போடியார் சுந்தரம் சிவக்கொழுந்தின் நான்காம் மகவு புஸ்பராணி என்றிட்ட கன்னியை மணம் முடித்து கரிஸ்மன் என்ற ஆண்மகனை ஈன்று கல்வியூட்டி நன்மகனாய் திகழ வழி அமைத்து கொடுத்தார்.

இவர் 17.12.2019 இல் இறைவனடி சேர்ந்தார்.