ஆளுமை:நவமணி, கதிரமலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரமலை நவமணி
தந்தை கதிரமலை
தாய் தினகரம்
பிறப்பு 1957.11.01
ஊர் கல்முனை, அம்பாறை
வகை சிற்பக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரமலை நவமணி அவர்கள் கதிரமலை மற்றும் தினகரம் ஆகியோருக்கு மகனாக 1957.11.01 இல் அம்பாறை மாவட்டம் கல்முனையில் பிறந்தார். இவர் ஒரு ஆளுமையுள்ள சிற்பக்கலைஞர்.

இவர் ஆரம்பக் கல்வி, உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்றார். சிறுவயதிலேயே தந்தை வழியாக கலைகள், தச்சுவேலை மீது ஈர்ப்பு கொண்டார். சித்திரம் வரைதல், களிமண்ணால் உருவமைத்தல், மாயாவியின் சித்திரங்கள், சிற்பியின் கோட்டோவியங்கள் அமைத்தும் பாராட்டுப் பெற்றவர். இவர் இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரிந்து கொண்டே ஆரம்பகாலத்தில் ஆலயங்களில் ஓவியம் வரைதல், சுவரோவியம், திருவிழாவிற்கு சாத்துபடிகள் செய்தல், கொடிச்சீலை வரைதல், டென்சில் வெட்டுதல், மரத்தால் மற்றும் ரெஜிபோமினால் உருவங்கள் செய்தல் போன்றன அவருக்கு கை வந்த கலைகளாகும்.

இவர் 1981 ஆம் ஆண்டு சர்வோதயத்தில் சேர்ந்து கல்முனை 3 இல் சர்வோதய கிராமமட்ட தலைவராக இருந்து பாலர் பாடசாலையை அமைத்தார். 1974 ஆம் ஆண்டு எழுத்தாளர் கல்முனை பூபால் எழுதிய வஞ்சிமாநகரம் என்னும் நாடகத்திலும் 1979 இல் புதுமோடிகள் எனும் நாடகத்திலும் மற்றும் உமா வரதராஜன் எழுதிய மணிக்கூட்டு மனிதர்கள் என்னும் நாடகத்திலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார். மறைந்த இரா.சிவஅன்பு தயாரித்த வள்ளி திருமண நாடகம் மற்றும் பக்தப்பிரகலாதன் நாடகங்களிற்கான உடை மற்றும் காட்சி அலங்காரங்கள் அமைத்தவராவார். கண்ணகி அம்மன் கோவில், தரவை சித்தி விநாயகர் கோவில் கதவு போன்றவற்றிற்கு சிற்பங்கள் அமைத்தவர். இவர் பொதுவாக வேம்பு, முதிரை, தேக்கு போன்ற மரங்களில் சிற்பங்களைச் செதுக்குகின்றார். அத்துடன் எவ்வித மின்னியல் அச்சுபொறி (டிஜிட்டல் ப்ரின்டர்) உபகரணங்களையும் பாவிக்காது உளி, மரச்சுத்தியல் போன்ற பழைய கருவிகளை பாவிக்கின்றார். பெரும்பாலும் இவர் கடவுள் வடிவங்களை செதுக்குவதில் விருப்பமுள்ளவர். கண்ணகி அம்மன், முருகன், ஆஞ்சநேயர், விநாயகர் போன்றவை இதில் அடங்குகின்றன.

இவரது சேவையைப் பாராட்டி 2017.12.12 இல் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தால் கலைஞர் சுவதம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 2018.03.15 இல் கல்முனை வடக்கு பிரதேசசெயலகத்தால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. 2019.01.17 இல் தரவை சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையால் கொடிச்சீலை, தெப்பம் செய்ததற்காக பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. 2019.04.05 இல் போதைப்பொருளற்ற தெய்வீக நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை ஜனாதிபதியின் உருவப்படத்தை செதுக்கி பாராட்டுப் பெற்றார். 2019.09.23 இல் நுண்கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி மாகாண தமிழ் இலக்கிய விழாவில் வித்தகர் விருது வழங்கப்பட்டது. 2020.03.02 இல் கொவிட் – 19 கொரோனா நோயை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் உருவத்தை இலங்கை நாட்டின் நிலவமைப்பு வடிவத்தினுள் மரத்தில் செதுக்கி ஜனாதிபதியிடம் பாராட்டும் பெற்றார். 2020.08.31 இல் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலுக்கு இரண்டு துவாரபாலகர் உருவம் செதுக்கியமைக்காக மேலதிக மாவட்ட செயலாளர் அவர்களால் பொன்னாடை போர்த்தி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2020.12.18 இல் கல்முனையில் இராவணா விருது வழங்கி அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்களால் கெளரவிக்கப்பட்டார். 2021 இல் இருந்து இப்போது வரை 4 பிள்ளையார் சிலைகள், ஒரு அம்மன் சிலை, 28 ஆஞ்சநேயர் சிலைகளைச் செதுக்கியுள்ளார். 2023 இல் தரவை பிள்ளையார், புதிய வளத்தாப்பிட்டி மாரியம்மன், முருகன் ஆலயங்களுக்கு கொடிச்சீலை, சிங்கவாகனம், முடி, வேல் மற்றும் தம்புரா என்பன செய்து கொடுத்திருக்கின்றார். தற்போது 2024 இல் இன்னுமொரு ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கிக்கொண்டிருக்கின்றார்.அத்துடன் புதுமுயற்சியாக கருங்காலி மாலைகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நவமணி,_கதிரமலை&oldid=601092" இருந்து மீள்விக்கப்பட்டது