ஆளுமை:துரைரெட்ணசிங்கம், கதிர்காமத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம்
தந்தை கதிர்காமத்தம்பி
தாய் செல்லம்மா
பிறப்பு 1941.01.04
இறப்பு 2021.05.17
ஊர் மருதடிச்சேனை, சேனையூர், மூதூர், திருகோணமலை
வகை கல்வியியலாளர், பாராளுமன்ற உறுப்பினர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் ஐயா அவர்கள் திருக்கோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்திலுள்ள சேனையூர் (மருதடிச்சேனை) எனும் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி கணபதிப்பிள்ளை கதிர்காமத்தம்பி, வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதியருக்கு தலைமகனாக அவதரித்தார். ஏழைவிவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பெற்றோரின் கற்பிக்கும் அவாவினால் தனது ஆரம்பக் கல்வியை சேனையூர் மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும், அதன் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்திலும் கற்றார். மூன்று தம்பிகளுடனும் நான்கு தங்கைகளுடனும் கூடிப் பிறந்திருந்தாலும் தனக்கு அடுத்த சகோதரியான செல்வி. புவனேஸ்வரி அவர்களை நோய் காரணமாக சிறுவயதில் பறிகொடுத்தார். வறுமையான சூழ்நிலையிலும் ஏனைய ஆறு சகோதரர்களினதும் கல்விக்கு உறுதியாக நின்றார். சகோதரர்களான திருமதி. மார்க்கண்டு ஜானகியம்மா அவர்களை மனைப்பொருளியல் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும், கதிர்காமத்தம்பி நவரெட்ணசிங்கம் அவர்களை மக்கள் வங்கி முகாமையாளராகவும், கதிர்காமத்தம்பி செல்வரெத்தினம் அவர்களை கிராமசேவகராகவும், இரட்டைப் பிள்ளைகளான கதிர்காமத்தம்பி நடேசன் மற்றும் திருமதி. நவஜோதி நவரெட்ணராஜா ஆகியோரை முறையே பொறியியலாளராகவும், ஆசிரியராகவும், திருமதி கிருபாதேவி சித்திரவேல் அவர்களை விஞ்ஞான ஆசிரியராகவும் உருவாக்கினார்.

திருக்கோணமலை தம்பலகமத்தினைச் சேர்ந்த, பிறப்பு இறப்பு திருமணப்பதிவாளர் காளியப்பு கணபதிப்பிள்ளை, முத்துக்குமாரு பாக்கியம் தம்பதியினருக்கு இளையமகளான ஆசிரியையான கமலாதேவி அவர்களை துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு 1974.12.09ஆம் திகதி குடும்பத்தினர் பதிவுத்திருமணம் செய்து வைத்தனர். அதன் பின்னர் கமலாதேவி அவர்கள் 08.01.1975 தொடக்கம் 31.12.1976 வரையில் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெறச் சென்றார். பயிற்சிக்காலம் நிறைவடைந்ததும், 1979ஆம் ஆண்டு மாசி மாதம் 14ஆம் திகதி தம்பலகாமம் ஆதிகோணநாயகர் ஆலயத்தில் திருமணம் இனிதே இடம் பெற்றது.

கமலாதேவி அவர்கள் ஆசிரியராக முதல் நியமனம் பெற்று 1973.01.15 புதுக்குடியிருப்பு அ.த.க.பாடசாலையிலும், அதன் பின்னர் 1973.02.19 தம்பலகாமம் முன்மாரித்திடல் அ.த.க.பாடசாலையிலும் பணியாற்றினார். ஆசிரியர் பயிற்சி நெறிக்காக, மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் 08.01.1975 தொடக்கம் 31.12.1976 வரையிலும் பயிற்சி பெற்று பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியராக வெளியேறி, தம்பலகமம் ஆதிகோணநாயகர் வித்தியாலயத்தில் 01.01.1977 தொடக்கம் 28.01.1979 வரை கடமையாற்றியவர், திருமணத்தின் பின்னர் 01.02.1979 முதல் 14.01.1991வரை சேனையூர் மத்தியகல்லூரியில் கணவருடன் அவருக்கு ஒத்தாசையாகவே கடமையாற்றினார்.

1991 இன் பின்னர், வன்செயலினால் இடம் பெயர்ந்து 15.01.1991 தொடக்கம் தி/சென் மேரிஸ் கல்லூரியில் சேவையாற்றி, குடும்பத்தினைக் கவனிக்கும் பொருட்டு ஓய்வு பெறும் வயதிற்கு முன்பதாக 2003.04.02 அன்றுடன் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார். பாடசாலைக் காலமாக இருக்கட்டும் அரசியல் காலமாக இருக்கட்டும் கணவரின் அனைத்து முன்னெடுப்புக்களுக்கும் ஒத்துழைத்து அவரின் தன்னலமற்ற சேவைகளுக்கும் உறுதுணையாகவே செயற்பட்டும் வந்தார் என்பது அனைவரும் அறிந்த உண்மை. எவ்விடயத்திலும் அவருடன் மனமொத்துச் செயட்பட்டதினால் பாடசாலைக்காலத்திலும் அரசியல்காலத்திலும் அவருக்கு மிகவும் பிடித்த விருந்தோம்பலுக்கு ஒத்தாசையாகவே எப்பொழுதும் செயற்பட்டவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு வாழ்தவருக்கு வாழ்க்கைத்துணையும் பெரும் வரப்பிரசாதமாகவே அமைந்திருந்தது என்றால் மிகையில்லை.

சேனையூர் மத்தியகல்லூரியில் சேவையாற்றிய 27 வருடங்களில் அதிபராகக் கடமையாற்றிய 15 வருடங்கள் 07 மாதங்களுமான காலப்பகுதியில், சேனையூர் மகாவித்தியாலயத்தை சேனையூர் மத்திய கல்லூரியாகத் தரமுயர்த்த அரும்பாடுபட்டார். அதன் பொருட்டு அன்னார் பிரதி அதிபராக இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட உயர்தர கலைப்பிரிவுடன் வர்த்தக, கணித, விஞ்ஞானப்பிரிவுகளையும் ஆரம்பித்து, சட்டத்துறை, மருத்துவத்துறை உட்படபல துறைகளில் மாணவர்ளை பல்கலைக்கழகம் அனுப்புவதற்கு ஊன்றுகோலாக இருந்தார். இக்காலகட்டத்தில் பாடசாலையின் தரம் உயர்ந்து மாவட்டத்தின் வடக்கே தென்னமரவடியில் இருந்து தெற்கே வெருகல் வரை மாணவர்கள் அங்கு வந்து கல்வி கற்றனர். அம்மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததுடன் விஞ்ஞான கூடம், மனையியற் கூடம், விவசாயத் தொழிற் கூடம், மாடிக்கட்டிடங்கள், ஆசிரிய விடுதிகள் ஆகியவற்றை அமைத்தார். ஒன்று கூடல் மண்டப அமைப்புக்கான அனைத்து முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டிருந்தார். இருப்பினும் அவர் மாற்றமாகி வந்த பின்னர் அது உருப்பெற்று பாடசாலைவளாகத்துள் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது.

விளையாட்டு மைதானத்திற்காக மேலதிகமாக மூன்றரை ஏக்கர் தனியார் காணியைப் பாடசாலைக்குச் சுவீகரித்ததுடன் இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தை கொண்ட பாடசாலைகளில் ஒன்றாக தி/சேனையூர் மத்திய கல்லூரியைப் பெருமைப்படுத்தினார். அத்தோடு மட்டுமல்லாது தேசிய மட்டத் தமிழ் மொழித்தினப் போட்டிகள், விளையாட்டுப் போட்கள், ஆங்கில தினப் போட்டிகள் மற்றும் ஆக்கத்திறன் போட்டிகள் போன்றவற்றிலும் பாடசாலை முதலாம் இடம் பெறுவதற்கு ஊக்கமளித்தார். வருடாவருடம் கல்விச்சுற்றுலாக்களை ஒழுங்கமைப்பதற்கும் தவறுவதில்லை.

சேனையூர் மத்திய கல்லூரினை அதிபராகப் பொறுப்பேற்று நடாத்திய காலம் (1982-1998) என்பது மிகவும் கெடுபிடிகள் கூடிய யுத்த காலம். பாடசாலையினை கொண்டு நடாத்துவதற்கு மேலாக மாணவர்கள் ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கான முன்னெடுப்புக்கள் எண்ணிலடங்காதவை. 1986 இல் இடம் பெற்ற அனர்த்தம், 1990 இல் இடம் பெற்றபாரிய இடப் பெயர்வும், ஒவ்வொரு இழப்புகளின் போதும் ஆரம்பத்தில் இருந்து தொடங்கித் தான் சேவையாற்ற வேண்டிய நிர்ப்பந்தம். அந் நேரங்களில் கூட பாடசாலையின் ஒரு பாதுகாவலனாகவும், அப்பிரதேசத்தின் அரனாகவும், அங்கு இடம் பெற்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரு அதிபராக முகம் கொடுத்துதன் பாதுகாப்பினையும் பொருட்படுத்தாது செயற்பட்ட சம்பவங்கள் பற் பல. ஊசி முனையில் உயிர் பிழைத்த பல சம்பவங்கள் பலவுண்டு. பிரத்தியேக வகுப்புக்கள் அற்ற காலம் அது. மூதூர் பிரதேசமான சேனையூரை அண்டிய கிராமங்களில் மின்சாம் இருக்கவில்லை. காலையில் வீட்டில் இருந்து அரிக்கன் லாம்புடன் காலை 4.30 மணிக்கு வீட்டில் இருந்து வெளிக்கிட்டு கணிதம், தமிழ், சமயம் போன்ற பாடங்களைத் மானே கற்பித்து மாணவர்களின் பெறுபேற்றிலும் வெற்றி கண்டார்.

சிறுவயது முதல் இறுதி வரை பூரணமான சாரணனாக வாழ்ந்தவர். 1971,1972 இல் தி/சேனையூர் மகா வித்தியாலயத்தின் சாரணர் இயக்கத்திற்கு பொறுப்பாசிரியராக இருந்தார். இலங்கை கல்வித் திட்டத்தில் கொத்தணி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது அமரர் துரைரெட்ணசிங்கம் அவர்கள், 1988ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டுவரை மூதூர் கிழக்குப் பிராந்தியந்தின் கொத்தணி அதிபராகச் சேவையாற்றினார். இக்காலகட்டத்தில் மூதூர் கிழக்கில் காணப்பட்ட 10 பாடசாலைகளுடன் 8 புதிய பாடசாலைகளை உருவாக்கி, 1450ஆகக் காணப்பட்ட மாணவர் தொகையினை 6200 ஆகவும் உயர்த்தியதுடன் பாடசாலைகளுக்கான வளங்கள் மற்றும் ஆளணியினரைப் பெற்றுக் கொடுத்து பாடம ற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் மாணவர்களை மிளிரச்செய்து மூதூர் கிழக்குப் பிராந்தியத்தில் பாரிய கல்வி எழுச்சியை ஏற்படுத்தினார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியாயினும் திருகோணமலை மாவட்டத்தின் முன்னணிக் கொத்தணியாக மிளிர வைத்த ஆளுமை அவரையே சாரும்.

1998.08.01 ஆம் திகதியிலிருந்து பதவியுயர்வு பெற்று ஒன்றரை வருடங்கள் திருக்கோணமலைக் கல்விவலயத்தில் முன்பள்ளிக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றினார். இதன் போது வலயத்திற்கு உட்பட்ட எல்லாக் கிராமங்களிலும் முன்பள்ளிகள் அமைக்கவும், முன்பள்ளி ஆசிரியைகளாக, படித்த வேலையில்லாத தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சியளிக்கப்படவும், கட்டிடங்கள் இல்லாத இடங்களுக்குக் கட்டிடங்கள் வழங்கப்படவும், கல்வி உபகரணங்களும் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படவும், அனைத்துப் பதிவுகளும் வரவுசெலவுகளும் ஒழுங்காகப் பதிவுசெய்யப்படவும் காரணமாக அமைந்தார். தமிழ்தினப் போட்டிகள், விஞ்ஞானக் கண்காட்சிகளுக்கு தலைமை தாங்கி செயற்பட்டார்.

11.01.2000 திகதி மீண்டும் பதவி உயர்வு பெற்று ஒரு வருடகாலம் தம்பலகமம் பகுதியில் கோட்டக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றினார். இவரின் சேவையினை ஒரு ஊரினுள் மட்டுப்படுத்தி விடக் கூடாது என்று இறைவனின் சித்தமோ என்னவோ அடுத்தடுத்து பதவி உயர்வுகளை வலிந்து கொடுத்து, தம்பலகமம் கோட்டைக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். தம்பலகமக் கோட்டத்தினை கல்வியில் மீள் மறுமலர்ச்சி பெறச் செய்தார். பாடசாலைகளைச் சோதனையிட தனது துவிச்சக்கரவண்டியில் பயணம் செய்து செவ்வனே நிறைவேற்றினார். தம்பலகம கோட்டைக்கல்வி அலுவலகத்தின் கவின் நிலையில் கூட மாற்றங்களைக் கொண்டுவந்து மிளிரச் செய்தார்.

04.01.2001ஆம் திகதி தனது 60ஆவது வயதைப் பூர்த்திசெய்து 41 வருடத்திற்கும் மேலான கல்விச் சேவையில் இருந்து உத்தியோக பூர்வமாக ஓய்வு பெற்றார். ஓய்வின் பின்னரும் உலக வங்கியினால் திருக்கோணமலை மாவட்ட வலயக்கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு, பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட உபகரணங்களைச் சோதனையிடும் அதிகாரியாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னரும் அவரது சேவை மாவட்ட மட்டதை நோக்கி விரிவு பெற்றது. உலக வங்கியின் அனுசரணையுடன் திருகோணமலை வலயக்கல்விப் பணிமனையின் கீழ் பாடசாலைகளின் தேவைகளை அறிந்து, அதற்கான உபகரணங்களை பெற்று கொடுப்பதுடன் அதனை மேற்பார்வை செய்யும் இணைப்பாளராக நியமிக்கப்பட்டு சேவையாற்றிக் கொண்டிருந்தார்.

கல்விச் சேவையில் இருந்து 41 வருட சேவைக்காலத்தினை நிறைவு செய்து 04.01.2001 இல் ஓய்வு பெற்றுக் கொண்டார்.

2001ஆம் ஆண்டு இடம்பெற்ற 5ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தமிழரசுக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டு, தனது தமிழ்த் தேசிய அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி 34.83 சதவீதவாக்குகளைப் பெற்றுக் கொண்டு, ஒரு ஆசனமும் கிடைக்கப் பெற்றது. அத்தேர்தலில் கட்சியின் சார்பில் இரண்டாவது பெரும்பான்மை வாக்கெண்ணிக்கைகளைப் பெற்றிருந்த போதிலும், பாராளுமன்ற ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை. எனினும், அமரர் இராமு சிவசிதம்பரம் ஐயா அவர்களின் மறைவினை அடுத்து 2002.07.02ஆம் திகதி தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார். பாராளுமன்த்தில் 07.08.2002 அன்று தனது கன்னியுரையினை ஆற்றி, பிறந்த மண்ணிற்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்த பெருந்தகையாவார். இக் காலப்பகுதியில் திருக்கோணமலை மாவட்டம் மட்டுமல்லாது வடக்குக் கிழக்கு மாகாணத்தில் பல மாவட்டங்களுக்கும் தன்னாலான பல சேவைகளைச் செய்தார்.

ஆறாவது பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 2004 இல் பாரிய வெற்றியடைந்து மாவட்டத்தின் இரண்டாவது அதிகப் படியான வாக்குகளைப் பெற்றுக் கொண்டு தனது சேவையினைத் தொடர்ந்தார். இத் தேர்தலின் போது இலங்கை தமிழரசுக்கட்சி மாவட்டத்தில் 68.95 சதவீதமாக வாக்குகளைப் முதலாமிடத்தில் பெற்றுக் கொண்டதினால், கட்சிக்கு இரு ஆசனங்கள் கிடைக்கப் பெற்றது. மாவட்ட வரலாற்றில் முதற்தடவையாகும். இதன் போது கௌரவ இரா.சம்பந்தருக்கு 47,734 வாக்குகளும், கௌரவ.க.துரைரெட்ணசிங்கத்திற்கு 34 773 வாக்குகளையும் பெற்று, மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டார்.

2010ஆம் வருடம் இடம் பெற்ற 7ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தனது சுய விருப்பத்தின் பெயரில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டார். இருப்பினும் அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் முனைப்புடன் செயற்பட்டார். 2010-2015 காலப்பகுதியில் கூட அனைத்து செயற்பாடுகளிலும் முன்னின்று உழைத்தார் எனில் எவரும் மறுப்பதற்கில்லை.

2015ஆம் ஆண்டு 8ஆவது பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு 23.81 சதவீத வாக்குகள் கிடைக்கப் பெற்றன. ஆகவே கட்சிக்கு, ஒரு ஆசனம் மட்டும் கிடைக்கப் பெற்றது. கட்சியில் இரண்டாவது வாக்கினைப் பெற்ற பொழுதும் ஆசனத்தை பெறமுடியாது போனது. ஆகவே தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் மூன்றாவது தடவையாகப் பாராளுமன்றம் சென்றார்.

இக் காலகட்டத்தின் போது குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கென கட்சிப் பிரதிநிதி இன்மையினால், பல அபிவிருத்திப் பணிகளையும் அப்பிரதேசத்திற்கு முன்னெடுத்தும் உள்ளார். 2015-2020 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அம்பாறை மாவட்டத்திற்கும் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டநிதியில் இருந்து பல ஆக்கபூர்வமான பணிகளையும் ஆற்றியுள்ளார். இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தில் சபையைத் தலைமை தாங்கும் சபாநாயகர் குழுவில் அங்கத்துவராகவும் இருந்து பல சந்தர்ப்பங்களில் சபையை வழி நடாத்தியுமுள்ளார்.

தமிழரசுக்கட்சியுடனான அரசியல் பயணத்தின் போதுகட்சியின் துணைப் பொதுச் செயலாளராகவும், உப தலைவராகவும், கட்சியின் பிரதான கொரடாவாகவும் சிலகாலம் செயற்பட்டார். மற்றும் 2002-2010 வரையான காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத் தலைவராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். இதன் போது, கட்சித் தொண்டர் அனைவரினதும் நன்மை தீமைகளில் தானும் அவர்களின் குடும்ப உறுப்பினராக சங்கமமாகுவதை யாரும் மறுப்பதற்கில்லை. கட்சிக் கூட்டங்களும் அனைத்து அங்கத்தவர்களையும் அழைத்து நடாத்தவும் தவறுவதும் இல்லை.

தன் வாழ்நாளில் 19 வயதுவரை குடும்பத்துக்காகவும், 60 வயதுவரை மாணவர்களின் கல்விக்காகவும், 80 வயது வரை தமிழர்களுக்காகவும் ஓய்வின்றி உழைத்த அன்னார் 2021.05.17 ஆம் திகதி நிரந்தர ஓய்வு பெற்று சிவபதமடைந்தார்.