ஆளுமை:தங்கத்துரை, அருணாசலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசலம் தங்கத்துரை
தந்தை அருணாசலம்
தாய் யோகம்மா
பிறப்பு 1936.01.17
இறப்பு 1997.07.05
ஊர் திருக்கோணமலை
வகை பாராளுமன்ற உறுப்பினர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அமரர். கௌரவ. அருணாசலம் தங்கத்துரை இவர் கிழக்கு மாகாணத்தின் மூதூரில் கிளிவெட்டி எனும் கிராமத்தில் 17ம் திகதி தை மாதம் 1936ம் ஆண்டு திரு. அருணாசலம், யோகம்மா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார். இவர் தனது கல்வியை கிளிவெட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்திலும், பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிகல்லூரியிலும் கற்றபின், இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எழுதுநராக நியமனம் பெற்று பணியாற்றினார். இலங்கை நீர்ப்பாசன திணைக்களத்தில் எழுத்தாளராக நியமனம் பெற்று தங்கதுரை இரத்தினபுரி, கொழும்பு போன்ற ஊர்களிலும் பணியாற்றியுள்ளார். 1970 ஆம் ஆண்டு தனிச் சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார்.

1970 ஆம் ஆண்டில் இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதியில் திரு. செல்வநாயகம் தலைமையிலான இலங்கைத்தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.

தங்கத்துரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி தலைவராகவும், அக்கட்சியின் மலையக தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 1978 ஆம் ஆண்டில் கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து 1980 இல் சட்டத்தரணியானார். 1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1978 ஆம் ஆண்டு கிளிவெட்டி கிராமத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் 8 மாதங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1994 இல் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு கட்சி பெற்றுக் கொண்ட வாக்குகளில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மாணவர்களின் கல்வித்தரம் ‌மற்றும் கல்விக்கூடங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதற்காக ஆசிரியர் நியமனங்கள், கல்வி கூடங்கள் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் கிராம, நகர மேம்பாட்டு திட்டங்கள் ஆகிய பிரதான பணிகளை மேற்கொண்டார்.

இன மத மொழி வேறுபாடின்றி அவர் செயற்பட்ட காரணத்தால் அனைத்து சமுதாயத்தினத்தினரதும், அனைத்து அரசியல் தலைவர்களினதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். அதனால் பதவிகள் எதுவும் வகிக்காத காலங்களிலும் கூட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும்‌ அயராது மேற்கொண்டு செயற்பட்டார்.

இந்தியாவில் ஏதிலியர் சங்கத்துடன் இணைந்து அங்கிருந்த‌ இலங்கை தமிழ் அகதிகள் நலன்கள் பெற உழைத்தார். தங்கத்துரை அவர்கள் உயிர் நீக்கும் வரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இருந்தார் என்பதும் தமிழர்‌‌ விடுதலை கூட்டணியின் தேசிய அமைப்பு நிர்வாகச் செயலாளராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1997 ஆம் ஆண்டு யூலை 5 ஆம் நாள் திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்குபற்றியபோது இனந்தெரியாதோரால் படுகொலை செய்யப்பட்டார்.