ஆளுமை:சிவயோகினி நாகவரலட்சுமி அம்மா, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவயோகினி நாகவரலட்சுமி அம்மா
தந்தை சுப்பிரமணியம்
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1959.07.18
இறப்பு -
ஊர் திருக்கோணமலை
வகை சமய செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் ஒரு சைவ சமய செயற்பாட்டாளர் ஆவார். திருக்கோணமலையில் சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதியினருக்கு 1959.07.18 ஆம் திகதி பெண் மகவு ஒன்று பிறந்தது. வரலட்சுமி என்னும் பெயருடன் கொழும்பு பாடசாலையொன்றிலும், பின்னர் 1972 ஆம் ஆண்டிலிருந்து திருக்கோணமலை புனித மரியாள் கல்லூரியிலும் தனது கல்வியைத் தொடர்ந்து வந்த வேளையில் சிவபக்தியிலும் கடும் ஈடுபாடு காட்டினார்.

2002 ஆம் ஆண்டு சத்திரசிகிச்சை ஒன்றுக்கு உட்படவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவ் வேளையில் இவரின் தாயார் இவரை அழைத்துக்கொண்டு அவ்வேளையில் சிவானந்த தபோவனத்தில் தங்கியிருந்த நரசிங்க சுவாமி அவர்களிடம் சென்றார். பின்னர் சுவாமியாரை தங்களது வீட்டிற்கும் அழைத்து உபசரித்தனர். சில வருடங்கள் சென்றபின்னர் ஒரு நாள் நகம்மாள் பக்தர்களின் தரிசனக் காட்சிக்கு அமைவாக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாலையூற்று கிராமத்தில் பாம்பு புற்று இருந்த இடத்திற்கு வரலட்சுமி அம்மா அழைத்துவரப்பட்டார். அதைத் தொடர்ந்து இவ்விடத்தில் அவருக்கு ஏற்பட்ட ஈர்ப்பினால் இங்கு வழிபாடியற்றும் யோசனை ஏற்பட்டது. சுற்றியிருந்த பற்றைக்காடுகள் வெட்டி வெளியாக்கப்பட்டன. கடும் பிரயத்தனத்தின் மத்தியிலும், சைவநெறி எதிர்ப்பாளர்களின் நெருக்குவாரங்களின் பின்னணியிலும் 2005.07.15 இல் சிறியதொரு நாககன்னி கோயிலையும் உருவாக்கினார்.

"ஹரிஹர நவசக்தி நாககன்னி கோயில்" என்றழைக்கப்படுகின்ற இவ் ஆலயத்திலுள்ள நாககன்னித் தெய்வத்தின் வழிகாட்டலின் படியே அம்மா அவர்கள் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. மூலவராக சிவலிங்கம் அமைந்து காணப்படுகின்றது. சுற்றிவர பரிவாரமூர்த்திகளின் கருங்கற் சிலைகள் அமைந்துள்ளன. கருவறையில் சுயம்புவாக சிவ சக்தி உள்ளது.

இவ்வாறிருக்கும் வேளையில் நரசிங்க சுவாமியைத் தேடி கோயில் கோயிலாக அலைந்தார். இறுதியாக சுவாமியாரை கோணேசர் பெருமான் சந்நிதியிலே சந்தித்து ஆசி பெற்றார்.

ஒரு சமயம் 2004 ஆம் ஆண்டு தனது உறவுக்கார வயோதிபத் தம்பதியினரை இந்தியாவின் காசிக்கு அழைத்துச் சென்றார். அப்போது திருப்பதிக்குச் சென்று தனது முடியை மழித்ததோடு காவியுடையும் தரித்தார். பின்னர் திருக்கோணமலைக்கு வந்து நாககன்னி ஆலயத்தில் தங்கி வழிபாடியற்றினார். சில காலங்களின் பின்னர் இறையருள் தேடி ஆயங்கள் தோறும் சென்று வழிபாடியற்றினார். மேலும் இவ் ஆலயத்திலேயே இறைவனை ஒளியாகவும் கண்டார். அடியார்களின் தோசம், பாவம், ஊழ்வினை, கர்மவினை போன்ற பாவங்களை அகற்றுவதற்காக வழிபாடுகளைச் செய்தார். மக்களின் நன்மைக்காக பிரசங்கங்கள் செய்தார்.

சிவனையே குருவாகக் கொண்டதாகக் கூறும் அம்மா அவர்கள், தனக்காக அனுப்பப்பட்ட குருவான நரசிங்க சுவாமியைத் தேடி யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அங்கே மாதகல் சம்பில்துறை என்னும் இடத்தில் கண்டு ஆசிர்வாதம் வாங்கினார். 2010 ஆம் ஆண்டு இவருக்கு நரசிங்க சுவாமிகளிடமிருந்து பிரம்ம ஞானம் கிடைத்தது. 2012 ஆம் ஆண்டு யோகநிலை பெற்று "சிவயோகினி நாகவரலட்சுமி" எனப் பெயர் கொண்டார்.

தற்போது ஸ்ரீ ஹரிஹர நவசக்தி நாககன்னி மகா சித்தர் பீடத்தினூடாக ஆத்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருவதைக் காணலாம். அத்தோடு திருவடி நிழல் ஆச்சிரமம், திருவடி அறநெறிப்பாடசாலை, திருவடி அறநெறி நூலகம் என்பவற்றை அமைத்து அதைப் பாராமரித்து வருகின்றார். இங்கு மாணவர்களுக்கான பஜனைகள், தியானப் பயிற்சிகள், சத்துணவுகள் போன்றனவும் வழங்கப்படுகின்றது. வரலட்சுமி அம்மாவுக்கு உதவியாக 2008 ஆம் ஆண்டிலிருந்து புவனேஸ்வரி அம்மாவும் உடனிருந்து வருகின்றமை குறிப்பித்தக்கது.