ஆளுமை:சிதம்பர பரஞ்சோதி தங்கத்துரை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பர பரஞ்சோதி
தந்தை ஆறுமுகம்
தாய் கனகம்மா
பிறப்பு 1925.03.17
ஊர் வாழைச்சேனை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிதம்பர பரஞ்சோதி தங்கத்துரை (1925.03.17 - ) மட்டக்களப்பு, வாழைச்சேனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை ஆறுமுகம்; தாய் கனகம்மா. தனது ஆசிரியர் பயிற்சியை இவர் 1947.03.01 இல் பூர்த்தி செய்து 1947.06.04 இல்ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். 1962 முதல் 1984 இல் பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை அதிபராகப் பணி புரிந்தார். அரசியல், ஆன்மிகம், இலக்கியம் என தனது ஆளுமையினை பலதுறைகளிலும் வெளிப்படுத்திய பெண்மணியாக விளங்கும் இவரை 'இரும்புப் பெண்மணி' என அழைக்கின்றனர் அவரிடம் பயின்ற மாணவர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேசத்தில் பயிற்றப்பட்ட முதலாவது பெண் ஆசிரியையாகவும், பிரதேசத்தின் முதலாவது பெண் அதிபராகவும் விளங்கி, ஏறத்தாழ 37 வருடங்களுக்கு மேல் கல்விப்பணி புரிந்த இவர், தனது வாழ்நாளில் பெரும்பகுதியை சமூகத்தின் கல்வி, சமய வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். பிரதேச மக்களால் இன்றும் 'பெரியக்கா' என அன்புடன் நினைவுகூரப்படுகின்றார்.

வாழைச்சேனை, நாசிவன்தீவு, மிறாவோடை, புதுக்குடியிருப்பு ஆகிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் கடமை புரிந்த இவர், வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த காலகட்டத்திலே அதிபராக தரமுயர்த்தப்பட்டு 1984 வரை அதிபராகப் பணிபுரிந்தார். புதுக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை எனும் பெயரை புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயம் என மாற்றினார்.

கல்விப்பணி தவிர்த்து தன்னுடைய பிரதேசத்து பெண்களின் முன்னேற்றத்திற்காக 1960இல் 'உதயசோதி' எனும் பெயரில் மாதர் சங்கத்தினை தோற்றுவித்தார். சிக்கன கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி செயற்படுத்தினார். அதனூடாகக் கடன்களைப் பெற்று சிறுதொழில்களை செய்து வருமானம் பெற வழிகாட்டினார். தனது சொந்தக் காணியில் இடம்கொடுத்து ஒரு கைத்தறி நிலையம் அமைத்து, ஏழைப் பெண்களுக்கு வருமானம் பெற வழிவகுத்துக் கொடுத்தார். கே. டபிள்யூ. தேவநாயகம், கே.நல்லையா போன்ற கல்குடா தொகுதி அரசியல் தலைமைகளின் தொடர்பின் மூலம் பிரதேசத்திலுள்ள பலருக்கும் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தார்.

1962இல் கிராமசபை உதவியுடன் தனது காணியில் வாசிகசாலை அமைத்து, பெண்களுக்கான கைத்தறி நிலையத்தினையும் உருவாக்கினார். இந்தக்காணியில் விபுலானந்தர் சிலை வைக்கப்பட்டு, இவ்வீதிக்கு 'விபுலானந்தர் வீதி' எனப் பெயரிடப்பட்டது. இதில் சிதம்பர பரஞ்சோதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மாதர் சங்கத்தின் மூலம் பிரதேசத்திற்கு மாற்றலாகி வருகின்ற உயர் அதிகாரிகளுக்கு வரவேற்பு மற்றும் பிரிவுபசார வைபங்களை தொடர்ச்சியாக நடத்தி, அவர்களின் உதவிகளைப் பெற்று தனது கிராம மக்களுக்கு உறுதுணையாக விளங்கினார். வாழைச்சேனை கைலாயப்பிள்ளையார் ஆலயத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றிய இவர், 1990இல் ஆலயத்தின் வரலாற்றினை 'வாழைச்சேனை ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் ஆலய வரலாறு' எனும் நூலாக எழுதி வெளியிட்டு பிரதேச வரலாற்றினை எழுதி ஆவணப்படுத்திய முதல் எழுத்தாளராகவும் விளங்குகின்றார். இன்றுவரை ஆலயத்தின் வளர்ச்சிக்கு இவரது பிள்ளைகள் உதவி வருகின்றனர்.

ஆசிரியர், அதிபர், எழுத்தாளர், சமூக சேவகர் எனப் பல முகங்கள் கொண்ட அமரர் சிதரம்பர பரஞ்சோதி அவர்களின் பணிகள் இன்னும் பல உள்ளன.