நிறுவனம்:கிளி/ வட்டகச்சி மத்திய கல்லூரி

From நூலகம்
Name கிளி/ வட்டக்கச்சி மத்திய கல்லூரி
Category பாடசாலை
Country இலங்கை
District கிளிநொச்சி
Place வட்டக்கச்சி
Address கட்சன் வீதி, வட்டக்கச்சி, கிளிநொச்சி
Telephone 0212203696
Email -
Website -

1953ஆம் ஆண்டு தொடங்கிய வட்டக்கச்சி குடியேற்றக் கிராமத்தில் மத்திய பகுதியில் 03ஆம் திகதி 05ஆம் மாதம் 1954ஆம் ஆண்டு அன்று வட்டக்கச்சி அரசினர் வித்தியாலயம் என்ற பெயருடன் இவ் வித்தியாலயம் இயங்க தொடங்கியது.

15ஆம் திகதி 10ஆம் மாதம் 1954ஆம் ஆண்டு இவ் வித்தியாலயத்தின் முதலாவது கட்டடம் அந்நாள் மதிப்பிற்குரிய பிரதம மந்திரி சேர்.ஜோன்.கொத்தலாவல அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது . இவ் வித்தியாலயத்தின் முதல் அதிபராக திரு.கே.சிவகுருநாதன், மற்றும் முதல் ஆசிரியராக திருமதி சி.சிவகாமிப்பிள்ளை அவர்கள் கடமையாற்றினார். 03 ஆசிரியர்களும் 103 மாணவர்களும் கற்றல் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

1955 ஆம் ஆண்டு மாபெரும் கலை விழா நடைபெற்றதாக அறியக்கிடக்கின்றது. அது மட்டுமன்றி 1962, 1966ஆம் ஆண்டுகளில் பெற்றோர் தின விழாக்கள் நடந்தேறின. இடைக்காலத்தில் யாழ்/ இராமநாதபுரம் தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என மாற்றம் செய்யப்பட்டதாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

இவ் வித்தியாலயம் வரலாற்றில் 1978 ஆம் ஆண்டு பொற்காலம் என குறிப்பிடப்பட்டது இதற்கான காரணம் அக்காலத்தில் கடமையாற்றிய அதிபர் திரு.நா.பொன் சபாபதி அவர்கள் கிராமத்தில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று குடும்ப பின்னணிகளை கண்டு ஆராய்ந்து மாணவர்களை பாடசாலைக்கு அழைத்து வருதல், மற்றும் இருப்பிட வசதிகளையும் செய்து மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தார். 30ஆம் திகதி 07ஆம் மாதம் 1979ஆம் ஆண்டில் மண்டபம் சி, மண்டபம் டி , மண்டபம் இ ஆகியன அடிக்கல் நாட்டப்பட்டு பூரணமாக்கப்பட்டது .

11ஆம் திகதி 08ஆம் மாதம் 1976 ம் ஆண்டு முதலாவது மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. 1980ஆம் ஆண்டு மே மாதம் 6ம் திகதி யாழ்/ வட்டக்கச்சி மகா வித்தியாலயம் என தரம் உயர்த்தப்பட்டது. 02ஆம் திகதி 06ஆம் மாதம் 1978ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்ட உடற்பயிற்சி போட்டியில் 13 வயது பிரிவில் 4 இடங்கள் கிடைத்தது.

யாழ்/ வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் வட்டதீபம் இதழ்கள் 20ஆம் திகதி 02ஆம் மாதம் 1990ஆம் ஆண்டு இதழ் 01ம், 21ஆம் திகதி 02ஆம் மாதம் 1994 ஆம் ஆண்டு இதழ் 02ம் வெளியிடப்பட்டது அத்தோடு 15ஆம் திகதி 06ஆம் மாதம் 2014ஆம் ஆண்டு கிளி/ வட்டக்கச்சி மத்திய கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் இதழ் 03ஆனது 2014 ம் ஆண்டு காலப்பகுதியில் வெளியிடப்பட்டது. 12 ஆம் திகதி 07ஆம் மாதம் 2017ஆம் ஆண்டு வைர விழா மற்றும் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினர் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.