நிறுவனம்ːகிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் தருமபுரம்
முகவரி கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இலங்கை என்ற இனிய தீவில் பிரித்தானியரது பிரித்தாளும் சூழ்ச்சியினால் புரையோடிப் போன புற்றுநோயாக இன்றும் தொடர்ந்து செல்கின்றது. இப் பிரச்சனை அதன் அத்திவாரம் 1956 ஆம் ஆண்டில் உறுதியாக இடப் பட்டதனை தெடர்ந்து 1958 ஆம் ஆண்டு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் தமது பல்வேறு தேவைகளுக்காகவே குடியேறியும் பூர்வீகமாகவும் வட மத்திய, மத்திய மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இனக் கலவரத்தினால் வெகுவாக பாதிக்கப்பட்டுத். தமிழரின் தனித்தாயகமாம் வட பகுதி நோக்கி ஏதிலிகளாக வந்து சேர்ந்தனர். வந்தோரை வரவேற்கும் வன்னி, ஏதிலிகளாக்கப்பட்ட எம் உறவை அரவணைத்து தருமபுரம் என்னும் புதிய கிராமத்தை பரிசளித்தது. கல்வி நிலை பாதிக்கப்பட்டு எதிர்காலத்திற்காய் ஏங்கி நின்ற சின்னஞ்சிறார்களின் அறிவுப் பசி போக்க தருமபுரம் திடம் கொண்டது. அதன் வெளிப்பாடு தான் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திரு. முருகேசம் பிள்ளையின் முயற்சியும் சைவபரிபாலன சபை முகாமையாளராக இருந்த திரு. இராசரத்தினம் அவர்களின் உதவியும் கைகோர்த்தது. 1959.03.09 அன்று திரு. முருகேசம் பிள்ளை அவர்களால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு இன்று ஊரின் கண் ஒளியிட்டுக் கொண்டிருக்கும் கல்லூரியாகும்.

திரு க. விநாயக மூர்த்தி அவர்களை முதல் தலைமை ஆசிரியராகப் பெற்றுக் கொண்ட இப் பள்ளியானது 1958 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்டது முதல் தருமபுரம் இந்து வித்தியாலயம் என அழைக்கப்பட்டது. ஆனால் 1961.01.05 ஆம் திகதி இலங்கை அரசினால் இப் பாடசாலை சுவீகரிக்கப்பட்டதை அடுத்து தருமபுரம் இல 02 அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் 300 மாணவர்களுடனும் 07 ஆசிரியர்களுடனும் கீற்றுக் கொட்டகையில் இயங்கி வந்த பாடசாலை 1964 இல் திடீர் வீழ்ச்சிப் போக்கை சந்தித்து பின் படிப்படியாக நிலையுயர்ந்தது. 852 மாணவர்களுடனும் 52 ஆசிரியர்களுடனும் பல நிரந்தரக்கட்டடங்களுடனும் கிராமத்தின் மத்தியில் நிமிர்ந்து நிற்கின்றது. ஆரம்ப காலத்தில் இந்துப்பிள்ளைகள் மட்டுமே கல்வி கற்ற இந்து வித்தியாலயமாக இருந்த இவ் வித்தியாலயமானது 1968.01.04 ஆம் திகதி வரை தனித்து இயங்கி வந்த றோமன் கத்தோலிக்க கலவன் பாடசாலை ஆசிரியர் திரு. தே.சூசைநாயகம் ஆசிரியரையும் மாணவர்களையும் யாழ். மாவட்ட வித்தியாதிபதியின் பணிப்பிற்கு இணங்க தன்னுடன் இணைத்துக்கொண்டது.

பாடசாலை ஆரம்பம் தொடக்கம் இன்று வரை பல தலைமை ஆசிரியர்கள், அதிபர்களது வழி நடத்தலில் இயங்கி வரும் கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரியானது முன்னாள் அதிபர் அமரர் உயர்திரு. ஜோசப் அந்தோனிப்பிள்ளை அவர்களின் பதவிக்காலத்தில் 1986.09.04 ஆம் திகதியில் தரம் உயர்த்தப்பட்டதுடன் கிளி/ தருமபுரம் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப்பட்டது. இக்காலப்பகுதியான 1986.05.19 ஆம் திகதியில் இப்பாடசாலையில் க.பொ.த. (உ/த) கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டதுடன் 1987 ஆம் ஆண்டு வர்த்தகப்பிரிவும் தொடங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து திரு. சவரி பூலோகராஜா அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் க.பொ.த. (உ/த) கணித விஞ்ஞானப்பிரிவு 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2014 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) தொழினுட்பப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டு 2012.09.12 ஆம் திகதி தொடக்கம் 1AB (Supper) பாடசாலையாகத்தரமுயர்த்தப்பட்டு தற்போது கல்லூரியாகத் திகழ்கிறது.

இக்காலத்தில் உயர்தர மாணவர்களால் கலைச்சோலை என்ற பெயரில் ஒரு கையெழுத்துச்சஞ்சிகையும் தவணைக்கு ஒன்றாக வெளிவந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வந்தவர்கள் சோலையை சரியான முறையில் பராமரிக்காமையால் அதன் வளர்ச்சி தடைப்பட்டது. இது வேதனைக்குரிய ஒன்றாகும். மீண்டும் 2002 ஆம் ஆண்டைத்தொடர்ந்து உயர்தர மாணவர்கள் கலைச்சோலையைப் புனரமைத்து வருடத்திற்கு ஒரு சோலையை உருவாக்கி வருகின்றனர்.

இவ்வாறான வரலாற்றுப்பின்னணியுடன் வளர்ந்து வந்த இப்பாடசாலையின் வரலாற்றில் 1990.06.28 ஆம் நாள் ஒரு கரி நாளாக அமைந்தது.வழமை போல் பாடசாலை நடைபெற்றுக்கொண்டிருந்தது. வானத்தில் வட்டமிட்ட சரக்கு விமானம் ஒன்று பள்ளிச்சூழலில் நான்கு குண்டுகளை வீசிச்சென்றது. அதனால் கற்றலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நான்கு மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களில் 13 ஆம் தரத்தில் கற்றுக்கொண்டிருந்த செல்வி து. சந்திரவாணி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட அம் மாணவி தொடர்ந்து வந்த க.பொ.த (உ/த) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்று படிப்பை முடித்து தற்போது ஆசிரியராக கடைமையாற்றுவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் பாடசாலை செயற்பாடுகள் முற்றாக பாதிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வந்த நாட்களில் பரவலாக பள்ளிச் சுழலில் பல குண்டுகள் போடப்பட்டதன் காரணமாக இக் கிராமத்தின் மக்கள் பலர் அகதிகளாக எமது அயல் நாடான இந்தியா சென்றமை குறிப்பிடத்தக்கது.

குண்டுத் தாக்குதலால் சின்னா பின்னமாகிய பள்ளியில் பௌதீக வளத்தை எந்த விதமான அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியும் இன்றி புனரமைத்த பெருமை அன்றைய அதிபராகவும் பின்னர் கல்விப்பணிப்பாளராகவும் இருந்து வட மாகாணக் கல்வி அமைச்சராகவும் இருந்த மதிப்பிற்குரிய திரு. த. குருகுலராஜா அவர்களையே சாரும். இவ்வாறானதொரு அழிவினைச் சந்தித்த நிலையில் இக்கிராமத்தின் பெற்றோர்களும் பிள்ளைகளும் தொடர்ந்து முயற்சித்ததன் விளைவாக 60 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களையும் 15 இற்கும் மேற்பட்ட ஏனைய அரச துறை சார் உத்தியோகத்தர்களையும் 120 இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களையும் இவ் வித்தியாலயம் உருவாக்கியுள்ளது. இதனால் கூலித் தொழில் செய்வது குறைவாக உள்ளது.

மேலும் மாணவர்கள் கற்றல் செயற்பாடுகள் மாத்திரமின்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் தேசிய மட்டம் வரை சென்று வெற்றி பெறுவதை வரலாறு சொல்லும். எனவே ஆரம்ப நாள் முதல் இன்று வரை கற்றல் செயற்பாடுகளிலும் இணைபாட விதான செயற்பாடுகளிலும் தேசிய மட்டம் வரை சென்று வெற்றி பெறுவதை வரலாறு சொல்லும். எனவே ஆரம்ப நாள் முதல் இன்று வரை கற்றல் செயற்பாடுகளிலும் இணைபாட விதான செயற்பாடுகளிலும் மாவட்டத்தில் ஒரு தனித்துவத்தை இப் பாடசாலை பெற்று நிற்கிறது என்றால் அது மிகையாகாது. பல பட்டதாரிகளையும் சமூகத்தில் பல உயர் நிலையில் திகழும் பல நல்ல பழைய மாணவர்களையும் நற்பிரஜைகளையும் உருவாக்கியுள்ள இப்பாடசாலையானது தொடர்ந்து பல நற்பணியில் செவ்வனே செய்யும் என்பதில் ஐயமில்லை. இங்கு ஆசிரியர்களுக்கென கூட்டு விடுதியொன்று தற்போது நிர்மாணிக்கப்பட்டு அதில் 07 ஆசிரியர்கள் தங்கி நின்று சேவையாற்றுகிறார்கள். இப்பள்ளியை வளப்படுத்துவதற்கென அரசினர் 17 ஏக்கர் நிலத்தினை ஒதுக்கீடு செய்துள்ளனர். 1959.07.24 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானியில் இல 21(2) இது தொடர்பான யாழ்ப்பாணக்கச்சேரி 10 DSLDB 29 இன் படி 7 ஏக்கர் நிலமும் 1960.08.18 ஆம் திகதி DLO No 2332 கடிதத்தின் படி 10 ஏக்கர் காணியுமாக மொத்தம் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் 7 ஏக்கர் நிலமே பயன்படுத்தக் கூடியதாகவுள்ளது.