ஆளுமை:ஷகிலா, சதாசிவம்

From நூலகம்
Name ஷகிலா
Pages சதாசிவம்
Pages கமலேஸ்வரி
Birth 1970.03.29
Place சிலாவத்தை
Category ஊடகவியலாளர், நடிகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷகிலா, சதாசிவம் முல்லைத்தீவு சிலாவத்தையில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை சதாசிவம்; தாய் கமலேஸ்வரி. ஆரம்பக் கல்வியை முல்லைத்தீவு சிலாவத்தை இந்து வித்தியாலயத்தில் கல்வி கற்றார். பின்னர் புலமைப்பரிசில் சித்தியடைந்து இடைநிலைக் கல்வியை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்திலும் கற்றார். இவர் தனது 15ஆவது வயதிலேயே கல்விப் பொதுத்தர சாதாரணதர பரீட்சையை எழுதி தேர்ச்சி பெற்று உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தார். அத்துடன் இவர் படித்துக் கொண்டே முல்லைத்தீவு பாரதி அச்சகத்தில் தொழில்புரிந்து கொண்டிருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் யுத்தம் காரணமாக இவரின் தந்தை காயமடைந்துள்ளார். 1990ஆம் ஆண்டு அச்சகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது முல்லைத்தீவு விளம்பர சேவையொன்றில் இணைந்து கொண்டார். இச் சேவையின் இயக்குனராகவும் அறிவிப்பாளராகவும் விளம்பரச் சேவையில் இணைந்து கொண்டுள்ளார். 1990ஆம் ஆண்டு காலப்பகுதி இராணுவம் முல்லைத்தீவை ஆக்கிரமிக்கும் முனைப்புடன் இருந்த காலப் பகுதியாகும். இவ்வேளையில் முல்லைத்தீவில இருந்து இடம்பெயர்ந்து புதுக்குடியிருப்புக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தில் இணைந்து சமூகநலத் திட்ட இணைப்பாளராக இணைந்து கொண்டுள்ளார். அத்துடன் முன்பள்ளிகளையும் மேற்பார்வை செய்து வந்துள்ளார். செம்மலை நாயாற்றில் இருந்து அம்பலவன்பொக்கனை மாத்தளை வரை துவிச்சக்கரவண்டியின் ஊடாகவே இப்பிரதேசங்களுக்கு சென்று முன்பள்ளிகளை மேற்பார்வை செய்துள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு நடத்திய குயிலோசை வர்த்தக விளம்பரச் சேவையில் இணைந்து கொண்ட ஷகிலா தயாரிப்பாளர், அறிவிப்பாளர், தொகுப்பாளர் ஆகிய துறைகளில் தன் திறமைகளை வெளிப்படுத்தினார். இவரின் குரல் வளத்தை கேட்ட புலிகளின் குரல் வானொலிக்கு அதன் பணிப்பாளர் தமிழன்பன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 1991ஆம் ஆண்டு புலிகளின் குரல் வானொலியில் இணைந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் பகுதிநேர பணியாளராகவும் பின்னர் நிரந்தர பணியாளராக இணைந்துகொண்டார்.

புலிகளின் குரலில் ஆனந்தி எனும் புனைபெயரில் நிகழ்ச்சிகளை தயாரிப்பாளர், தொகுப்பாளர், செய்தியாளர், நாடகம், கவிதை, நாடகம் நடித்தல் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தினார். தமிழீழ வானொலி என்பது புலிகளின் குரலின் கிளை நிறுவனம் அது பின்நேரம் 2.00 மணியில் இருந்து 5.00 மணி வரை இயங்கி வந்ததது அவ்வானொலியில் செய்தி வாசித்ததுடன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உறவுப்பாலம் என்ற நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். இந்நிகழ்ச்சி களத்தில் உள்ள போராளிகள் தமது தாய்க்கு கடிதம் எழுதுவது அதேபோன்று களத்தில் உள்ள போராளிகளுக்கு அம்மாக்கள் கடிதம் எழுதுவதுமாக அந்நிகழ்ச்சி அமைந்தது. இந்த சமகாலப் பகுதியில் அதாவது 2003ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிகையில் முல்லைத்தீவு மாவட்ட செய்தியாளராக இணைந்துகொண்டுள்ளார். செய்தியாளராக இணைந்து கொண்டமை தனக்கு போராட்டக் காலத்திற்கு உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கின்றார் ஷகிலா. இது போராட்ட காலகட்டத்தில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து கொள்ள இது பெரிதும் உதவியதாகத் தெரிவிக்கின்றார்.

வானொலிக்கு செய்தி வழங்கி வந்த அதேவேளை பத்திரிகை ஊடாகவும் புகைப்படங்களை எடுத்து செய்தியாக பிரசுரித்து வந்துள்ளார். 2003ஆம் ஆண்டு பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதி வந்ததுடன் தன்னையும் வளர்த்துக்கொள்ளக்கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கின்றார். கிளிநொச்சியில் ஊடகக் கல்லூரியில் டிப்ளோவையும் முடித்துள்ளார். கிளிநொச்சி ஊடகக் கல்லூரிக்கு ராதை என்பவர் பொறுப்பாக இருந்தார். இங்கு விரிவுரைகளை இந்தியாவில் இருந்து வந்தும் விரிவுரைகளை வளவாளர்கள் நடத்தியதாகத் தெரிவிக்கின்றார் ஷகிலா.

தொடர்ந்து தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிந்து இணைந்து கொண்டுள்ளார். அதில் முல்லைத்தீவு மாவட்ட செய்தியாளராகவே இவர் இணைந்து கொண்டுள்ளார். இக்காலப் பகுதியில் செய்திகளை ஒலிஒளிப்பதிவாளராக செயற்பட்டு வந்ததோடு செய்திகளை கொடுப்பதை பிரதானமாகவும் செய்து வந்துள்ளார். சகல செய்திகளையும் ஒலிஒளிப்பதிவு செய்து கொடுத்து வந்துள்ளார்.இவ்வாறு வேலை செய்து கொண்டிருந்த வேளை 2008ஆம் ஆண்டு இறுதி யுத்தம் ஆரம்பித்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது இடப்பெயர்வுகள் இடம்பெற்றன. வட்டுவாகலுக்கு இவர் இடம்பெயர்ந்துள்ளார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் இருந்துகொண்டு செய்தி சேகரிப்பாளராக செய்திகள் வழங்கி வந்துள்ளார். புதுகுடியிருப்பு மகாவித்தியாலயத்தின் மீது குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது களத்தில் இருந்தே இறுதி யுத்தத்தின் பல சம்பவங்களை ஒலிஒளிப்பதிவு செய்ததாகத் தெரிவிக்கின்றார். புலிகளின் குரல் இரணைப்பாலையிலும், ஈழநாதம் தர்மபுரத்திலும் இயங்கி வந்தது. இடப்பெயர்வுகளின் போது உறவுகளை தவறவிட்டவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் உறவுப்பாலம் என்னும் நிகழ்ச்சியின் ஊடாக மேற்கொண்டுள்ளார். இறுதி யுத்தத்தின் வைத்தியசாலைகள் ஒன்றும் இயங்காத நிலையில் மாத்தளன் மகாவி்த்தியாலயத்தின் அதிபரின் அலுவலகத்தை சத்திரசிகிச்சை செய்யும் இடமாக மாற்றி காயமடைந்த மக்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றார்.

வலைஞர்மடம் பகுதியில் புலிகளின் குரல் இயங்கிக் கொண்டு இருந்த காலப்பகுதியில் இறுதி யுத்தத்தின் செய்திகள் சேகரித்து சர்வதேச ரீதியில் இறுதி யுத்தம் தொடர்பாக செய்திகள் கொண்டு சென்றதில் இவரின் பங்கும் அதிகம் என்கிறார் ஷகிலா. பலர் எரிகுண்டுத்தாக்குதலிலும் கொத்துக்குண்டுத் தாக்குதலிலும் காயமடைந்ததை கண்ணால் கண்டதாகவும் இது தொடர்பான செய்திகளை சர்வதேசத்திற்கு செய்தியாகக் கொடுத்தாகவும் தெரிவிக்கின்றார் ஷகிலா. 2009.04.22ஆம் திகதி மாத்தளன் அம்பலவன்பொக்கணைப் பகுதியில் இருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிகமான மக்கள் இராணுவ கட்டுபாட்டுப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்குள் வந்ததாகத் தெரிவிக்கின்றார். உணவுத் தட்டுப்பாடான நிலையில் ஒரு தேநீர் நூறு ரூபாவுக்கு விற்பனையாகியது. முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியிலேயே இடம்பெயர்ந்து இருந்த வேளையில் கப்பல் வந்து சென்றது இரண்டு முறை வந்தவேளையில் காயமடைந்தவர்கள் கொஞ்சம் பேரை ஏற்றி அனுப்பியதாகவும் பின்னர் கப்பல் வரவில்லை முள்ளிவாய்க்கால் மேற்குப் பாடசாலையான கனிஷ்ட உயர்தர பாடசாலையில் காயமடைந்த பொதுமக்கள் போராளிகளை பராமரித்துக்கொண்டிருந்த வேளையில் ஷெல் தாக்குதலில் அங்கிருந்த அரச வைத்தியர்கள் மற்றும் போராளி வைத்தியர்கள் இறந்துள்ளனர். அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் அதிபரின் அறையை சத்திரசிகிச்சைக் கூடமாக பாவிக்கப்பட்டது. இங்கு கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றன. கொத்துக்குண்டுகள் பாவிக்கப்பட்டன சரமாரியான ஷெல் தாக்குதலும் இடம்பெற்றது. விமான குண்டுத்தாக்குதலும் இடம்பெற்றதாகத் தெரிவிக்கின்றார். இந்த இடமும் ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியது. மீண்டும் இடம்பெயர்வு. இதிலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். இதன் பின்னர். கேப்பாபிலவு வட்டுவான் பகுதியில் டயர்களுக்கு காற்றடித்து ஆறு மற்றும் கடல் வாயிலாக தப்பிச் சென்ற வேளையில் இராணுவத்தின் துப்பாக்கிக்குண்டுகளுக்கும் மக்கள் இலக்காகினர். மீண்டும் இடம்பெயர்ந்து வட்டுவான் சென்ற போது அங்கும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. 2009.05.10 ஆம் திகதி அன்று இடம்பெற்ற ஷெல் அடியில் ஷகிலா காயமடைந்துள்ளார். இதனால் இவரின் இரண்டு கால்களும் தற்பொழுது இயங்காது.

2009.05.16ஆம் திகதி வட்டுவான் ஊடாக இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்ற வேளையில் இவரின் தாயும் காயமடைந்துள்ளார். தாயின் காயத்திற்கு பெண்கள் பாவிக்கும் கோட்டெக்ஸ் பாவித்து இரத்தத்தை கட்டுப்படுத்தியாகதாகத் தெரிவிக்கிறார். ஏற்கனவே இவரின் ஒன்றரை வருடம் தாதியர் பயிற்சி முடித்திருந்ததால் தனக்கு இந்த சந்தர்ப்பத்தில் அது பயன்பட்டதாகத் தெரவிக்கின்றார் ஷகிலா. 2009.05.17ஆம் திகதி முழுமையாகவே இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தாகத் தெரிவிக்கின்றார். பின்னர் குருணாகல் வைத்தியசாலையில் மருத்துவம் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கும் இவர் இங்கு பொதுமக்கள் போராளிகள் இரண்டாக பிரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றார். வைத்தியசாலையில் இருந்து வாடகைக்கு வீடொன்றுக்குச் சென்றதாகவும் பின்னர் பெண் ஒருவரின் காட்டிக் கொடுப்பின் ஊடாக இவர் கைது செய்யப்பட்டு வவுனியாச் சிறைச்சாலை, பூசா மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பின்னர் வவுனியா பூந்தோட்ட முகாமில் புனர்வாழ்வு பெற்று வெளியேறியுள்ளார். சுமார் இரண்டு வருடங்களோடு 20 இலட்சம் ரூபாவுக்கு மேலாக செலவழித்துள்ளதாக தெரிவிக்கின்றார். நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் போது சட்டத்தரணிக்கே இவ்வாறு செலவழித்துள்ளார். 2013ஆம் ஆண்டு மீள் குடியேறி சொந்த இடத்திற்கு வந்துள்ளார்.

2013ஆம் ஆண்டு சொந்த இடத்தில் வந்த பின்னர் ஊடகத்துறைசார் எந்தத் தொழிலையும் இவரால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. சமூக அங்கீகாரம் எதுவும் அற்றவர்களாக இருந்தவேளையில். ஐஓஎம் என்ற நிறுவனம் இவருக்கு யூஸ் தயாரிப்பதற்கான தேவையான பொருட்கள் வழங்கியுள்ளது. இதனை வைத்து சுயதொழில் செய்து கொண்டுள்ளார். இவர் காயமடைந்ததன் காரணமாக தற்பொழுது இவர் நடக்க முடியாதவராகவே காணப்படுகிறார். கதிரையில் இருந்த வண்ணம் தமது வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை பூர்த்தி செய்து போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கின்றார் ஷகிலா. மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினராகவும் தொடர்ந்து சேவையாற்றி வருகிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு ஷகிலா, சதாசிவம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.