ஆளுமை:பிறிம்மினி, விமலதாஸா

From நூலகம்
Name பிறிம்மினி
Birth
Place மட்டக்களப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பிறிம்மினி, விமலதாஸா மட்டக்களப்பில் பிறந்த நடன கலைஞர். சிறு வயதில் சாஸ்திரிய நடனமான பரதத்தினை ரஜி மோகனன், கமலா ஞானதாஸ், கனகசுந்தரம், ராஜகுமாரி ஆகியோரிடம் கற்றார். வட இலங்கை சங்கீத சபையினால் நடத்தப்பட்ட பரீட்சையில் தரம் ஐந்து வரை தோற்றி திறமைச் சித்தியும் பெற்றார். உயர் கல்வியை முடித்த பின்னர் இந்தியா சென்று உலகப் புகழ் பெற்ற சென்னை கலாஷேத்திரத்தில் இணைந்து பரதத்தினை முதல் பாடமாகவும் கர்நாடக சங்கீதத்தை இரண்டாம் பாடமாகவும் கற்று கலைப் பட்டதாரியானார்.

கலாஷேத்திரத்தில் கற்கும் போது நாட்டிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளார். கலைக்குழுவினருடன் இணைந்து இந்தியாவின் பல இடங்களில் நடந்த கலை நிகழ்வுகளிலும் பங்குபற்றினார். இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் இந்துக் கலாசார அமைச்சின் கீழ் மட்டக்களப்பு விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் பரத நாட்டிய விரிவுரையாளராக கடமையாற்றினார். அதேவேளை கிழக்கிலங்கை பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் பகுதி நேர வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

1995ஆம் அண்டு இங்கிலாந்துக்கு புலம் பெயர்ந்த ஆன் பிறிம்மினி விமலதாஸா தமிழ்ப் பாடசாலைகளுடன் இணைந்து புலம் பெயர்ந்த மாணவர்களுக்கு கலை கலாசார விழுமியங்களுடன் பரதக்கலையையும் கற்பித்தார். கலாலயம் எனும் கலைக்கூடம் மூலம் பரதத்தில் பல இளநிலைப் பட்டதாரிகளையும் முதுநிலைப் பட்டதாரிகைளையும் உருவாக்கியுள்ளார். கீழைத்தேய நுண்கலைப் பரீட்சை சபையில் (OFAAL) இணைந்து பரீட்சைச் சபையில் இணைந்த இவர் இந்தப் பரீட்சை ஸ்தாபனத்தின் பிரதம பரிசோதகர்களில் ஒருவராக பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று கடமையாற்றுகின்றார். அறிமுறை வினாத்தாள்களையும் பல பயிற்சிப்பட்டறைகளையும் நடத்தி வருகின்றார். அத்துடன் குச்சுப்புடி என்னும் சாஸ்திரிய நடனத்தை கீழைத்தேய நுண்கலைப் பரீட்சை சபை (OFAAL) பரீட்சை ஸ்தாபனத்துடன் இணைத்து அதற்குரிய பாடத்தினை வடிவமைத்ததில் பெரும் பங்காற்றிய பெருமைக்குரிவர். டென்மார்க், நோர்வே ஆகிய நாடுகளின் பரீட்சை ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றுகின்றார். இவர் இந் நிறுவனத்தின் நுண்கலை தமிழ்ப் பாடசாலையில் உதவித் தலைமை ஆசிரியராகவும், தமிழ்ப் பாடசாலையில் நுண்கலைப் பிரிவில் பொறுப்பாளராகவும் கடமையாற்றுகின்றார்.

விருதுகள்

நாட்டிய கலா விதூஷி – கீழைத்தேய நுண்கலைப் பரீட்சை சபை (OFAAL) 2018ஆம் ஆண்டு.