"ஆளுமை:இராசேஸ்வரன், நிஷாந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(வேறுபாடு ஏதுமில்லை)

00:54, 14 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

பெயர் நிஷாந்தன்
தந்தை இராசேஸ்வரன்
தாய் செல்வராணி
பிறப்பு 1993.10.13
ஊர் கிளிநொச்சி, இராமநாதபுரம்
வகை பல்துறைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசேஸ்வரன், நிஷாந்தன் (1993.10.13 - ) கிளிநொச்சி, இராமநாதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட பல்துறைக் கலைஞர். இவரது தந்தை இராசேஸ்வரன்; தாய் செல்வராணி. இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வியை கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயத்தில் கற்றுக் கொண்டார். பாடசாலையில் கல்வி கற்கும் போதே கலைத்துறையிலும், ஆன்மீகத்திலும் மிகுந்த ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவர். ஒரு எழுத்தாளனாக, பேச்சாளராக, நடிகராக, கவிஞராக என பல்வேறு கோணங்களில் இவரது ஆளுமை விரிவடைகின்றது.

தற்போது கிளிநொச்சி இராமநாதபுரம் மகாவித்தியாலத்தில் தமிழ்ப்பாட ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். அத்தோடு வட்டக்கச்சி ரங்கநாதப்பெருமாள் ஆலய அறநெறிப்பாடசாலை ஆசிரியராகவும் சேவையாற்றி வருகின்றார். இலங்கையில் இருந்து வெளிவருகின்ற பல்வேறு பத்திரிகைகளில் இவரால் எழுதப்பட்ட இலக்கியம் மற்றும் ஆன்மீகம் சார்ந்த 400 வரையான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

2012 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையும் இவரது எழுத்துப் பணி தொடர்கின்றது. 2019ம் ஆண்டு தரம் 10,11 மாணவர்களுக்காக தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற கல்வி சார்ந்த தமிழ் இலக்கிய வினா விடைத் தொகுப்பு எனும் நூல் ஒன்றினை வெளியிட்டிருந்தார். இவரால் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கலை இலக்கியம் சார்ந்த, கட்டுரைகளின் தொகுப்பாக அமைகின்ற கலைமுகை எனும் நூல் வெளியிடுவதற்கு ஆயத்தமான நிலையில் உள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

நிஷாந்தன் அவர்கள் ஆன்மீகச் சொற்பொழிவுகள், கதாப்பிரசங்கம் மற்றும் நேரடி வர்ணனைகள் என்பவற்றில் திறம்பட ஈடுபடக்கூடியவர். ஆலய மகோற்சவ காலங்களில் கதாப்பிரசங்கம் மற்றும் நேரடி வர்ணனைகள் என்பவற்றை திறம்பட ஆற்றும் திறன் படைத்தவர். முகப்புத்தகத்தில் காணப்படும் பல்வேறு கவிதைக் குழுமங்களில் நடைபெறும் கவிதை, கவியரங்கம், போன்ற போட்டிகளில் பங்குபற்றி இதுவரையும் நூறுக்கும் அதிகமான வெற்றிச்சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். நிஷாந்தன் அவர்கள் "நயம் பேசு" எனும் பெயரில் ஒரு YOUTUBE பக்கத்தை வைத்துள்ளார். அதில் மாணவர்களுக்கான கற்றலுக்கு உதவும் வகையிலான கற்பித்தல் வீடியோக்களை பதிவேற்றி வருகின்றார். தவிர "சந்தியடி" எனும் YOUTUBE பக்கத்தில் பதிவேற்றப்படும் பொழுதுபோக்கான நகைச்சுவை வீடியோக்களில் ஒரு நடிகராகவும் நிஷாந்தன் அவர்கள் இடம்பெற்றுள்ளார்.

நிஷாந்தன் அவர்களின் எழுத்துப் பயணத்தில் ஆற்றிய பங்களிப்பினை பாராட்டும் முகமாக அண்மையில் “கலாவிபூசணம்” எனும் உயர் விருது சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தது.