ஆளுமை:இராசலட்சுமி, சுப்பிரமணியம்

From நூலகம்
Name இராசலட்சுமி
Pages சுப்பிரமணியம்
Pages இராசம்மா
Birth 1954.09.05
Place மாமூலை
Category சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசலட்சுமி, சுப்பிரமணியம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமூலையில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் இராசம்மா. இவரின் தாய்வழி பேரனார் சரவணமுத்து (கதிர்காமு) பிரபல சோதிடர். அத்துடன் இவர் ஓர் அண்ணாவியாருமாவார், புராண படல வித்தகர், கூத்துக்கள், நாடக… கதை, தயாரிப்பு, நெறியாள்கை ஆகியவற்றில் பெயர் போனவர். இராசலட்சுமி, சுப்பிரமணியம் தண்ணீரூற்று இந்துக் கலவன் பாடசாலையில் கற்ற இவர் நான்காம் தரம் தொடக்கம் க.பொ.சாதாரணதரம் வரை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும் உயர் தரத்தினை யாழ் மருதனார் மடம் இராமநாதன் பெண்கள் கல்லூரியிலும் கற்றார். பாடசாலைக் காலத்தில் நடனம், நாடகம், பேச்சு, சமய நிகழ்வுகள், விளையாட்டுத்துறை, சங்கீதம், வில்லுப்பாட்டு, திருக்குறள் போட்டி, வலைப்பந்தாட்டம் என எல்லாவற்றிலும் கலந்துகொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். அத்துடன் இவர் யாழ் பல்கலைக்ழகத்தின் புவிவியல் சிறப்பு பட்டதாரியுமாவார்.

1971ஆம் ஆண்டு முல்லைத்தீவில் பாடசாலைக்கிடையில் நடைபெற்ற கலைவிழா நாடக சங்கீதப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்று தங்கப்பதக்கதையும் பெற்றுள்ளார். சாரணீயத்திலும் பொது வேலைகள் சமூக சேவைகளிலும் பங்கு பற்றி மக்களுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார்.

நாடக நடிகையான இவர் பாஞ்சாலி சபதம் நாட்டுக் கூத்திலும் சி.மௌனகுருவின் நெறியாள்கையில் மகாகவியின் புதியதொரு வீடு நாடகத்தில் பின்னணி பாடயாகியாக பாடியதுடன் சிதம்பரநாதன் அவர்களின் நெறியாள்கையில் மானிடன் என்ற நாடகத்திலும் நடித்துள்ளார்.

1975-1983ஆம் ஆண்டு வரை இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் மெல்லிசைப் பாடல்களை பாடி வந்துள்ளார். 2009ஆம் ஆண்டு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வவுனியா மாவட்டத்தில் உள்ள கந்தபுரம் வாணி வித்தியாலய முகாமிற்கு இவர் பொறுப்பாளராக இருந்து மக்கள் சேவை செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டு போரால் பாதிக்கப்பட்ட பெண்களின் நலன் கருதி சங்கமி பெண்கள் ஒன்றியம் அமைத்து அதனை பதிவு செய்து குடும்ப வன்முறை, பெண்கள் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிராக சட்ட உதவி, பாதுகாப்பு, வாழ்வாதாரம் மேம்படவும் தாபரிப்பு வழங்க வழிகாட்டியும் அடையாள ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மகஜர் கையளித்து பெண்கள் நலன் கருதி சேவைகள் செய்து வருகிறார். 2016ஆம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளராக இருந்து வருகிறார். மாமூலை மாதர் சங்க தலைவியாக 2011ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருகிறார். அத்துடன் பொலிஸ் திணைக்களத்தால் அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சிவில் பாதுகாப்பு மாமூலைக் குழுவில் இவரும் ஒரு அங்கத்தவராக இருந்து கிராமத்தில் நடைபெறும் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். மாவட்ட இன நல்லிணக்க அபிவிருத்திக் குழுவிலும் 2017ஆம் ஆண்டு தொடக்கம் அங்கத்தவராக இருந்து பல சேவைகளை செய்து வருகிறார். இவர் அகில இலங்கை சமாதான நீதவானுமாவார்.

கரைதுரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெண்கள், சிறுவர் நன்மை கருதி FOSDO, ZOA, நிறுவனங்களின் அனுசரணையில் (CIVIL SOCIAL NETWORK) சிவில் சமூச கட்டமைப்பு உருவாக்கி செயற்பட்டு வருகிறார். பாடசாலை செல்லாத பிள்ளைகள், இடை விலகிய பிள்ளைகள் ஆகியோரை இனங்கண்டு பாடசாலைக்குச் செல்ல வைத்தல், சிறுவர் கூலி வேலை செய்வதை தடுத்தல் , போதைப் பொருட் பாவனைக்குட்டவரை வைத்திய சிகிச்சைக்கு உடபடுத்தல், மதுவரித் திணைக்களத்துடன் இணைந்து இதனை சிவில் சமூச கட்டமைப்பு நிறுவனம் செய்து வருகின்றது. அத்துடன் நுண் கடனில் பாதிக்கப்பட் பெண்களை கடனில் இருந்து விலக்கமளித்தும் காப்பாற்றியும் இந்நிறுவனங்கள் ஊடாக செய்து வருகிறார்.

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பொது அமைப்புகளிலுள்ள மக்களால் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு என்ற அமைப்பு கடந்த வருடம் ஆரம்பித்து இதில் மாவட்டத்தின் அபிவிருத்தித் தொடர்பான கல்வி, சுகாதார, வாழ்வாதார, பெண்கள் நலன், சிறுவர் பாதுகாப்பு போன்ற சகல வியடங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை பெண்டினா அபிவிருத்தி சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து பெண்கள் தொடர்பான மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளை செய்து வருகிறார். இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், முல்லைத்தீவு கிளையில் 1991ஆம் ஆண்டு தொடக்கம் l-1990/50 ஆம் இலக்க ஆயுட்கால அங்கத்தவராக இருந்து வருகிறார். அனர்த்தங்கள் நடைபெறும் வேளையிலும், சமூக விழிப்புணர்வுக்கும் உரிய நேரத்தில் மனித நேயத்துடன் சேவைகள் செய்து வருகிறார்.

முல்லைத்தீவு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்திலும் பொது அமைப்பின் சார்பில் இருந்து வருகிறார். இணையத்தின் யாப்பு உருவாக்கும் மூவரில் இவரும் ஒருவர்.


விருதுகள்

கல்வி, கலாசார, சமய நடவடிக்கை, சமூகசேவை ஆற்றல் ஆகியவற்றை பாராட்டும் வகையில் 2017ஆம் ஆண்டு சாமஸ்ரீ விருது.

குறிப்பு : மேற்படி பதிவு இராசலட்சுமி, சுப்பிரமணியம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.